நிழல்களோடு பேசுவோம்



வேண்டாத கர்ப்பத்தின் விபரீதங்கள்



இந்திய சமூகத்தில் பெண்களுக்கு பல கொடுங்கனவுகள் இருக்கின்றன. அவற்றில் மிக மோசமானது, வேண்டாத கர்ப்பம். சமீபத்தில் வெளிவந்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம், வேண்டாத கர்ப்பம் அல்லது வேண்டாத குழந்தைகள் தொடர்பாக என்ன மதிப்பீடுகளை உருவாக்குகிறது என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நிர்ப்பந்தம், பொறுப்பு, குற்ற உணர்வு என பல ஆழமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இது.

கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், தனது காதலனுடனான தற்செயலான உறவில் எதிர்பாராத கர்ப்பத்தை அடைகிறாள். யாருக்கும் தெரியாமல் கருவைக் கலைக்கும் முயற்சியில் தோல்வியடைகிறாள். இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கும்போது, பையனின் குடும்பம் அதை ஏற்க மறுக்கிறது. இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான தகராறில், ஒரு கட்டத்தில் இருவருமே தங்களுக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வெறுத்தபடி பிரிந்து போகிறார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று குழந்தை பிறக்கும்வரை காத்திருக்கிறார்கள். பிறந்ததும் அந்தக் குழந்தை அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறது.

படத்தில் மூன்று முடிவுகள் காட்டப்படுகின்றன. ஒன்று, அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் மகிழ்ச்சியான திருமணம் நடக்கிறது. இரண்டு, அந்தப் பையன் வேறொரு பெண்ணுடன் ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறான். மூன்று, அனாதை விடுதியில் சேர்க்கப்பட்ட குழந்தை தனியாக தூங்கிக்கொண்டிருக்கிறது. அதன் பரிதாபநிலையை விளக்கும் பாடல் படத்தின் இறுதியில் ஒலிக்கிறது. குழந்தையின் பரிதாபமான அலறலுடன் படம் முடிகிறது.

சமீபத்தில் நான் பார்த்த தமிழ்ப்படங்களில் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் எடுக்கப்பட்ட படங்களில் இது ஒன்று. இன்றைய தலைமுறையினர் காதலையும், அதன் விளைவாகிய நெருக்கடிகளையும் சந்திக்கும் விதத்தை வெகு எதார்த்தமாகச் சித்தரிக்க முயன்றதற்காக சுசீந்திரன் பாராட்டப்பட வேண்டியவர். திருமணம் அல்லாத உறவில் கர்ப்பமடையும் ஒரு பெண், அதற்குக் காரணமானவனையே போராடி திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அல்லது சமூகத்தின் அவமானத்தை சுமக்க வேண்டும்; அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற வழக்கமான சினிமா பார்வைகளைக் கடந்து இந்தப் படம் எதார்த்தத்தில் இன்றைய மனிதர்கள் இதை எப்படிக் கடந்து செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இரண்டு மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு கர்ப்பம் நிபந்தனையாகவோ நிர்ப்பந்தமாகவோ இருக்க முடியாது. குறிப்பாக இது பெண்களின் மிகப்பெரிய அவலம். இயற்கை அவர்களுக்குக் கொடுத்த பரிசை தண்டனையாக மாற்றும் அவலம். விஞ்ஞான ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இந்த வரலாற்று அவலத்தைக் கடந்து செல்லும் முழுமையான சந்தர்ப்பத்தையும் மன வலிமையையும் நமது பெண்களுக்கு அளிக்க வேண்டும்.

அந்தப் பையனும் அந்தப் பெண்ணும் இந்தக் குழப்பங்களுக்குப் பிறகு அவரவர் பாதையில் செல்வதை இயல்பாகக் காட்டும் இயக்குனர், அந்தக் குழந்தையின் நிலையைக் காட்டும் விதத்தில் இதுவரை தான் சொன்ன கதையை சென்டிமென்ட் சேற்றில் தலை குப்புற கவிழ்த்துவிடுகிறார். பார்வையாளர்களின் முழுக் கவனமும் அந்தக் குழந்தையின் மீது குவிக்கப்படுகிறது. காதலித்து குழந்தை பெற்று அனாதை விடுதியில் அந்த குழந்தையை தவிக்க விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதுதான் படம் முடிந்து வெளியே வரும் பார்வையாளர்களின் எண்ணம். சமீபத்தில் தமிழகத்தில் நடந்து வரும் காதலுக்கு எதிரான பிரசாரங்களுக்கு இந்தப் படம் ஒரு உளவியல் நியாயத்தை வழங்குகிறது. மற்றவர்கள் அவர்களது சந்தோஷமான வாழ்க்கைக்குத் திரும்புவது போல, ஏன் அந்தக் குழந்தைக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவைத் தரக்கூடாது? அந்தக் குழந்தை தத்து எடுக்கப்பட்டு எங்கோ மகிழ்ச்சியாக வளர்வது போன்ற ஒரு முடிவும் எதார்த்தம்தானே? ஏன் அதை இயக்குனர் வைக்க மறுக்கிறார்?

