சமச்சீர் கல்விக்கு மறைமுக மூடுவிழா?




மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது கல்வியிலும் கை வைத்திருக்கிறது மத்திய அரசு. ‘‘சி.பி.எஸ்.இ பள்ளிகள் தொடங்க இனி மாநில அரசுகளின் தடையில்லாச் சான்று அவசியமில்லை’’ என்று அறிவித்துள்ளது மத்திய கல்வி வாரியம். சமச்சீர் பாடத்திட்டத்தில் தரமில்லை என்று கூறி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு பறக்கத் துடித்த தனியார் பள்ளிகளுக்கு சிறகு பூட்டி விட்டுள்ளது இந்த அறிவிப்பு. ஏற்கனவே 500 பள்ளிகள் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நிலையில், மேலும் பல மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தின் கல்விச்சூழலையே புரட்டிப் போடும் விஷயமாக இதைப் பார்க்கிறார்கள் கல்வியாளர்கள்.

சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்க பல நிபந்தனைகள் உண்டு. நகர்ப்புறங்களில் 1 ஏக்கர், கிராமப்புறங்களில் 2 ஏக்கர் நிலம்; 30 வருட லீஸ் உரிமை பெற்ற கட்டிடங்கள்; போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்; தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் என நீள்கிறது அந்தப் பட்டியல். முதலில், மாநில அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியை ஆய்வுசெய்து மாநில கல்வித்துறைக்குப் பரிந்துரை செய்வார். அதன்பிறகு மாநில அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கும். அதை வைத்து மத்திய கல்வி வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அமைக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் முதல்வர்கள் குழு, மீண்டும் பள்ளியை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும். அதன்பிறகே அங்கீகாரம் வழங்கப்படும். இப்போது மாநில அரசை இந்த நடவடிக்கைகளிலிருந்து துண்டித்துள்ளது மத்திய அரசு. ‘‘இதன்மூலம் படிப்படியாக கல்வித்துறையை மத்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

‘‘நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘கல்விக்கு நிதி உதவிகளை மட்டுமே வழங்குவோம், கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டோம்’ என்று அப்போது உறுதியளித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கிறது. மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்க முடியாத அளவுக்கு மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. அதிலும் கபில்சிபல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தலையீடு அதிகரித்துள்ளது. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. அதை மறந்துவிட்டு மத்திய அரசு கல்வியை பொதுமைப்படுத்த முயல்கிறது. இதனால் மாநிலங்களின் தனித்தன்மை அழிந்துவிடும். குழந்தைகள் மீதான சுமைகள் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் யஷ்பால் கமிட்டி, ‘சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குழந்தைகளுக்கு பெரிய சுமை. அப்பள்ளிகளை அந்தந்த மாநில கல்வி வாரியங்களோடு இணைக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது. அந்த அறிக்கையை அரசு குப்பையில் போட்டுவிட்டது. மாநில அரசின் பங்களிப்பை நீக்குவதன் மூலம், யாரும் எங்கேயும் சி.பி.எஸ்.இ பள்ளிகளைத் தொடங்கலாம் என்ற நிலை வரும். ஏற்கனவே மெட்ரிக் பள்ளிகள் கல்விச்சூழலை குலைத்துள்ள நிலையில், மத்திய அரசும் தன் பங்குக்கு சீர்குலைக்கப் போகிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர எல்லா மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும்’’ என்கிறார் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.



ஆனால், ‘‘சி.பி.எஸ்.இ அறிவிப்பால் எந்த பாதிப்பும் வந்துவிடாது’’ என்கிறார், நாமக்கல் பாவை பள்ளியின் இயக்குனரும் கல்வியாளருமான டாக்டர் சி.சதீஷ்.

‘‘மாநில அரசின் கல்வி அலுவலர் எதையெல்லாம் ஆய்வு செய்கிறாரோ, அதைத்தான் மத்திய கல்வி வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்கிறார்கள். இது தேவையற்ற சிரமத்தையும், நேர விரயத்தையும் உருவாக்குகிறது. அதனால்தான் மாநில அரசின் தடையில்லாச் சான்று தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முற்றிலுமாக மாநில அரசைத் தவிர்க்கவில்லை. பள்ளி தொடங்கும் தகவலை மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அரசுத்தரப்பில் இருந்து எதிர்ப்பு வரவில்லை என்றால், பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறார்கள். ‘இதனால் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அதிகரித்துவிடும், மாநில பாடத்திட்டம் பாதிக்கப்படும்’ என்பதெல்லாம் அடிப்படையற்ற கற்பனை. சி.பி.எஸ்.இ என்பது மிகச்சிறிய வட்டம். மாநில பாடத்திட்டத்தில் 12 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள். சி.பி.எஸ்.இயில் வெறும் 10 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். 10ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இயில் படித்தவர்கள் கூட பிளஸ் 2வுக்கு மாநிலப் பாடத்திட்டத்துக்கு வந்துவிடுகிறார்கள். காரணம், மருத்துவம், எஞ்சினியரிங், கலை, அறிவியல் படிப்புகளில் மதிப்பெண் அடிப்படையில்தான் இங்கு அட்மிஷன் வழங்கப்படுகிறது. மெடிக்கல் அட்மிஷனில் வெறும் 15 சதவீதம்தான் அகில இந்திய கோட்டாவுக்கு தரப்படுகிறது. அதேபோல் சி.பி.எஸ்.இயில் படிக்கும் எல்லோருமே ஐ.ஐ.டியில் இடம் பெறுவதும் இல்லை. 100ல் 10 பேருக்கு இடம் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் 41 ஸ்டேட் போர்டும், 2 நேஷனல் போர்டும் உள்ளன. எங்கும் குழப்பம் இல்லை. அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை’’ என்கிறார் சதீஷ்.  
மாநில அரசிடம் தடையில்லாச் சான்று வாங்குவதில் உள்ள சிரமங்களைப் பட்டியலிடுகிறார்கள் தனியார் பள்ளி அமைப்பின் நிர்வாகிகள். ‘‘எல்லா மட்டத்திலும் பணம் புரள்கிறது, தேவையில்லாமல் காலம் தாழ்த்துகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

