சாயி ஷீரடி பாபாவின் புனித சரிதம்





யாருடைய பாவங்கள் எல்லாம் மறக்கப்படுகிறதோ, அந்த அதிர்ஷ்டசாலிகள் எல்லாம் என்னை வணங்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள்!
- பாபா மொழி

பகு சதாபள், தன் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தான். இவை எல்லாம் ஜவ்ஹார் அலியின் வேலைதான்.
இதை எப்படி வெளியில் சொல்வது? எனவே, பேசாமல் இருந்தான்.
‘‘சகோதரர்களே, இப்படி இந்த கிராமத்தில் இதுவரை நடந்ததில்லை. எனக்கு இந்த ஜவ்ஹார் அலி மீதுதான் சந்தேகம் எழுகிறது’’ என்றார் கிராம அதிகாரி.
பகுவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அவனை கிராம அதிகாரி கூப்பிட்டவுடன் நடுங்கிக் கொண்டே அவரை நெருங்கினான். காரணம், அவன் ஜவ்ஹார் அலியின் பிரதம சிஷ்யன் என்று ஊருக்கே தெரியும்.

‘‘போ... போய் அந்த ஜவ்ஹார் அலியை எழுப்பு. விடிந்து இவ்வளவு நேரமாகியும் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறாரா, போய்ப் பார்.’’
ஜவ்ஹார் அலி தங்கியிருந்த ஷாமியானா அருகில்தான் இருந்தது. எல்லோரும் அதையே நோக்கினார்கள். இந்த சலசலப்பினால் ஜவ்ஹார் அலி தூக்கம் கலைந்து எழுந்து வெளியில் வந்தார். பகு அவரை கலக்கத்தோடு பார்த்தான். ஜவ்ஹார் அலி புத்திசாலி. தன் மீது வருத்தம் தரக்கூடிய குற்றச்சாட்டு வரப்போவதை அறிந்தார். அவர் கோயில் பிராகாரத்தினுள் வந்தார்.

‘‘இது என்ன?’’ எலும்புகளைக் காட்டி கிராம அதிகாரி கேட்டார்.
‘‘இவை எலும்புத் துண்டுகள்... இங்கே யார் எறிந்தது?’’ - ரொம்ப அடக்கத்துடன் அவர் எதிர்வினா எழுப்பினார்.
‘‘டேய் கபடதாரி, சூது நிறைந்தவனே, இது உன் வேலைதான். எங்களுடைய தெய்வத்தை அவமதித்துவிட்டாய். நம்பிக்கை வைத்து உன்னை இங்கே தங்க வைத்தோம். இத்கா கட்ட இடம் கொடுத்தோம். ஆனால் நீ என்ன காரியம் செய்தாய்? முதலில் இக்கணமே இந்த இடத்தை காலி செய்...’’ - முகத்தில் அறைந்தாற்போல கோபத்துடன் கத்தினார் கிராம அதிகாரி.

‘‘ஊரை விட்டே துரத்துங்கள் அந்த நீசனை.’’
‘‘இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குகிற கதையாட்டம், நம் கடவுளின் புனிதத்தையே கெடுத்தவனை ஓட ஓட விரட்டணும்.’’
ஜனங்கள் வெகுண்டு எழுந்தார்கள்.
ஜவ்ஹார் அலி புரிந்துகொண்டார். தான் பெரிய தப்பு செய்ததை உணர்ந்தார். அடிவாங்குவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரே வழி, இடத்தை காலி செய்வதுதான். இருந்தாலும் கடைசி பிரயத்தனமாக, கைகூப்பி ரொம்ப பணிவுடன் சொன்னார். ‘‘சகோதரர்களே, இந்த எலும்புகளை நான் எறியவில்லை. இதை யார் எறிந்தார்கள் என்றும் எனக்குத் தெரியாது. இதை ஒரு நீச்சன்தான் செய்திருக்கணும். அது நானல்ல. தயவுசெய்து தப்பாக நினைக்காதீர்கள். இப்படிப்பட்ட அற்பச்செயலை நான் எந்தக் கடவுளுக்கும் எப்பொழுதும் செய்யமாட்டேன். எனக்கு அல்லா எப்படியோ, அப்படித்தான் வீரபத்திரரும். அப்படியிருக்க நான் எப்படி அவரை அவமதிப்பேன்?’’
‘‘இவன் புளுகுகிறான்.’’
‘‘இவனை நம்பாதீர்கள்.’’
‘‘முதலில் அவனை விரட்டுங்கள்.’’
‘‘அவனை அடியுங்கள்
முதலில்...’’
ஜனங்கள் கோபத்தில் கத்தினார்கள்.

