ஆதலால் காதல் செய்வீர் : விமர்சனம்




நடப்பு வாழ்க்கை, பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த வாழ்க்கை போலில்லை... முழுதாக முரண்பட்டு நிற்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கும் படம்தான், ‘ஆதலால் காதல் செய்வீர்’.

காபி ஷாப், பார்க், கோயில், பீச் என எங்கே பார்த்தாலும் நம் பார்வையில் தென்படும் டீன் ஏஜ் காதலின் விபரீத வடிவத்தை அக்கறையோடு ஆகச் சிறந்த செய்நேர்த்தியில் சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பின் விளைவுகள் பற்றி கவனம் கொள்ளாத இளைஞர் உலகத்தின் மாதிரியை முன் வைத்ததில் இயக்குநரின் அக்கறை பெரும் அளவில் ஈர்ப்புடன் விரிகிறது.

கல்லூரிக் காதல், அது முளைப்பதற்காக படும் பாடு, காமத்தில் முடியும் போக்கு, அதைத் திருமணமாக்க முயலும் போராட்டம், இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா, காதல் பிழைத்ததா என எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழிமொழிந்து இருக்கிறார்கள். போன தடவை ‘ராஜபாட்டை’யில் நடந்து சறுக்கிய சுசீந்திரன், இந்த முறை கம்பீரமாக எழுந்து உட்கார்ந்து நிமிர்ந்தும் விட்டார்.

இதைவிட படு ‘சேஃப்’ அறிமுகம், ஹீரோ சந்தோஷ் ரமேஷூக்கு அமைந்திருக்க முடியாது. பெரும்பாலும் காதல் தொனிக்கும் ஒரே டைப் டயலாக் என்பதால், பெரிய அளவில் தோல்வி இல்லாமலே அமைந்துவிடுகிறது அவர் நடிப்பு. பாவனைகளைக் காட்ட அவர் படுகிற அவஸ்தையை, மனிஷா நிறைவு செய்து அவரைக் காப்பாற்றிவிடுகிறார். விடலைத்தனமாகப்பேசுவதில் காட்டுகிற எளிமை, உருகிக் கரைகிற நிமிடங்களிலும் கை வருகிறது மனிஷாவுக்கு.

நாயகி தவிர, அனேகமாக நண்பர்களை புதியவர்களாகத் தேர்ந்தெடுத்ததில் தொடங்குகிறது நம்பகத்தன்மைக்கான ஆரம்பம். நட்பு, காதலாகி அது விபரீதமாகும்போது அவர்கள் திகில் மூடுக்கு மாறுவது படு இயல்பு. சடுதியில் பாய்ந்து வரும் உணர்வுகளை மிக எளிமையான ட்ரீட்மென்ட்டில் காட்சிப்படுத்தியிருப்பது அழகு. மொபைல் போன்கள் போன்ற அறிவியல் வளர்ச்சிகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்வதை பாடம் மாதிரி சொல்லி, உண்மைக்கு நெருக்கமாக வருகிறார் இயக்குநர்.

அப்பாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். அம்மாவாக உச்சபட்ச யதார்த்தத்தோடு பதறுகிறார் துளசி. மொத்தக் காதலும் அதன் வசீகரத்திலிருந்து மாறி, போலீஸ் கமிஷனர், தெரிந்த அரசியல்வாதி, உறவினர் வட்டம் என சுழன்றடிப்பதை நெருடல் இல்லாமல் சொல்லியிருப்பது படத்தின் மொத்த வெற்றி. இவ்வளவு அக்கறையோடு கதை சொல்லிவிட்டு, மகாபலிபுரம் ரிசார்ட்டில் விபரீத கோணங்களோடு அந்த கிறக்கப் பாட்டை போட்டிருக்க வேண்டாம் சுசீந்திரன்! படம் சொல்லும் மெஸேஜுக்கு அது கரும்புள்ளி.

ஆரம்பக் காதலின் சிக்சர் கமென்டுகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. டீன் ஏஜ் பெண்களிடம் தன் காதலை நிரூபிக்கப் பாடுபடும் காதலர்களின் பதிவில் டிஸ்டிங்ஷன் தட்டுகிறார் இயக்குநர். காதலை தயக்கத்துடன் அனுமதிக்கும் கணத்தில் காட்டும் பாவங்களில் பின்னுகிறார் மனிஷா. படு இயல்பான வசனத்தில் லெனின்பாரதியும், கிளைட்டனும் படம் முழுக்க இளமை முலாம் பூசி, இறுதிக் கணங்களில் சீரியஸ் முகம் பெறுகிறார்கள்.

இந்த வகை படத்திற்கு யுவன் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸ் பாடலில் மட்டும் உருக்கம் கொடுத்து பெயரை ஓரளவு தக்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவில் நெருக்க உணர்வைத் தருகிறார் சூர்யா. நவீன இளமை உலகை நெருங்கித் தொடும் முயற்சிக்கு நல்வரவு!
- குங்குமம் விமர்சனக் குழு