ஆல்தோட்ட பூபதி
நானும் வெவரம் தெரிஞ்ச நாளுல இருந்து பாக்கிறேன்... இந்த வில்லனுங்க எப்போ பார்த்தாலும் ஹீரோவை, ‘‘தனியா வா... தனியா வா’’ன்னே அவங்க இடத்துக்குக் கூப்பிடுறாங்க. ‘பாட்ஷா’வுல ஆரம்பிச்சு ‘தலைவா’ வரை இந்தக் காட்சிகள் இருக்கு. இப்போ எனக்கு என்ன சந்தேகம்னா, ஏன் வில்லன் எப்போ பார்த்தாலும் ஹீரோவை தனியா ஏதோ ஒரு காட்டு பங்களாவுக்கு கூப்பிடுறான்? ஹீரோவை கற்பழிக்கவா போறான்? இல்ல ஹீரோ தனியா போகாம ஊரு ஜனத்தை கூட்டிக்கிட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு வாங்கிட்டு பொண்ணு பார்க்கவா போறான்? வில்லனும் ஹீரோவும் ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும்... தனியா போய் அடிச்சாதான் அவன் ஹீரோ. தனியா வரவனக்கூட அடிக்க முடியாம தோத்துப் போறவன்தான் வில்லன்!
தூசியே உள்ள புகாத ஃபாரீன் ரயில்ல போயிருப்பீங்க... குப்பையும் நம்மளோடையே சக பயணியாய் பயணிக்கும் கிழக்கிந்திய ரயில்ல போயிருப்பீங்க... ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரயிலின் கழிவறையில் வந்து தண்ணி புடிச்சுட்டுப் போகும் வட இந்திய ரயில்களில் கூட போயிருப்பீங்க... இந்தியாவுலயே அழகான ரயில் தடங்களில் ஒன்றான ஊட்டி மலை ரயில்ல போயிருப்பீங்க... ஏன் ஒலியை விட வேகமாய் போகும் ஜப்பானின் புல்லட் ரயில்ல கூட போயிருப்பீங்க... ஆனா உலகத்துலயே மிக மிக அழகான ரயில்ல போயிருக்கீங்களா? அந்த ரயிலின் பெட்டிகள் பூப்போட்ட பாவாடைகளும் சின்னஞ்சிறு டிராயர்களும் அணிந்திருக்கும். அதில் அன்புதான் டிக்கெட், மனதுக்குப் பிடித்த இடங்கள்தான் ரயில் நிலையங்கள். ஒருவேளை நீங்க இதுவரை போகாம இருந்தா, தயவுசெய்து அவரவர் குழந்தைகளிடம் சொல்லுங்கள்... கூட்டிப் போவார்கள்.
‘‘அடையாளம் தெரியாத ஒன்று, இந்திய எல்லையில் பறந்து போயிருக்கு’’ன்னு நம்ம பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி சொல்லியிருக்காரு. ஜோடி புறா ‘சொய்ய்’ன்னு போச்சா, இல்ல சீன விமானம் போச்சான்னு தெரியாம பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு. ஒரு வேளை இந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் பசங்க மொட்டை மாடில காயப் போட்டிருந்த ஜட்டி கிட்டி பறந்து போயிருக்குமோ? இருக்கலாம்... இப்போ ஜட்டிக்கு கிளிப் குத்துன்னா, எவன் கேட்கிறான்? இல்ல, ஏதாவது பொண்டாட்டிங்க புருஷனை அடிக்க தூக்கி எறிஞ்ச தட்டு டம்ளர் பறந்து போயி அங்கன விழுந்திருக்குமோ? இருக்கலாம்... இப்பல்லாம் எல்லா பொம்பளைங்களும் பயங்கரமா கோவப்படுறாங்க. ஒருவேளை நம்ம தமிழ் சினிமா கதாநாயகன்கிட்ட அடிவாங்கின வில்லனோட அடியாளுங்க அங்க பறந்து போயி விழுந்திருப்பாங்களோ? யாருக்கு தெரியும், ஒருவேளை எல்லையில் பறந்தது இந்தியாவோட மானமா கூட இருக்கலாம்.