‘‘என்னை விரட்டத்தான் வேண்டும் என்றால் நான் போகிறேன். நான் உங்களை உய்விக்க வந்தேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் போய் விடுகிறேன். நான் குற்றம் ஏதும் புரியவில்லை. இருந்தாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்’’ - இருகரம் கூப்பி, அமைதியுடன் சொன்ன ஜவ்ஹார் அலி, தன் இடத்திற்கு வந்து உடைமைகளை எடுத்துக்கொண்டார். பகு அவருக்கு உதவினான். சூரியன் மேலே வந்த சமயம், ஜவ்ஹார் அலி, கிராமத்தின் எல்லையைத் தாண்டியிருந்தார். அவருடைய கால்கள் ஷீரடியை நோக்கிச் சென்றன!



நாநா சாகேப் டேங்ளே ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார். சாயியின் கிருபையால் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்து, சந்திர, சூரியனைப் போல இருவரும் வளர்ந்து வந்தார்கள். பத்மாவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. காரணம், அவளை மலடி என்று முன்பு எல்லோரும் ஒதுக்கினார்கள். பாபாவின் ஆசீர்வாதத்தினால் அந்த அவப்பெயரைத் துடைத்தாள். அவளுடைய பக்தி, பதிவிரதம், பெரிய மனசு மற்றும் நல்லொழுக்கத்திற்குத் தகுந்த பலன் கிடைத்தது. அவள் வாழ்க்கை மலர்ந்தது. சரஸ்வதியும் அதே நிலையில் இருந்தவள், சாயியின் ஆசீர்வாதத்தினால் மகப்பேறு கிடைத்தது.

இதனால் சாயியை மகான் என்று பலரும் பாராட்டினாலும், ஒரு சிலர் ‘ஆசீர்வதிப்பதினால் எங்காவது குழந்தை பிறக்குமா?’ என்று சந்தேக வினா எழுப்பினார்கள். ஆனால், சாயிபாபாவின் மேல் வைத்த நம்பிக்கை காரணமாக, அநேகம் பேர் அவரை தரிசிப்பதற்காகவும், தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளவும் ஷீரடிக்கு வந்தார்கள். அமைதி இல்லாத மனதோடு சங்கடத்துடன் வந்து, சாயியை தரிசித்தவுடன் தங்களுடைய துன்பம் அகன்றதால், மன நிறைவுடன் திரும்பினார்கள்.

நாநா சாகேப் கோர்ட் வேலை நிமித்தம் அகமத் நகருக்கு அடிக்கடி வந்து போவார். அங்குள்ள ஜில்லா கோர்ட்டில் சிதம்பர் கேசவ் காட்கில் என்பவர் காரியதரிசியாக இருந்தார். அவர் நாநாவின் உயிர்த்தோழர். அவருக்கு நாநா சாகேப் ஒரு கடிதம் எழுதினார்...

‘காரணமில்லாமல் கடிதம் எழுதுவது குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். விஷயத்திற்கு வருவோம். நான் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்தேன். இதனால் என் இரண்டு மனைவிகளும் சமூகத்தில் பெருத்த அவமானத்தைச் சந்தித்தார்கள். வாழ்க்கை ஒரே இருட்டாக இருந்தது.

ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஷீரடியில் உள்ள சந்த் சாயிபாபாவின் ஆசீர்வாதத்தினால், ‘குருடன் ஒரு கண்ணைக் கேட்டால், கடவுள் இரண்டு கண்களைக் கொடுத்தது போல’ எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன!

நீங்கள் நிறைய படித்தவர். புத்திசாலி. புண்ணியம் செய்தவர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீங்கள் ஒருமுறை ஷீரடிக்குச் சென்று, ஸ்ரீசாயிபாபாவை தரிசித்து வாருங்கள். அவர் சாட்சாத் கடவுள். இதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை. இவ்வுலகில் கடவுளானவர் அவருடைய ரூபத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. அற்புதச் செயல்களை நிகழ்த்தும் அவரை தரிசித்து வந்தால், மனதிலுள்ள அழுக்கு நீங்கும்; மனக்கவலைகள் அகலும். சாந்தி ஏற்படும். புத்தி, ஞானத்தால் கூர்மையடையும். தாங்கள் தங்களுடைய குழந்தை, குட்டிகள் மற்றும் உறவினர்களுடன் பாபாவின் தரிசனத்திற்கு வரணும்!’
கடிதத்தைப் படித்து சிதம்பர் கேசவ் காட்கில் மகிழ்ந்தார். நாநாவின் மூலமாக சாயியே தன்னை அழைப்பதாக எண்ணினார். விரைவில் தன் குடும்பத்தாருடன் ஷீரடிக்குச் செல்ல தீர்மானித்தார்.
ஆனால்...

