வேலைக்குப் போகாதீர்கள்! : உங்களைத் தேடி வேலை வரும்





சிந்திப்பதுதான் மிகக் கடினமான வேலை; அதனால்தான் மிகச் சிலரே அந்த வேலையைச் செய்கிறார்கள்!
- ஹென்றி ஃபோர்டு

உங்களது பணி வாழ்க்கையும், நாட்களும் அதற்கேற்ற இன்ப - துன்பங்களோடு சென்று கொண்டிருக்கின்றன. பணிக்கு வருகிறீர்கள்... வேலை செய்கிறீர்கள்... பிரச்னைகளை சரி செய்கிறீர்கள்... பிரச்னைகளால் துவள்கிறீர்கள்... பிரச்னைகளால் பாடம் கற்கிறீர்கள்... வீடு திரும்புகிறீர்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சக பணியாளர்கள், மேல் அதிகாரி, கீழ் அதிகாரி, கடை நிலை அதிகாரி... எல்லோரும் உங்களை நன்றாகவே நடத்துகிறார்கள். காலையில் எழுந்தால் வேலைக்குப் போகிற எண்ணம் இனிப்பாகவே இருக்கிறது.

என்றாலும், குறை ஏற்படக்கூடாது என்று இல்லையே! ஏற்படத்தான் செய்யும். வேலையில் நாம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், வாழ்க்கையை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்தும், அவ்வப்போது ஒரு மெல்லிய சோகம் மனதுள் நிகழும். மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பது மாதிரியும், நாம் மட்டும் எதையோ பறி கொடுத்தது போல் வாழ்கிறோம் என்பது போலவும் எண்ணங்கள் ஓடும். ‘எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, எங்காவது ஓடி விட்டால் என்ன?’ என்று தோன்றும்.



இதற்குக் காரணம் என்ன? எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகவும், பெரிய அளவில் மாற்றம் இன்றியும் ஒரேமாதிரி திரும்பத் திரும்ப செய்யும்போது ஒரு கட்டத்தில் இதுபோல் சலிப்பு ஏற்படும். ஒரே மாதிரியாக நகர்கிற நாட்கள் இவ்வுணர்வைக் கூட்ட வல்லவை.

ஆனால் யோசித்துப் பார்த்தால் நாட்களின் மீதோ, உலகத்தின் மீதோ பழிபோட ஏதுமில்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, வெறும் கண்ணால் தெருவைப் பார்த்தால் நேற்று பார்த்த அதே தெருதான். ஆனால், உணர்ச்சிவசப்படாமல், சற்றே அறிவுக்கு வேலை கொடுத்தால், நீங்கள் பார்ப்பது நேற்று பார்த்த அதே தெரு அல்ல என்பது புரியும்.

நேற்று பார்த்த வாகனங்கள் இன்றில்லை... மனிதர்கள் இல்லை... இந்த 8.30க்கு இந்தச் சிறுவர்கள் நேற்று உங்களைக் கடக்கவில்லை... என்பதை உணர்வீர்கள். ஆக, ஒவ்வொரு தினமும் முற்றிலும் புதியவை. முன் எப்போதுமே இருந்திராதவை. அவ்வளவு ஏன், நேற்றிருந்த நீங்கள் இன்றைய நீங்கள் ஆகமாட்டீர்கள். இந்தப் புரிதலுடன் நீங்கள் உங்கள் பணி இடத்தைப் பார்த்தால், உங்கள் பணி இடம் தினமும் புதிய இடமாகத் தெரியும்.

இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உலகில் சலிப்பில்லாத வாழ்வு சாத்தியம் இல்லை. மெதுவடை சுடுகிற வேலையிலிருந்து, மென்பொருள் ஆராய்ச்சி வரை... விமான நிலைய வேலை முதல் விடலைத் தேங்காய் பொறுக்கும் வேலை வரை சலிப்பு ஏற்பட்டே தீரும். ஒரு விதத்தில் இது நல்லதற்கே. எல்லாம் ஒரே மாதிரி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்டு விடும். ஆனால், சலிப்பான மன நிலையில் நீங்கள் செய்த வேலையில் தவறு ஏற்பட்டால், நீங்கள்தான் பொறுப்பு ஏற்றாக வேண்டும். எனவே நீங்கள் சலிப்பின் பிடியிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுபட்டாக வேண்டும்.



அதற்கு சில எளிய வழிகள்...
1) நீங்கள் தினமும் டூ வீலரில் வருகிறவர் என்றால், வாரத்தில் இரண்டு நாள் பஸ்ஸில் வாருங்கள். நடந்து வர முடிந்தால் நடந்து வாருங்கள்.
2) ஒரே பாதையில் வராதீர்கள். சற்று தூரமாக இருந்தாலும் வேறு பாதையில் வாருங்கள்.
3) சுற்றுலா செல்லுங்கள். அதிலும் பாட்டி வீடு, மாமனார் வீடு என்று ஒரே பாதையைத் தேய்க்காதீர்கள்.
4) ஒரே ஸ்டைலில் வேலை பார்க்காமல் மாற்றிச் செய்யுங்கள். உங்கள் மேஜை, நாற்காலியை மாற்றிப் போடுங்கள்.
5) தினமும் லிஃப்ட்டில் போகாமல் ஒரு நாள் படிக்கட்டில் ஏறுங்கள்.
6) பழைய நண்பர்களைத் தேடிச் சென்று பாருங்கள்.
7) அபத்தமாக எதையாவது செய்து பாருங்கள்.
இப்படி சின்னச் சின்ன மாற்றங்கள்கூட நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். வழக்கமாக இருக்கிற தினங்களை வழக்கமாக இல்லாத மாதிரி கூடிய வரை பார்த்துக்கொண்டால் நீங்கள் எப்போதும் புத்துணர்வோடு இருப்பீர்கள். இயற்கையைப் பாருங்கள்... கோடை, மழை, பனி, குளிர் என்று தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இதிலிருந்து பாடம் படியுங்கள்... உயிர்ப்புடன் இருங்கள்!

