செலக்ஷன் : பா.வெங்கடேஷ்





அந்த பிரபல நகைக்கடைக்குள் நுழைந்த சுந்தரை ஆச்சரியத்துடன் பின்தொடர்ந்தான் மேனேஜர் பாபு. “ஆபீசுக்கு போன் பண்ணி நான் மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிடுங்க’’ என்று பாபுவுக்கு கட்டளையிட்டபடி, வைர நகைகள் பகுதிக்கு வந்தான்.

‘‘உட்காருங்க சார்’’ என்று உபசரித்தான், அங்கிருந்த விற்பனையாளர் தினேஷ். சுந்தர் ஒவ்வொரு நகையாக அலசிப் பார்த்தபடி கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தான் தினேஷ். ‘‘இவ்வளவு மாடல்தான் இருக்கா... எதுவுமே பிடிக்கலையே?’’ என்று சுந்தர் உதட்டைப் பிதுக்க, தினேஷுக்கு வந்த வியாபாரத்தை விட மனமில்லை.

‘‘சார், எங்க கடையில எல்லாமே லேட்டஸ்ட் மாடல் நகைங்கதான். இன்னும் கொஞ்சம் வெரைட்டி பாருங்க’’ என அடுத்தடுத்த அடுக்குகளிலிருந்து எடுத்துக் காட்டினான். ‘‘இது உங்களுக்குப் பிடிக்கும்’’ என ஒரு நெக்லஸை எடுத்தும் கொடுத்தான். ‘‘வேற கடை பாக்கலாம் பாபு’’ என்று எழுந்தான் சுந்தர். ‘‘சார், எங்க கடை ராசியான கடை. இன்னும் புது டிசைன்லாம் வருது. இப்ப நேரமில்லைன்னா பொறுமையா வாங்க சார்’’ என்று புன்சிரிப்புடன் அவர்களை அனுப்பினான் தினேஷ். 

வெளியே வந்த சுந்தர் தன் செல்போனை எடுத்து, ‘‘அப்பா, உங்க செலக்ஷன் சரிதான். அந்த தினேஷையே நாம ஆரம்பிக்கற நகைக்கடைக்கு மேனேஜரா போட்டுடலாம்’’ என்றான்.