‘‘கேரளாவில் 1000 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. மாநில கல்வித்திட்டமும் இருக்கிறது. அங்கு ஒரு பாதிப்பும் இல்லை. இந்தியாவில் அதிக கல்வியாளர்களைக் கொண்ட மாநிலமாக அதுவே இருக்கிறது. சமச்சீர் பாடத் திட்டத்தால் இங்கு கல்வியின் தரம் குறைந்துவிட்டது. சமச்சீர் பாடத்தைப் படித்து 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் பெறும் மாணவன் கூட, பிளஸ் 1 பாடத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பெயிலாகிவிடுகிறான். ஐ.ஐ.டி தேர்வில் ஆந்திர மாணவர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள். நம் மாணவர்கள் மிகவும் பின்தங்குகிறார்கள். எனவே பெற்றோர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையே விரும்புகிறார்கள். அதனால் மெட்ரிக் பள்ளிகள் வேறு வழியின்றி சி.பி.எஸ்.இ பள்ளிகளைத் தொடங்க வேண்டியுள்ளது. மெட்ரிக் பள்ளிகளை நேரடியாக சி.பி.எஸ்.இயாக மாற்ற முடியாது. அதனால் இதை குளோஸ் செய்துவிட்டு பலர் சி.பி.எஸ்.இக்கு விண்ணப்பித்துள்ளார்கள். சிலர் கூடுதலாக சி.பி.எஸ்.இ பள்ளிகளைத் தொடங்குகிறார்கள். இங்கே தடையில்லாச் சான்று வாங்க பல சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே மத்திய கல்வி வாரியம் எடுத்த முடிவு சரியானது’’ என்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பின் நிர்வாகி இளங்கோவன்.

முன்னாள் துணை வேந்தரும், சமச்சீர் கல்வி கமிட்டி தலைவருமான எஸ்.முத்துக்குமரன், இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார். ‘‘சி.பி.எஸ்.இ பாடத்திட்டமே சிறந்தது என்ற மனநிலையை பெற்றோர் மத்தியில் தனியார் பள்ளிகளே உருவாக்குகின்றன’’ என்று குற்றம்சாட்டுகிறார் அவர்.

‘‘சரித்திரங்களைத் திரித்து மாணவர்களுக்குப் போதிப்பதும், மண்ணுக்குத் தொடர்பில்லாத கல்வியைப் பயிற்றுவிப்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உண்டு. பல பண்பாட்டுக் குழுக்கள் கொண்ட ஒரு நாட்டில், சில பண்புகளில் பொதுமை இருக்கலாம். ஆனால் கல்வியில் தனித்தன்மை இருப்பது முக்கியம். மாநில அரசிடம் கல்வி இருந்தால்தான் சரியான கல்வியைப் போதிக்க முடியும். அறுவை சிகிச்சையை 16ம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர் கண்டுபிடித்ததாக ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த ஆங்கிலேயருக்கு 1000 வருடங்களுக்கு முன்பாகவே, ‘வாளால் அறுத்த அடினும் மருத்துவன்பால்..’ என்று தொடங்கும் பிரபந்தப் பாடலில் அறுவை சிகிச்சையைப் பற்றி விரிவாகப் பாடுகிறார் குலசேகரத்தாழ்வார் என்றால் அவருக்கு முன்பாகவே இங்கே அறுவை சிகிச்சை இருந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மாணவன் அறுவை சிகிச்சையை ஆங்கிலேயன் கண்டுபிடித்ததாக படித்துக் கொண்டிருக்கிறான். இங்கே ‘ஏபிசிடி’தான் கல்வி என்று நினைக்கிறார்கள். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே ஒழிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’’ என்கிறார் முத்துக்குமரன். என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?
- வெ.நீலகண்டன்