ஷீரடியில் வேறொரு ஆபத்து நெருங்கிக்கொண்டிருந்தது. கருத்த மேகம் மூண்டு, அது ஷீரடியிலுள்ள துவாரகாமாயியின் மேல் படர்ந்தது!
ஜவ்ஹார் அலி ஷீரடியை அடைந்தார்.

எங்கு தங்குவது என்கிற பிரச்னை எழுந்தது. இனி இந்துக் கோயில்களின் அருகில் இருக்காமல், மசூதி பக்கம் தங்கலாம் என எண்ணினார். சிறிது காலம் அமைதியுடன் இருக்கலாம் என நினைத்தார்.
‘‘தம்பீ’’ என்று வழியில் போன ஷீரடிவாசி ஒருவனைத் தடுத்தார்.

‘‘இங்கு மசூதி இருக்கிறதா?’’
‘‘ஊரின் அந்தப் பக்கம் இருக்கு. எதற்காகக் கேட்கிறீர்கள்?’’
‘‘அன்பனே! எனக்கு தங்குவதற்கு இடம் வேண்டும்.’’
‘‘அங்கு இடம் கிடைக்காது.’’
‘‘ஏன்?’’
‘‘ஏனென்றால் அங்குதான் சாயி இருக்கிறார்.’’
‘‘சாயி யார்?’’
‘‘கடவுள்’’
‘‘கடவுள்?’’ - ஒரு வித கேலிச் சிரிப்புடன் ஜவ்ஹார் அலி கேட்டார்.
‘‘ஆமாம். சாயி ஒரு கடவுள்... மகான் மற்றும் யோகி.’’
‘‘சரி சரி.. அந்த சாயியின் வயசு என்ன இருக்கும் தம்பி?’’
‘‘இளவயசுதான். ஆனால், ஞானமிக்கவர். அவரிடம் அற்புதமான சக்திகள் இருக்கின்றன!’’
‘‘அப்படியா? அவர் மசூதியிலா தங்குகிறார்?’’
‘‘ஆமாம்...’’

‘அப்படியானால் நான் அங்குதான் போகணும். அங்குதான் இருக்கணும்’ என்று வக்கிரபுத்தி கொண்ட ஜவ்ஹார் அலி நினைத்துக்கொண்டார். சாயியைப் பற்றி அறியும் ஆவலோடு நடந்தார். யார் இந்த இளைஞன்? நிஜமாகவே கடவுளின் சக்தி அவனிடம் உண்டா? இந்த சாயியைத் தன் பிடியில் அடக்கிக்கொண்டால்? பெரிய பெரிய மனிதர்களையெல்லாம் தன் பேச்சு சாதுரியத்தினால் மடக்கும்போது, இந்த இளைஞனை வசியம் செய்ய எவ்வளவு நேரமாகும்?

ஜவ்ஹார் அலி மசூதிக்கு வந்தபோது ஆச்சரியமடைந்தார். பாபா அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய பார்வை, ஜவ்ஹார் அலியை எதிர் நோக்கியது. பக்தர்களுடன் மகல்சாபதி, தாத்யா மற்றும் ஷாமா போன்றவர்கள் அங்கு இருந்தார்கள்.

‘‘சாயீ...’’ என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் ஜவ்ஹார் அலி.
சாயி அவரைப் பார்த்தார். ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக அவர் மனதில் பட்டது. மகல்சாபதியும் அப்படியே எண்ணினார்.
‘‘சாயீ, சாயீ... என் மகனே... உன்னுடைய பெயரைக் கேட்டு ஓடோடி வந்திருக்கிறேன். உள்ளே வா என்று அழைக்க மாட்டாயா?’’ என்று பெரிய குரலில் ஜவ்ஹார் அலி சொன்னார்.