இந்தப் பணி இடத்தில் உங்களுக்கு பெரிய அளவில் ஒரு குறையும் இல்லை. இங்கே உள்ள சூழல், சக பணியாளர்கள், மேனேஜர், சம்பளம் என எல்லா அம்சங்களும் திருப்தியாக இருப்பதால், நிம்மதியாக இருக்கிறீர்கள்.

என்றாலும் இந்தத் திருப்தி, வசதி எதுவுமே இறுதி எல்லை அல்ல. இந்த இடத்தில் நீங்கள் வளர்ச்சி பெற இன்னும் எதுவும் இல்லை என்றாலோ, இங்கு பெற்ற அனுபவங்களை வைத்துக் கொண்டு இன்னொரு இடத்திற்குச் சென்றால் இதை விட இன்னும் வளர வாய்ப்பு உண்டு என்றாலோ, அங்கே சென்று விடுவதுதான் புத்திசாலித்தனமானது. அனுபவங்கள் கிடைப்பது அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறத்தானே தவிர, ‘‘எனக்கு இருக்கிற எக்ஸ்பீரியன்ஸுக்கு நான் எங்க இருக்கணும் தெரியுமா?’’ என்று புலம்புவதற்கல்ல.

நிறைய பேரின் முன்னேற்றத்திற்கு முக்கிய எதிரியே, அவர்களின் தேவைக்கு அதிகமான அனுபவங்கள்தான். உங்கள் அனுபவங்கள் உங்களை முன்னேற்றப் பயன்படவில்லை என்றால், அவை இருந்தும் எவ்விதப் பயனும் இல்லை. தேங்கிப் போவதற்கா உங்கள் அனுபவங்கள் பயன்பட வேண்டும்? நகர்ந்து கொண்டிருந்தால்தானே அதற்குப் பெயர் நதி? சாக்கடைகள்தானே தேங்கிப் போகும்?

இங்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக பாதுகாப்பு, பாதுகாப்பு என்று யோசித்துக்கொண்டே இருந்தால், மெல்ல மெல்ல பாதுகாப்பற்ற நிலைக்குச் சென்று விடுவீர்கள். இந்த உலகில் நூறு சதவீதப் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. எல்லாமே நீங்கள் நினைத்துக் கொள்வதுதான்.

இந்த விஷயத்தில் நிறைய பேர் நினைத்துப் புழுங்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ‘இந்த இடத்தில் இவ்வளவு நாள் வேலை பார்த்து திறமையை வளர்த்துக்கொண்டோம். இங்கிருந்து செல்வது இந்த இடத்திற்கு நாம் செய்யும் துரோகம் ஆகிவிடாதா?’ என்பதே. நீங்கள் என்ன இந்த இடத்திலிருந்து பணத்தையும், ரகசிய டாக்குமென்டுகளையும் திருடிக் கொண்டா செல்கிறீர்கள்? விசுவாசம், நன்றி உணர்வு... போன்ற வார்த்தைகளையும் உங்கள் வளர்ச்சியையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

நாம் வாழ்க்கையை நடத்திச் செல்ல ஒரு வேலை தேவை. பணி இடத்திற்கு ஒரு ஊழியர் தேவை. அதற்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறோம். எனவே, எல்லா உணர்வுகளும் அளவோடு இருக்கட்டும். தொழில் கற்றுத் தந்த இடத்தின் மீது மரியாதை உணர்வு இருந்தால் போதுமானது. அதை வெளிக்காட்டும் விதமாக, ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க வேண்டியதில்லை. இவற்றை கருத்தில் கொண்டு, நல்ல வாய்ப்புகள் வந்தால் முன்னேறுங்கள். முன்னேறியவர்கள் எல்லோரும் எல்லா உணர்வுகளையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பதை உணருங்கள்!

வேறு இடத்திற்குச் சென்றாலும் பழைய இடத்தை நேசியுங்கள். உங்கள் உதவி தேவைப்பட்டால் செய்து கொடுங்கள். இப்படித்தான் உங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமே தவிர, அங்கேயே சிறைப்பட்டு அல்ல!

புதிய இடம் துவக்கத்தில் சிரமத்தையே தரும். அப்போது பழைய பணி இடத்தில் நீங்கள் முதலில் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். எப்படி அதை எல்லாம் தாண்டி அங்கே முக்கியமான இடத்தைப் பிடித்தீர்களோ, அதேபோல் இங்கும் ஒரு இடத்தை உங்கள் அனுபவத்தால் அடைவீர்கள். தேவை எல்லாம், கொஞ்சம் பொறுமையும் நிதானமும் நம்பிக்கையும் மட்டுமே.

முன்னேறுவது என்பது சரியான நேரத்தில் முடிவெடுப்பதுதான். பணியிலும், அதன் மூலம் வாழ்விலும் முன்னேற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது இது.
(வேலை வரும்...)