நானும் இப்போ தமிழ் டைரக்டர்!





‘‘ ‘தாதா படம்’ என்பது கோடம்பாக்க டிக்ஷனரியில் ரொம்ப பழைய வார்த்தையாகிப் போச்சு! ஆனால் என்னோட படம், ‘நான்தான்டா’ அந்த வகையில்லை. இது ஆக்ஷன் படம்தான்... ஆனா, ரத்தம், சத்தம், துரோகம், குரோதம்னு வாழ்ற மனுஷங்களுக்குள்ளே ஒளிஞ்சு கிடக்கிற வேறு உலகத்தை ஒரு ஆல்பம் மாதிரி புரட்டிக் காட்டப் போறேன். ‘நான்தான்டா’வுக்கு முன்மாதிரி எதுவும் இல்லை’’ - டப்பிங் தியேட்டரின் குறைந்த வெளிச்சத்தில் சில்லிடும் குளிர்காற்றில் தலை கோதிப் பேசுகிறார் ராம் கோபால் வர்மா. இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குநர்.
‘‘என்ன திடீர்னு தமிழ் பக்கம் வந்திட்டிங்க..?’’

‘‘தமிழ் எப்பவும் பிடிக்கும். இந்திய சினிமாவில் எப்பவும் தமிழ் சினிமாவிற்கு தனித்த இடம் இருக்கே. மறுக்க முடியுமா? என் பிரியத்திற்குரிய நண்பர் தேவி ஸ்ரீதேவி சதீஷ். அவர் தயாரிக்கறேன்னு சொன்னதும்தான் சம்மதித்தேன். எவ்வளவோ நல்ல படங்கள் செய்திருக்கேன். அந்தக் கணத்தில் சந்தோஷமா இருக்கும். அடுத்த நிமிஷம் வேற வேலை பார்க்கப் போயிடுவேன். இப்ப எனக்கு ‘நான்தான்டா’ படம்தான் முக்கியம். சமீபகாலத்தில் நான் வெகுவாக உழைச்சிருக்கிற படம் இது.

மும்பையில் தாவூத் இப்ராகிம் பாருங்க... பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறது நல்லாவே தெரியுது. அவனது நடமாட்டங்கள் தெளிவா புரியுது. கிட்டப்போனால் எந்த கேஸுக்கும் ஆதாரம் இருக்காது. அது அப்படித்தான். ஏன், எப்படின்னு கேள்வி கேட்க அங்கே இடமிருக்காது. அது மாதிரி ஒரு தினுசான ஒருத்தனைப் பத்தின கதை. எனக்கு இந்த சர்வானந்த் பிடிக்குது. சிரிச்சுக்கிட்டே அபூர்வமாக வேலை பார்க்கிற பையன். கூடவே அனங்கா, அலிஷான்னு  ஹீரோயின்கள். அதிரடி, அட்டகாசம், செம ஜாலினு பாலத்தில எக்ஸ்பிரஸ் மாதிரி திடுதிடுனு பறக்கும். முதன்முதலா சென்னையைச் சுத்திச் சுத்தி படம் எடுக்கிறது புது அனுபவம். நிதித், ஸ்ரீ, தர்ஷன்னு மூணு மியூசிக் டைரக்டர்களை இந்தப் படத்தில் அறிமுகம் செய்றேன்.’’



