யானைகள் ஏன் ஊருக்குள் வருகின்றன?





‘‘இப்பல்லாம் ‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்’, ‘மதம் பிடித்த யானை பாகனை மிதித்தது’ன்னு செய்திகள் வர்றது வழக்கமா போச்சு. அதெல்லாம் ஏன் நடக்குதுன்னு நம்மில் பலரும் யோசிக்கறதில்லை. நான் அப்படி யோசிச்சதாலதான் இந்தத் துறையில் இருக்கேன். படிச்சு முடிச்சு சொகுசா ஏ.சி ரூமில் உட்கார்ந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கணும்னு எனக்கு ஆசையில்ல. காடுதான் எனக்கு ஏ.சி ரூம்!’’ - மன நிறைவோடு பேசும் அறிவழகன், ஒரு வனவிலங்கு ஆராய்ச்சியாளர். கடந்த பதினைந்து வருடங்களாக இந்தியா முழுவதுமுள்ள காடுகளில் அலைந்து யானைகளைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். ‘யானைகள்...’ எனப் பேச்செடுத்தாலே ஆர்வம் பெருக்கெடுக்கிறது இவர் பேச்சில்...

‘‘விலங்குகளிலேயே யானைகளைத்தான் ‘ஜென்டில் அண்ட் ஜயண்ட்’ என்று சொல்வார்கள். அவ்வளவு பெரிய உருவம் மட்டும் புலி, சிங்கத்துக்கு இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தன் உருவத்துக்கு ஏற்ற அகங்காரமோ, மூர்க்கமோ இல்லாத சாதுவான விலங்கு யானை. ஆனால், இந்தக் குணத்தையே சாதகமாக்கிக் கொண்டு நாம் அதை என்ன பாடு படுத்துகிறோம்! கோயிலில் இருந்து சர்க்கஸ் வரை நாய்க்குட்டி மாதிரி பழக்குகிறோம். புல்டோசரும் லாரியும் இல்லாத காலகட்டத்தில் அந்த வேலைகளை இங்கே யானைகள்தான் செய்தன. யானைத் தந்தத்தில் கத்தியைக் கட்டி, அவற்றை போர் வீரர்களாகவே பழக்கிய வரலாறு நமக்கு உண்டு. ஆனால், அதே யானை இன்றைக்கு நம் ஊருக்குள் புகுந்து நம்மைக் கொல்கிறதென்றால், காரணம் நாம்தான்!’’ - சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தித் தொடர்கிறார் அறிவழகன்.



‘‘வட இந்தியாவில் ஒரு யானைக் கூட்டத்துக்கு ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களுக்கு மேல் வாழிடம் தேவைப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவில் ஒரு யானைக் கூட்டத்துக்கு சுமார் அறுநூறிலிருந்து எண்ணூறு சதுர கிலோ மீட்டரே போதும். அவற்றின் தேவைகள் எல்லாம் அதற்குள் நிறைவேறி விடுகின்றன. அதைக் கூட நம்மால் கொடுக்க முடியவில்லை. காடுகளை ஒட்டி பழங்குடிகளுக்கான பட்டா நிலங்கள் இருக்கின்றன. இதைப் பெரிய நிறுவனங்கள் வாங்கி ஓட்டல், ரிசார்ட், ஸ்கூல், காலேஜ் எனப் பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டிவிடுகிறார்கள். அந்தப் பக்கம் மனித நடமாட்டம் பெருகி விடுகிறது. அதனால்தான் மறு கரையில் யானைகள் தங்களின் ஆட்சியை விரிவுபடுத்த நினைக்கின்றன.

ஒரு காலத்தில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு, அழிந்து வரும் உயிரினப் பட்டியலிலேயே யானை சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அரசின் முயற்சியால அதெல்லாம் ஒழிக்கப்பட்டு யானைகள் பெருகியுள்ளன. இப்போதைக்கு ஆசியாவிலேயே யானைகள் வசிக்க சிறந்த இடம் தென் இந்தியாதான் என்கிறார்கள். காரணம், இங்கு யானைகளுக்குக் கிடைக்கிற வாழிட சூழ்நிலை அபரிமிதமானது. கர்நாடகாவில பனார்கட்டா, காவேரி வைல்ட் லைஃப், பி.ஆர்.டி, பந்திப்பூர், மைசூர் மாதிரியான இடங்களும், தமிழ்நாட்டின் ஓசூர், தர்மபுரி, சத்தியமங்கலம், முதுமலை, நீலகிரி வடக்கு, நீலகிரி தெற்குப் பிரதேசமும் கேரளாவின் வயநாடும் சேர்ந்து பின்னிப் பிணைந்த ஏரியா இது. 



பொதுவாக யானைகளும் நம்மைப் போல ஒரே இடத்தில் வாழத்தான் விரும்பும். உணவுக்காகவும், நீருக்காகவும், தட்பவெப்பத்துக்காகவும்தான் நகரும். எந்த சீசனில் எந்த இடத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பது யானைகளுக்கு அத்துப்படி. நினைத்தபடி அது கிடைக்காதபோதுதான் அவை ஊருக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்துவிடுகின்றன’’ என்கிற அறிவழகன், யானைக்கு மதம் பிடித்தால், பழகியவரையே கொன்றுவிடும் என்பதையும் மறுக்கிறார்.

