ஆர்யா பாவம்... : பூஜா ஃபீலிங்





நீண்ட... இடைவேளைக்குப் பிறகு சென்னையில் தரிசனம் கொடுத்தார் பூஜா. ‘“ஹாய் அண்ணா, எப்படி இருக்கீங்க..?’’ என்று நலம் விசாரிப்பவரிடம் குறையாமல் இருக்கிறது அதே அன்பும் அழகும்.

அடிக்கடி காணாமப் போயிடுறீங்களே?
‘‘இலங்கையில் இருக்கற பாட்டி வீட்டில்தான் இத்தனை நாளும் இருந்தேன். பெங்களூருவுக்கு மட்டும் நடுவுல வருவேன். இடையில் ‘குஷா பவா’ங்கற ஸ்ரீலங்கா படத்தில் நடிச்சேன். ராஜா காலத்துக் கதை. 150 நாட்கள் சூப்பரா ஓடியது. ஷூட்டிங், படத்துக்கான புரமோஷன் என்று ஒரு வருஷத்துக்கு மேல அங்கேயே இருக்க வேண்டியதாப் போச்சு. திடீர்னு பாட்டி வேற இறந்துட்டாங்க. அதனால தாத்தாவுக்கு துணையா இருந்தேன்...’’

‘நான் கடவுளி’ல் நல்ல பெயர் கிடைத்தும் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியலையே?
‘‘அப்படி நடிச்சுட்டு, அதுக்கப்புறம் சராசரி ரோல்கள் பண்ணா நல்லா இருக்குமா? பாலா சாருக்கும் சீமான் அண்ணனுக்கும் பெருமை சேர்க்கிற மாதிரியான கேரக்டர் கிடைச்சா மட்டும் நடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துலதான் ‘விடியும் முன்’ கதையை இயக்குனர் பாலாஜி குமார் சொன்னார். இயக்குனர் புஷ்கர்தான் ‘அழுத்தமான கேரக்டர்’னு எனக்கு ரெக்கமண்ட் பண்ணினார். 4 ஆண்கள், 2 பெண்களைச் சுற்றி நடக்கிற கதை. படத்தில் ஹீரோ இல்லை. கதைதான் ஹீரோ. என்னோட மாளவிகான்னு ஒரு குட்டிப் பொண்ணு நடிச்சிருக்கா. அவ எனக்கு மகளா, தங்கையா,
ஃபிரண்டா.. படத்துல பாருங்க’’



உங்களுக்கே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கறதா செய்திவந்துச்சே?
‘‘நானும் கேள்விப்பட்டேன். பெங்களூருவுல ஐ.டி கம்பெனியில் வேலை செய்யறதாகூட எழுதியிருந்தாங்க. எல்லாமே சுத்தப் பொய். கல்யாணம்ங்கறது வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான விஷயம்! ஒரு நடிகைங்கறதால இப்படி நினைச்சதை எல்லாம் எழுதலாமா? எல்லாருக்கும் உணர்ச்சிகள் இருக்கு. விளையாட்டுத்தனமா எதையாவது எழுதி யாரோட மனசும் புண்பட வைக்கக்கூடாதுங்கறதுதான் என் வேண்டுகோள். பெங்களூருவில, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. அதில் தன்னார்வலராக இரண்டு மாசம் வேலை செய்தேன். அவ்வளவுதான்! மற்றபடி பிளாஸ்டிக்கிற்கும் ஐ.டி ஃபீல்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சொல்லுங்க?’’

ஆர்யாவுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நட்பு?
‘‘ம்... எப்பவும் போலவே இப்பவும் ஸ்ட்ராங்காவே இருக்கு. சென்னை வந்தா ஆர்யா, பரத், ஜீவா, விஷால், ஸ்ரேயா, சோனியா அகர்வால்னு எல்லார்கிட்டேயும் பேசுவேன். மாசுபட்ட இந்த உலகத்திலே நம்மளோட ஆயுசு அதிகபட்சம் அறுபது அல்லது எழுபது வயசுதான். அதுக்குள்ள எவ்வளவு பாஸிட்டிவ் எனர்ஜியோட இருக்கணுமோ, அப்படி வாழ்க்கையை மாத்திக்கணும். நட்பு போல ஒரு நல்லுறவு கிடையாது.’’

உங்களுக்கு ஆர்யா சிபாரிசு செய்யலையா?
‘‘ஏன் அவர் சிபாரிசு செய்யணும்? நான் அவரோட சிபாரிசை எதிர்பார்க்கவும் இல்லை. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ட்ரீம் ரோல் என்ற ஆசையைக்கூட என் மனசுக்குள்ள நான் வச்சிக்கிறது இல்ல. இன்னிக்கு உயிரோடு இருக்கிற நாம நாளைக்கு இருப்போமான்னு தெரியாதப்போ, எதுக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் வளர்த்துக்கணும். ஒரு கதையில, ஆர்யா ஜோடியா பூஜா நடிச்சா நல்லாயிருக்கும்னு இயக்குனர்தானே முடிவு செய்யணும். ஆர்யா எப்படி ‘பூஜாவை நடிக்க வைங்க’ன்னு சொல்ல முடியும். அவரோட வேலையில் அவர் கரெக்டா இருக்கார்.’’  

ஆர்யா பத்தி நிறைய கிசுகிசு வர்றதை கவனிக்கறீங்களா?
‘‘இங்க என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியலை. சிலபேர் எனக்கு போன் பண்ணி, ‘ஆர்யா இப்படியெல்லாம் பண்றாரே’ன்னு கேட்பாங்க. ‘எங்கிட்ட ஏன் இதை கேட்குறீங்க? ஆர்யாகிட்டயே பேசுங்க’ன்னு சொல்லிடுவேன். ஆர்யா பாவம்ங்க... வெரி நைஸ் பாய்! ஆர்யாவையும் என்னையும் இணைச்சுத்தான் ஆரம்பத்தில் கிசுகிசு வந்துச்சு. அப்புறம் அவர்கூட நடிக்கிற எல்லா நடிகைகளோடயும் இணைச்சு கிசுகிசு வர ஆரம்பிச்சது. இப்போ அனுஷ்கா, நயன்தாரான்னு கிசுகிசு நின்ன மாதிரி தெரியல. அவர் யார்கூட நடிச்சாலும் செட் ஆகிடுவார். ரொம்ப ஜாலியான டைப்; வெளிப்படையான ஆளு. அதனாலதான் ஆர்யா பத்தி இவ்வளவு நியூஸ் வருதுன்னு நினைக்கிறேன்!’’
- அமலன்