‘‘எப்பவும் கேங்ஸ்டர் படம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுறீங்களே... ஏன்?’’
‘‘அது நம்ம ஏரியா. இறங்கிப் போய் அதில் நிறைய விஷயங்கள் பிடிச்சிருக்கேன். ரௌடி, தாதானு கற்பனை பண்ணி வச்சிருக்கிற மாதிரியெல்லாம் அவங்க இல்லை. எப்பவும் அவர்களோடது தனி உலகம். மத்தவங்க பயம்தான் அவங்க பலம். கொஞ்சம் அசந்து தூங்கக் கூட பயம். எப்பவும் அவங்க கண்ணில நாலு நாள் தூக்கம் மிச்சமிருக்கும். அவங்களுக்கு வாழ்க்கை மட்டுமில்லை, சாவுகூட எப்படி எந்த நேரத்தில் வரும்னு தெரியாது. அதெல்லாம் பெரும்புதிர். எதிர் ரவுடி கும்பல்தான் போட்டுத் தள்ளுவான்னு கிடையாது... என்கவுன்ட்டர்ங்கிற பேரில அதை போலீஸே செய்யும். அவங்ககிட்டே பழிக்குப் பழி வாங்குறதுன்னு ஒரு லிஸ்ட் இருந்துக்கிட்டே இருக்கும். முப்பது வருஷம் கழிச்சுக்கூட எங்கேயிருந்தோ ஒரு வில்லன் வந்து சேருவான்.

பொதுவா கேங்ஸ்டர்ஸ்கிட்ட திட்டமிடல் படு ஷார்ப்பா இருக்கும். ஐந்தாண்டுத் திட்டம்கூட கவர்மென்ட்டால் அப்படிப் போட முடியாது. ஒரு ‘அசைன்மென்ட்’ கிடைச்சா, அதுக்காக போடுற ஸ்கெட்ச் படு விவரமா இருக்கும். ஒரு ஆளோட போக்குவரத்து அனைத்தையும் பக்காவா கணிச்சு புரிஞ்சு வச்சிருவாங்க. ‘ஆபரேஷன்’ ரெடியாகிட்டா அவ்வளவுதான். படுபயங்கரமான டீம் வொர்க். இப்படி சொல்லிட்டே போகலாம். அவ்வளவு சுவாரஸ்யம் வழியும். அந்த உலகத்தைப் புரிஞ்சு பல படங்கள் செய்திருக்கேன். அதில் இதுவும் ஒரு வகை.’’

‘‘எப்பவும் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க அமிதாப் ரெடியா இருக்காரே...’’
‘‘அப்படி ஒரு மனசு. என்மேல் அபரிமிதமான நம்பிக்கை. ‘சர்க்கார்’ கேரக்டரை அவர் எப்பவும் எங்கேயும் சொல்லி பெருமைப்பட்டுக்குவார். இன்னும் சொன்னால், அபிஷேக்கைவிட சார் கால்ஷீட் எப்பவும் ஃபுல். இத்தனை வயசிலும் இன்னும் ஒண்ணும் பண்ணலைன்னு நினைக்கிற அடக்கம்தான் அவரோட வெற்றி ரகசியம். அவருக்குன்னு கதை அமைஞ்சால்தான் அவர்கிட்டே போவேன்.’’
‘‘தமிழில் யாரை ரொம்பப் பிடிக்கும்?’’

‘‘கமல், ரஜினியெல்லாம் சாதாரண ஆட்களா! அவங்ககிட்ட தெரிஞ்சுக்க வேண்டியதே ரொம்ப இருக்கே. இந்தத் தடவை கமலோட பிறந்தநாளுக்கு ஸ்பெஷலா மும்பையிலிருந்து பறந்து வந்தேன். நமக்கெல்லாம் அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். ரஜினி என்னிக்கும் என்கூட  ஒட்டுதலா இருப்பார். எங்கே வேலையில் இருந்தாலும் தமிழ்நாட்டை எந்த விதத்திலாவது தொட்டுப் பார்த்துக்கிட்டே இருப்பேன். நல்ல டைரக்டர்கள் இங்கே அநேகம். இப்ப கமல், ரஜினி மாதிரியானவர்களை பெரிய அடையாளமா வச்சிருப்பதே நமக்கெல்லாம் பெருமை. இனிமே நானும் தமிழ் டைரக்டர்னு சொல்லிக்குவேன். அதுகூட எனக்கு சந்தோஷம்தான்.’’
- நா.கதிர்வேலன்
படம்: புதூர் சரவணன்