‘‘பழக்கப்படுத்திய யானைகள் சுற்றி இருப்போரை மிதித்துத் தள்ளுவது மதம் பிடித்ததால் அல்ல. காட்டின் புல் தரையில் சந்தோஷமாக இரை தேடிய அவற்றை சுட்டெரிக்கும் வெயிலிலும், தார் ரோட்டிலும் நடக்க வைக்கிறார்கள். அங்குசத்தை வைத்து பின் பக்கம் குத்துகிறார்கள். இதுதான் அவற்றின் கோபத்தை கிளறச் செய்கிறது. பொதுவாக பெண் மயிலைக் கவர, ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போலத்தான் யானைக்கு மதம் பிடிப்பதும். இந்தக் காலங்களில் பெண் யானையைக் கவர்வதற்காக ஆண் யானைகளுக்குள் ஏற்படும் போட்டியின்போது அவை கொஞ்சம் வீராப்புடன் நடந்துகொள்ளும். அவ்வளவு தான்!

யானைக்கு நினைவுத் திறன் அதிகம் என்பது மட்டும் உண்மைதான். ஆனால், அதைக் கொண்டு அது மனிதர்களை நினைவில் வைத்து பழிவாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. காட்டில் வழி தெரிந்து நடக்கவும் உணவு தேடவும்தான் இந்த ஞாபக சக்தி உதவும். யானைகளுக்குக் கண் பார்வை மிகக் குறைவு. அதை ஈடுகட்டத்தான், துல்லியமான கேட்கும் திறனும் நினைவுத் திறனும் அமையப் பெற்றிருக்கிறது.



டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த பிரமாண்ட மிருகங்கள் எல்லாம் மறைந்து போக, யானை மட்டும் இன்று வரை பிழைத்து உயிர் வாழ்வதற்கு அதன் உள்ளுணர்வும் ஒரு காரணம். உதாரணத்துக்கு யானைகள் தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் தங்கள் குடும்பத்துக்குள் இனப்பெருக்கம் செய்வதில்லை. பெண் யானை தனது ஆண் குட்டிகள் ஓரளவு பெரிதானதுமே அவற்றை விரட்டி விடுகின்றன. சொந்தத்திலேயே இனப்பெருக்கம் செய்து எடை குறைவான ஊனமான சந்ததிகளை உருவாக்குவது இதனால் குறைகிறது. இன்று நம் முதுமலையில் யானைக் கூட்டங்கள் ஆரோக்கியமாக உலவ இதுவும் ஒரு காரணம்!’’ என்கிற அன்பழகன், தற்போது சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். வைல்ட் லைஃப் ஜுவாலஜி என்ற படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்த வித்தியாச‘மாணவர்’ இவர்.

‘‘என்னுடைய முதுகலைப் படிப்பில் கள ஆய்வு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் நீலகிரி மற்றும் ஈரோடு எல்லைப் பகுதியிலிருந்த தெங்குமரஹட்டா எனும் பழங்குடி கிராமத்தில் ஒரு சிறுத்தை ஆறு பேரை கொன்றது பரபரப்புச் செய்தியாக இருந்தது. அந்த ஊருக்கு நேரடியாகவே சென்று கள ஆய்வு செய்தேன். அந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்த்த ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்னை வேலைக்குக் கூப்பிட்டது. அங்கு சுகுமார் என்ற பேராசிரியர் யானைகள் பற்றிய ஆராய்ச்சியில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் மூலமாகத்தான் என் கவனம் யானைகள் பக்கம் திரும்பியது’’ என்கிற அறிவழகனிடம் யானைகளின் தாக்குதலைத் தவிர்க்கவும் டிப்ஸ் உள்ளது.



‘‘இரவில் தீ வைத்து அவற்றை விரட்டுவதும், தப்புகள் அடித்து விரட்டுவதும் சரியானதுதான். ஆனால் விரட்டிய கொஞ்சநேரத்தில் அவை மீண்டும் அதே இடத்துக்குத்தான் வரவேண்டியிருக்கும். இதற்காகத்தான் யானைகள் சாப்பிடாத பயிர்களான பருத்தி, சணல் போன்றவற்றை விவசாயம் செய்யச் சொல்கிறோம். அரசாங்கமும் காடுகள் சார்ந்த வசிப்பிடங்கள் நகரமயமாவதை தடுத்து, யானைகளை இயல்பாக வாழச் செய்ய வேண்டும். மற்றபடி யானைகளின் உணவுக்கு இடைஞ்சலாக தனி மனிதர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஒரே வழி, ஓடுவதுதான். யானைகள் மனிதனை விட வேகமாக ஓடக் கூடியது என்றாலும், அதிகபட்சம் நூறு மீட்டர் வரைதான் அவற்றால் தொடர்ச்சியாக ஓட முடியும். அந்த தூரத்தைத் தாண்டிவிட்டால் ஆபத்தில்லை’’ என்கிறார்
அறிவழகன்.
- டி.ரஞ்சித்
படங்கள்: கே.ரமேஷ்