கடைசி பக்கம் : நிதர்ஸனா





புதிதாகத் திருமணமான தம்பதி அவர்கள். வார இறுதி நாட்களில் வீட்டில் சமையல் இல்லை. நகரின் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் சென்று சாப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்த வாரம் நகரில் புதிதாக சைனீஸ் ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டிருப்பது கேள்விப்பட்டு போனார்கள். இதற்குமுன் அவர்கள் சீன உணவுகளை ருசி பார்த்ததில்லை. ஒரு ஆர்வத்தில் உள்ளே நுழைந்தார்கள்.

கிட்டத்தட்ட சீனாவுக்குள் வந்துவிட்டது போன்ற உணர்வு. சுவர்களில் சீன எழுத்துகளில் ஏதேதோ எழுதியிருந்தது. மெனு கார்டில்கூட சீன மொழியிலும் ஆங்கிலத்திலும்தான் அயிட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. பெயரைப் பார்த்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கிருந்த வெயிட்டர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை. கஷ்டப்பட்டு ஆர்டர் கொடுத்தார்கள்.

உணவு வரும்வரை இருவரும் ஹோட்டலை நோட்டமிட்டார்கள். அதில் மனைவிக்கு எம்பிராய்டரியில் ஆர்வம் அதிகம். டேபிளில் அடுக்கியிருந்த பாத்திரங்களில் இருந்த சீன சித்திர எழுத்துகளை ரசித்த அவள், அதை தனது ஸ்மார்ட் போனில் படம் பிடித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் கணவனுக்கும் தனக்கும் இரண்டு டி-ஷர்ட்கள் வாங்கிய அவள், அவற்றில் இந்த எழுத்துகளை எம்பிராய்டரி செய்தாள். அடுத்த முறை அந்த ஹோட்டலுக்கு இந்த ஷர்ட்டில் இருவரும் வந்தார்கள். வெயிட்டர்களும் ஹோட்டல் பணியாளர்களும் அவர்களைப் பார்த்து விநோதமாக சிரிப்பது போல தெரிந்தது. சாப்பிட வந்த கூட்டத்தில் இருந்த ஒரு தமிழ்ப்பெண்ணும் சிரித்தாள்.

‘‘எல்லோரும் ஏன் சிரிக்கறாங்க?’’ என அவளிடம் போய் விசாரித்தாள். ‘‘இது அழகா இருக்கு. ஆனா அர்த்தம் தெரியுமா?’’ என டி-ஷர்ட் வாசகத்தைக் காட்டி அவள் கேட்டதும் பதில் வந்தது... ‘‘இது சைனா டவுன் ஹோட்டலில் திருடப்பட்டதுன்னு அர்த்தம்!’’
அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்!