கொஞ்சம் கசப்பான உண்மைதான்... இருந்தாலும் குட்டிச்சுவர் இதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கு. நம்ம மத்திய அரசு, 200 டன் தங்கத்தை, பவுன்ல சொல்லணும்னா, கிட்டத்தட்ட 2,50,00,000 சவரன்களை அடமானம் வைக்கப் போறாங்க. இதுக்கு ஒரே காரணம், இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பை குறைக்க, இந்த தங்கத்தை அடமானம் வச்சு டாலரா இந்தியாவுக்குள்ள கொண்டு வரணும் என்பதுதான். 1991ல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி மீண்டும் வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காங்க. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்தணும். காரணம், நம்ம நாடு செய்யும் எல்லா இறக்குமதிகளுக்கும், முக்கியமா கச்சா எண்ணெய்க்கு டாலர் வழியாத்தான் பணம் செலுத்தறோம். ரூபாயின் மதிப்பு குறைவா இருக்கிறப்போ, நாம தர்ற ஒவ்வொரு டாலருக்கும் அதிகமான ரூபாயைத் தர்றோம். கிட்டத்தட்ட நாம 10 ரூபாய் சாப்பாட்டுக்கு 15 ரூபாய் கொடுக்கிற மாதிரி. இப்போ நாம செய்யற சிறு உதவி கூட அரசுக்கு பெரிய உதவியா இருக்கும். பெருசா ஒண்ணுமில்ல, தினம் தேவையில்லாம செலவு செய்யும் பெட்ரோல ஓரளவு சேமிச்சா கூட போதும். சிக்னல்ல 20 நொடிக்கு மேல நிற்க வேண்டியது வந்தா வண்டி இஞ்சினை அணைங்க. நடந்து போற தூரத்துக்கு டூவீலர்ல போகாதீங்க. தூர பயணங்களுக்கு பஸ், ரயில்ல போங்க. தேவையில்லாம காபி சூடு பண்றது, சுடு தண்ணி வைக்கிறதுனு சிலிண்டரை வீணாக்காம, எல்லாத்தையும் யோசிச்சு செய்யுங்க. எரிபொருள் வழியா நம்ம பணம் வெளிய போறத தடுத்தாலே 30% பொருளாதாரம் மேன்மை அடையும்!
‘‘கிராமப்புறங்களில் வறுமை ரொம்பவும் குறைந்து விட்டது’’ன்னு ஸ்டேட்மென்ட் விட்டிருக்காரு நம்ம நிதியமைச்சர். ஐயா படிச்சவரே, கேபிள் டி.வியால கிராமத்தில் கிடந்த பொழுதுபோக்கு வெறுமை குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறோம். மெகா சீரியல் பார்த்துக்கிட்டு வாய பொளந்து கிடந்ததால செய்ய வேண்டிய கடமை குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறோம். கவருமென்ட்டு வீதிக்கு வீதி தெரு லைட்டு போட்டுக் கொடுத்ததுல ஊரெங்கும் அப்பிக்கிடந்த கருமை குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறோம். ஆனா ஊனா சாதி சண்டைகளாலும் காதல் சண்டைகளாலும் வீட்டை கொளுத்தறது நாட்டை கொளுத்தறதுன்னு பொறுமை குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறோம். ஆனா, தயவுசெய்து வறுமை குறைஞ்சிடுச்சுன்னு சொல்லாதீங்க. இங்க தண்ணியும் திங்க தீனியும் இல்லாம எருமை கூட வறுமைல எடை குறைஞ்சு கிடக்கு, ஆங்..!
இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...ஆப்பிளை விட அதிக விலைக்கு விற்கும் அசகாய சூரன்... ரேட்டைக் கேட்டாலே ரெண்டு கண்ணிலும் தண்ணீர் வர வைக்கும் ரவுடி... அட, நம்ம வெங்காயம்தான்!
ரெண்டு செல்போன் வச்சு பேசுறவன் பணக்காரனில்ல... ரெண்டு பொண்டாட்டிகள கட்டி மேய்க்கிறவன் பணக்காரனில்ல... ரெண்டு காரு வச்சு பெட்ரோல் ஊத்துறவன் பணக்காரனில்ல... ரெண்டு வீடு கட்டி வாழுறவன் பணக்காரனில்ல... ரெண்டு காலேஜ் வச்சு சம்பாதிக்கிறவன் பணக்காரனில்ல... உண்மையில ரெண்டு நாய வளர்த்து சோறு போடுறவன்தான் பணக்காரன். எட்டணா விக்ஸு வாங்கவே பத்து முறை யோசிக்கிறோம். ஒருத்தரு நானூறு ரூவாய்க்கு நாய்க்கு ரஸ்கு வாங்கிட்டு போறாரு. ‘‘என்னண்ணே, இதை நாய் ஒரு வாரம் சாப்பிடுமா?’’ன்னு கேட்டேன்.
‘‘இல்ல தம்பி... அதுக்கு மேலயும் ரெண்டு நாள் வரும். நாய் டயட்ல இருக்கு’’ன்னாரு.
ஒரு மனித உருவத்தைப் போலவே இன்னொரு உருவத்தை உருவாக்கும் வித்தையைக் கண்டுபிடித்து விட்டார்கள்... செயற்கை ரத்தமும் செய்து விட்டார்கள்... இதயம் முதல் கல்லீரல் வரை மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகி விட்டார்கள்... இருந்த இடத்திலிருந்து வேறொரு கண்டத்திலிருக்கும் நாட்டை ஒரு பட்டன் தொட்டு அழிக்கும் தொழில்நுட்பமும் இருக்கிறது. கொஞ்ச நாளில் செயற்கை தாய்ப்பால் கூட வரலாம். அன்பார்ந்த விஞ்ஞானிகளே, கொஞ்சம் மனசு வைத்து காதலியின் கைக்குட்டை வாசத்திலும் அம்மாவின் புடவை வாசத்திலும் ஒரு வாசனை திரவியம் செய்து தருகிறீர்களா? பூமி பந்தம் முடிந்து போகும்போது கொஞ்சம் பூசிக்கொண்டு போக வேண்டும்.