விலை : மலர்மதி





கீர்த்தனாவிடம் ஒரு பழக்கம்... அவள் வாங்கும் எந்தப் பொருளுக்கும் உண்மையான விலையை வெளியே சொல்ல மாட்டாள். தான் ஒரு காஸ்ட்லியான கஸ்டமர் எனக் காட்டிக் கொள்ளவே விலையை உயர்த்திச் சொல்வாள்.

அன்றுகூட, நூறு ரூபாய்க்கு மகனுக்கு வாங்கிய சட்டையை, முன்னூறு ரூபாய்க்கு வாங்கியதாகப் பக்கத்து வீட்டுக்காரியிடம் பெருமை பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த நாளே அவள் கணவன் குழந்தைவேலு, தன் நண்பனுடைய மகன் பிறந்தநாளுக்கு கிஃப்ட்டாகக் கொடுக்க ஒரு சட்டை வாங்கி வந்தான். தான் வாங்கி வந்த சட்டையைப் போலவே இருந்ததால், விலையைக் கேட்டாள் கீர்த்தனா.
‘‘முந்நூறு!’’ என்றதும் அவளுக்கு மூச்சடைத்தது!

‘‘ஐயோ, இது நூறு ரூபாய் சட்டைங்க’’ என்றாள் அதிர்ந்து.
‘‘விலையைப் பார்த்து நானும் தயங்கித்தான் நின்னேன். அப்போ யதேச்சையா நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க அந்தப் பக்கம் வந்தாங்க. இதே மாதிரி நீ ஒரு சட்டை வாங்கினியாமே... அது முந்நூறு ரூபாய்தான்னு அவங்க சொன்னாங்க. நீ எப்படியும் பேரம் பேசித்தான் வாங்கியிருப்பே. அப்போ சரியான விலையாதான் இருக்கும்னு வாங்கிட்டேன்’’ என்றான் குழந்தைவேலு.

பெருமைக்காக சொல்லும் பொய், தன்னையே சுடுவதை உணர்ந்து அன்றே திருந்தினாள் கீர்த்தனா!