மூளையை சுறுசுறுப்பாக்குது தோப்புக்கரண யோகா!





சரியாக காலை 8 மணி. சென்னை அரும்பாக்கத்திலுள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவ - மாணவிகள் தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தனர். என்ன தவறுக்காக இந்தத் தண்டனை?
‘‘அட, இது தண்டனை இல்லங்க. இதான் ‘சூப்பர் பிரைன் யோகா’ பயிற்சி!’’ - பளிச் சிரிப்போடு பதில் தருகிறார் யோகா மருத்துவ நிபுணரான கனிமொழி. ‘‘அப்படின்னா..?’’

‘‘முதல்ல இப்படி நேரா நின்னுக்கோங்க. அப்பறம் உங்க இடது கையை வலது காதுமடல்ல வைங்க. அடுத்து வலது கையை இடது காது மடல்ல வைங்க. இப்ப அப்படியே மூச்ச இழுத்துக்கிட்டே உட்காருங்க. பிறகு மறுபடியும் மூச்சு விட்டுக்கிட்டே எழுந்திருங்க. அவ்வளவுதான் ‘சூப்பர் பிரைன் யோகா’. டெய்லி மூணு நிமிஷம் செய்தா எப்பவும் உடல்ல புத்துணர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கும்...’’
‘‘ஆனா மேடம், இதுக்குப் பேரு தோப்புக்கரணம்தானே..?’’

‘‘ஆமாங்க... நம்மூர்ல தப்புக்கு தர்ற தண்டனையத்தான் வெளிநாடுகள்ல ‘சூப்பர் பிரைன் யோகா’ன்னு சொல்லி கொண்டாடுறாங்க. இது அமெரிக்காவில இப்ப வைரஸ் மாதிரி பரவிட்டு இருக்கு. அதனால நல்ல பலன்களும் தெரியுது. நம்ம முன்னோர்கள் சொன்னதை நாம மட்டும் ஏன் விட்டு வைக்கணும்னுதான் இப்ப எங்க மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் 30 நாட்கள் இந்த ஆசனத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’ என்கிற கனிமொழி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.



‘‘ஸ்கூல்ல தண்டனையாவும் விநாயகர் கோயில்ல பிரார்த்தனையாவும் எவ்வளவோ தடவை தோப்புக்கரணம் போட்டிருப்போம். ஆனா, இது மனசுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சின்னு யாருக்குமே தெரியறதில்ல. நம்ம மூளையில் வலது, இடதுன்னு ரெண்டு பகுதிகள் இருக்கு. இதுல சில பகுதிகள் மந்தமா செயல்படும். இந்த சூப்பர் பிரைன் யோகா மூலம் அதை ஆக்டிவ்வா செயல்பட வைக்க முடியும். இதனால மெமரி பவர் அதிகரிச்சு புத்துணர்ச்சி ஏற்படும்.

அதோடு, உட்கார்ந்தும் எழுந்தும் நாம் உடலை இயக்கும்போது, உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் செயல்பட ஆரம்பிக்கும். இதனால உடம்பெல்லாம் சுறுசுறுப்பாகும். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ப்ரானிக் ஹீலிங்’ மாஸ்டரான ‘சோ கோக் சூயி’ (நீலீஷீணீ ளீஷீளீ suவீ) என்பவர் முதன்முதலில் இந்த சூப்பர் பிரைன் யோகாவைக் கண்டுபிடிச்சார். பின்னர், அமெரிக்க சிறுநீரகவியல் மருத்துவர் எரிக், இந்த யோகாவை முன்னெடுத்துக் கொண்டு போனார். இப்ப உலகம் பூராவும் இது பரவிடுச்சு.

இந்த யோகாவை சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவர்கள் வரை யாரும் செய்யலாம். ஒரு சின்ன இடம் போதும். வயிற்றை மட்டும் காலியா வச்சுக்கணும். ஆட்டிஸம் உள்ள குழந்தைங்க செய்தா ஹைப்பர் ஆக்டிவிட்டி குறையும். கொஞ்சம் சோம்பலா இருக்கிற குழந்தைங்க செய்யும்போது சுறுசுறுப்பு கூடும். தூக்கமில்லாமல் தவிக்கிறவங்க பண்ணும்போது நல்லா தூக்கம் வரும். சுவாசத்தை சீராக்கி உடலை சமநிலையில் வைக்கிறதுதான் இந்த ஆசனத்தோட சிம்பிள் கான்செப்ட்.



பொதுவா நம்மளோட சுவாசம் ஒரு நிமிஷத்திற்கு 16 முதல் 18 வரை இருக்கும். யோகா பண்ணறவங்களுக்கு 14 முறை சுவாசம் இருக்கும். மூணு நிமிஷத்துல 42 தடவை இந்த ஆசனத்தைச் செய்யும்போது உடலின் சக்தி அதிகரிக்கும். சுவாசமும் பேலன்ஸாகும். இன்னிக்கு பல நோய்களோட ஆரம்பப் புள்ளியா மலச்சிக்கல் இருக்கு. இந்த யோகா மூலமா அந்த மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. ஆனால் மற்ற நேரங்களில் இந்தப் பயிற்சியைச் செய்தால், பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை சீராகும். அதிக உதிரப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

மொத்தத்தில் தண்டனையா நினைக்காமல், ஆரோக்கிய ரகசியமா நினைச்சு, இந்த ‘சூப்பர் பிரைன் யோகா’வை எல்லோருமே வீட்டில் தினமும் செய்றது நல்லது. குறிப்பா, வயதானவர்கள் செய்தால் கணுக்கால் தசைகள் வலுப்பெற்று ரத்த ஓட்டம் சீராகும்’’ என டிப்ஸ்கள் தந்து முடிக்கிறார் கனிமொழி.

நமக்கென்னவோ... இறந்ததாக நினைக்கப்பட்ட ஹீரோ, வெளிநாட்டில் காப்பாற்றப்பட்டு, ஆளே மாறி திரும்பி வந்தது போல இருக்கிறது ‘தோப்புக்கரண யோகா’வைப் பார்த்தால்!  
- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்