ஒரு கணம் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்த சாயி, மனதை திடப்படுத்தி, ‘‘வாருங்கள்... உட்காருங்கள்...’’ என்றார்.

‘‘நன்றி. நான் சில நாட்கள் உன்னுடன் தங்க ஆசைப்படுகிறேன். ஆட்சேபணை இல்லையே?’’
‘‘அதற்கென்ன, தாராளமாக இருங்கள். இது அல்லாவின் இடம்!’’
‘‘ரொம்ப நன்றி மகனே, எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் ஜவ்ஹார் அலி. நிறைய படித்து, கடவுளின் சேவை செய்பவன். யோக சாதனை செய்து ஞானத்தைப் பெற்றவன். கிரந்தங்களைப் படித்து அநேக தடவை பாராயணம் செய்தவன். சாயியைக் கரையேற்றுவதற்காக என்னை அல்லா இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். நான் வந்ததால், இந்த ஷீரடி இனி மேன்மை அடையும்’’ - ஜவ்ஹார் அலி தற்புகழ்ச்சியாகத் தன்னை உயர்த்திப் பேசியது, அங்கிருந்த எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியது. நெற்றியில் சந்தேக வரிகள் தோன்றின. ஆனால், சாயி அமைதியாக இருந்தார்.

அன்றுமுதல் ஜவ்ஹார் அலி அங்கு தங்க ஆரம்பித்தார். சாயி யாசகம் செய்து வந்தாலும், சில பக்தர்கள் அவருக்கு உணவு, பழங்கள் கொடுத்தனர். இதனால் ஜவ்ஹார் அலிக்கும் உணவுப் பிரச்னை தீர்ந்தது. வரும் பக்தர்களை, தன் வாக்கு சாதுரியத்தினால் ஜவ்ஹார் அலி கவர்ந்தார். அவர்களுடைய பிரச்னைகளைக் கேட்டறிந்து, புத்திசலித்தனமான தீர்வுகள் சொன்னார். இதனால் அவரை ஜனங்கள் மதிக்கத் தொடங்கினார்கள். இவை எல்லாம் சாயியின் எதிரில்தான் நடந்தன. அவரும் வாய்மூடி, இந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் மகல்சாபதி, மாதவராவ் தேஷ்பாண்டே, தாத்யா கோதே பாடீல், அப்பா சாகலே, காஷிராம் இவர்கள் எல்லாம் பயந்தார்கள், சந்தேகம் கொண்டார்கள்.
(தொடரும்...)
படங்கள்: சி.விஜயகுமார்


தமிழகத்தில் சாயி! ஆஞ்சநேயருடன் பாபா
கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் குடிகொண்டிருக்கும் மயிலாடுதுறை பாபா கோயில், ‘மும்மூர்த்திகளின் கோயிலாக விளங்கி வேண்டும் வரம் தருகிறது’ என உருகிச் சொல்கிறார் கோவில் நிறுவனரான வீரராகவ சுவாமி.

‘‘நான் ஆஞ்சநேயரின் தீவிர பக்தன். நானும் இன்னும் சில பக்தர்களும் அவருக்கு கோயில் கட்டுவதற்காகத்தான், ‘ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கி இங்கு நிலம் வாங்கினோம். கோயிலை உடனடியாகக் கட்ட பண வசதி இல்லாததால், முதல் கட்டமாக 2005ல் குபேர லக்ஷ்மி ஐஸ்வர்ய கணபதிக்கு ஒரு சிறு கோயிலைக் கட்டினோம். ஒருநாள், பெங்களூரில் வசிக்கும் தமிழரான மோகன் என்பவர் வந்தார். இந்த இடத்தில் பாபாவுக்கு கோயில் கட்டவேண்டும் என பாபாவே அவர் கனவில் வந்து பணித்ததாகச் சொன்னார். அவர் இலவசமாகக் கட்டித் தந்த பாபா கோயில்தான் இது. 2009ல் கும்பாபிஷேகத்துடன் விமரிசையாகத் திறக்கப்பட்டது. எதிர்பாராத ஆச்சரியங்களுடன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். கணபதியும் பாபாவும் உள்ளிருந்து அருள் பாலிக்கும் இக்கோயிலில், முகப்பிலேயே 105 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு சகல நன்மைகளையும் அள்ளித் தருகிறார்’’ என்கிறார் வீரராகவ சுவாமி.
ஆலயத் தொடர்புக்கு: 9787878493