உல்லாசத்தையும் சுயநலத்தையும் தவிர இன்றைய இளைஞர்களிடம் எந்தப் பொறுப்பும் இல்லை என்கிற பொத்தாம்பொதுவான பார்வையையே இந்தப் படம் திரும்பவும் வலியுறுத்துகிறது. வழக்கமான ஒழுக்கவியல் பார்வைகளின் எல்லைகளைத் தாண்டி நாம் எதையுமே பார்க்க மறுக்கிறோம். ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு வருவது சம்பந்தப்பட்டவர்களின் முழு விருப்பத்தோடு நிகழ வேண்டிய ஒன்று. அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு எல்லா நியாயமும் கிடைக்கும். ஆனால் கருக்கலைப்பு அல்லது ஒரு குழந்தையை அனாதை விடுதியில் கைவிடுவதை ஒரு குற்ற மனப்பான்மையாக மட்டும் கருதுவதோ, அதைப் பற்றிய வெறும் குற்ற உணர்வை ஏற்படுத்துவதோ இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள உதவாது. பெண் சிசு என்று தெரிந்து அபார்ஷன் செய்துகொள்ளும் கிரிமினல்களைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. ஒரு குழந்தைக்குப் பொறுப்பேற்க முடியாத சமூகச் சூழலில் என்ன செய்வது என்பதுதான் இங்கு பிரச்னை.

ஒரு குழந்தையை கருவில் அழிப்பதோ அல்லது கைவிடுவதோ மிகப்பெரிய உளவியல் துயரம். ஆனால் அதை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் மனிதர்களின் துயரம் அதைவிடக் கொடுமையானது. வாழ்நாளெல்லாம் அது ஆறாத காயமாக மிஞ்சிவிடுகிறது. திருமணம் ஆகாதவர்கள், எதிர்பாராத கர்ப்பத்தில் சிக்கிக்கொள்வது ஒரு விபத்து. தற்செயலாக நடக்கும் உறவுகள் சார்ந்து ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் இவ்வளவு கொடூரமானதாக மாற்ற வேண்டுமா? சமூக மரபுகளும், மதச் சட்டங்களும் கருக்கலைப்பிற்கு எதிரானதாகவே இருந்திருக்கின்றன. சமூகத்திற்குப் பயந்து முறையற்ற கருக்கலைப்பு செய்து, லட்சக்கணக்கான பெண்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். மக்கள்தொகை பெருக்கம் ஒரு உலகளாவிய பிரச்னையாக மாறிய பிறகு, கருக்கலைப்பை அங்கீகரிக்கவும் சட்டபூர்வமாக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் பல நாடுகளுக்கு ஏற்பட்டது. மருத்துவக் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் தனி நபர் உரிமை சார்ந்தும் கருக்கலைப்புகள் ஏற்கப்பட்டன. இங்கிலாந்து 1967ம் ஆண்டிலும், அமெரிக்கா 1973ம் ஆண்டிலும், சிங்கப்பூர் அதற்கு அடுத்த ஆண்டிலும் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளன. இந்தியா 1971ல் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது. ஆனால் இந்தியாவில் இன்றும் திருமணமாகாத ஒருவர் கருக்கலைப்பு செய்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு ரகசியக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கிறார்கள்.

திருமணம் அல்லாத உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாதபோது, சமூகமும் ஒட்டுமொத்த மனித குலமுமே அதற்குப் பொறுப்பேற்பது இயற்கையான நீதி. ஆனால் திருமணமாகாத உறவில் ஒருவர் கர்ப்பம் அடைந்தால், ஒட்டுமொத்த சமூகமும் அவரை ஏன் வேட்டையாட வேண்டும் என்றுதான் புரியவில்லை.

அயர்லாந்தில் வசித்த இந்திய வம்சாவளி பெண் டாக்டர் சவீதா ஹாலப்பானவர் மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருந்தும், கத்தோலிக்க நாடான அங்கு கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்பதால் இறந்துபோன சம்பவம் உலகையே அதிர வைத்தது. இங்கு அத்தகைய மதரீதியான சட்டங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைவிட கொடூரமான ஒழுக்க விதிகளின் சட்டங்கள் செயல்படுகின்றன. கால மாற்றம் ஆண் - பெண் உறவுகளுக்கான நிபந்தனைகளை நெகிழ்வாக்கியிருக்கிறது. திருமணம்கூட ஒரு நிரந்தர ஏற்பாடல்ல. பொருந்தாத திருமணங்களை தூக்கியெறிந்துவிட்டு, மனப்பூர்வமாக வெளியேறும் ஒரு இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலில் காதல், குழந்தை என்பதையெல்லாம் அதன் பண்பாட்டு அதிகாரங்களிலிருந்து விடுவித்து, மனிதர்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு உகந்தவிதமாக நாம் ஏற்க வேண்டும். இளைஞர்களை பொறுக்கிகளாக, சீரழிந்தவர்களாக மட்டும் புரிந்துகொண்டு இந்தப் பிரச்னையைக் கையாள நினைப்பவர்கள், மனித வாழ்க்கையின் சிக்கலான சந்தர்ப்பங்களைப் பற்றிய எந்த உணர்வுமற்ற மூடர்கள் என்றுதான் கூற வேண்டும்.
(பேசலாம்...)

