பொலிடிகல் பீட்





காங்கிரஸில் ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அதை எல்லோரும் கேட்பார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் எங்கேயாவது எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவது சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க, ‘‘எல்லோரும் இஷ்டத்துக்கு கருத்து சொல்லக்கூடாது’’ என சமீபத்தில் கட்டளை போட்டார் ராகுல். இப்போது முன்னாள் அமைச்சர் அஜய் மக்கான் தலைமையில் ஒரு மீடியா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை, டி.வி நிருபர்கள் தங்கள் கேள்விகளை அனுப்பினால், அதற்கு இந்தக் குழுவில் யாராவது பதில் சொல்வது என சிஸ்டம். ஆனால், யாராவது டி.வி கேமராவோடு வந்து மைக்கை நீட்டினால் சில தலைவர்கள் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்து விடுகிறார்கள். பப்ளிசிட்டி விவகாரத்தில் ராகுல் பேச்சையே கேட்க மாட்டார்கள் போல!

காங்கிரஸின் தேர்தல் உத்திகளை தீர்மானிக்கும் குழுவில் தனக்கு முக்கியமான இடம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருந்தார். ஆனால், தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பொறுப்பில் மோகன் கோபால் என்பவரும், வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் மதுசூதன் மிஸ்ட்ரியும் பிஸியாகிவிட, ஜெய்ராமுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. விரக்தியோடு அமைச்சராக தொடர்கிறார் அவர்.

பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹுசேனின் மேடைப் பேச்சுகளில் சரளமாக இந்தி கவிதை மழை பொழியும். புத்தகங்களிலிருந்து எடுத்ததில்லை. அவர் மனைவி ரேணு சர்மா ஒரு கவிஞர். அவர் எழுதித் தருவதுதான்!

தனது ஆட்சியில் கல்வி நிலை எப்படி இருக்கிறது என பார்ப்பதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒரு பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் போனார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பொது அறிவை சோதிக்க, ‘‘உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் எது?’’ எனக் கேட்டு, ‘‘பதில் தெரிஞ்சவங்க எல்லாம் கை தூக்குங்க’’ என்றார். கையைத் தூக்கிய நான்கு பேருமே ‘‘டெல்லி’’ என தப்பாக பதில் சொல்ல, நொந்து போய்விட்டார் அவர். ‘‘என்னை யார் என்று தெரிகிறதா?’’ என அடுத்த கேள்வியை அவர் கேட்டபோது, ‘‘ராகுவ் காந்தி’’ என்ற மாணவர்கள், ‘‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’’ என வாழ்த்து கோஷமும் போட்டார்கள். அடுத்த நாளே அந்த ஏரியா கல்வி அதிகாரி தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

பொது இடங்களில் புகை பிடித்து நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. நாடாளுமன்ற வளாகம் முழுக்க புகை பிடிப்பது தடை செய்யப்படுள்ளது. அங்கு கூலாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சௌகதா ராய் புகைபிடிக்கும் போட்டோ பத்திரிகைகளில் வெளியாக, கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவரைக் கூப்பிட்டு கண்டித்துள்ளார்.