நெஞ்சில் நின்ற வரிகள்



காதலை மகத்தான ஒரு பிரார்த்தனையாக ஏ.எம்.ராஜா இந்தப் பாடலில் மாற்றுவது போல யாராவது மாற்ற முடியுமா? உண்மையில் அது நெஞ்சை உருக்கும் பிரார்த்தனை. அது ஒரு காற்றைப் போல நம் இதயத்தில் நிரம்புகிறது. எஸ்.ஜானகி, ராஜாவின் குரலை தனது குரலால் மேலும் கரைத்து ஒரு நீரோடையாக மாற்றி விடுகிறார்...

காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே என்று எழும் வாக்கியங்கள் காலம், வெளி இரண்டையும் நிறைத்து, எல்லாமுமாக வியாபிக்கிறது. ‘தேன் நிலவு’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் வைஜயந்திமாலாவும் ஜெமினி கணேசனும் ஒரு காவிய கால ஏக்கத்தை விதைக்கின்றனர். ஒருபோதும் இருந்திராத... ஆனால், இருந்துவிடக் கூடாதா என்று நாம் ஏங்கும் காலம் அது.

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

திருமணத்திற்குப் பிறகு நடிக்க வரும் நடிகைகள் பற்றி?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
ஏன், திருமணமானால் நடிப்பு மறந்து விடுமா? என்னய்யா கேள்வி இது?

திருப்பதி, காளஹஸ்தி போன்ற பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?
- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ஏற்கனவே தமிழகத்தை மூன்றாக உடைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை முதலில் கவனிப்போம்
‘தலைவா’ படம்?
- வி.கார்மேகம், தேவகோட்டை.

கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?
நாத்திகர்கள் காதலித்தாலும் அது தெய்வீகக் காதல்தானா?
- கி.ரவிக்குமார், நெய்வேலி

காதலிப்பதே கடைசியில் தெய்வ நம்பிக்கையை இழந்து நாத்திகர்கள் ஆவதற்குத்தானே!
ஒரு கட்சிக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் தேவை?
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி

தலைவர் அமைதி காக்க வேண்டும் என்று சொன்னால் கல்லெடுத்து எறிய வேண்டும். தியாகம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் தீ வைத்துக்கொண்டு சாக வேண்டும்.

(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப் பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email: editor kungumam.co.in)

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்


https://www.facebook.com/suresh.kannan.1806?hc_location=stream
சுரேஷ் கண்ணன் தனக்கென சுயமான பார்வைகளை தனது பதிவுகளில் முன் வைப்பவர். அவரது சமீபத்திய ஒரு பதிவு:
‘‘பீகாரில் ரயில் மோதி சுமார் 40 நபர்கள் இறந்ததும் இன்னும் பலர் காயமடைந்ததும் மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம். இதற்கு முழுக்க முழுக்க பொதுமக்களின் அறியாமையும் அலட்சியமுமே காரணம். குறிப்பிட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில், தமாராகாட் நிலையத்தில் நின்று செல்வதற்கான முகாந்திரம் இல்லாதபோது, பொதுமக்கள் கும்பலுக்கே உரிய அலட்சிய மனோபாவத்துடனும் துணிச்சலுடனும் அந்த இடத்தைக் கடந்து சென்றுள்ளனர். வளைவில் வந்துள்ள ரயில் டிரைவர் இதை எதிர்பாராததால் அவசர பிரேக்குகளைப் போட்டும் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

ரயில் பாதையைக் கடப்பது உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்றும் அது தண்டனைக்கு உரியது என்றும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு விளம்பரமும் காணப்படுகிறது. இருந்தாலும், நடைமுறையில் இந்த எச்சரிக்கைகளை பொதுமக்கள் மதிப்பதில்லை. தண்டவாளத்தைக் கடப்பதற்கான பாதுகாப்பான வழிகள் இருந்தாலும், சோம்பேறித்தனத்தால் மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடந்து உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தண்டவாளத்தைக் கடப்பதற்கு வேறு வழியில்லை என்று சொல்லப்படுகிறது. சாலைவழியாகக் கடக்க அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நடைமுறைச் சிக்கலை உணர்ந்து கொண்டாலும், அந்த இடத்தில் பொதுமக்கள்தான் மிகக் கவனமாக தண்டவாளத்தைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் தம்முடைய சுய குற்றத்தை உணராமல், ரயில் டிரைவரை அடித்தும் ரயில் பெட்டிகளைக் கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.’’