சொல்றேண்ணே சொல்றேன் : இமான் அண்ணாச்சி




இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்குத்தான் எம்புட்டு வெளாட்டுண்ணே... கம்ப்யூட்டர்ல ரேஸ் விடுறாய்ங்க, உண்டிக்கோல்ல பறவைய மாட்டி அடிக்காய்ங்க... ஊர்ல நாம ஓடிப் பிடிச்சு வெளாண்ட வெளாட்டை எல்லாம் இங்கிலீஷ்ல வெளாடுதுங்கண்ணே. அன்னிக்கு ஒரு பய, அசையாம ஒரே எடத்துல நின்னு அழுதுக்கிட்டிருக்கான். வாயி மட்டும் திறந்திருக்கு, கண்ணு கலங்குது... அதத் தவிர வேற எங்கயும் அசைவில்ல. ‘‘என்னடா தம்பி... இப்படி நிக்கிறே?’’ன்னு கேட்டேன்.

அவிய ‘அட்டாக்’ சொல்லி வெளாண்டாகளாம். கூடச் சேர்ந்த பயபுள்ள ‘டவுன்’ சொல்லாம ஓடிருச்சாம். ஊர்நாட்டுல தவங்கொட்டை பெறக்கி வளந்த பயக நாமெல்லாம் எங்கனண்ணே இந்த வெளாட்டக் கண்டோம். ஆனா, ஆச்சரியமா இருக்குண்ணே... நாம ஒத்த ரூவா கடன் வாங்கினாலும் ஒரு டஜன் பேப்பர்ல கையெழுத்து கேக்குறான். ஏன்னா, நம்மளை நம்ப முடியல. ‘தாறேன்’னு சொல்ற வார்த்தையெல்லாம் அந்தால போயிருது. இந்த மனுசப் பய சொன்னா சொன்னபடி நடக்கணும்னா, அதுக்கு ஆயிரம் அக்ரிமென்ட்டு, கைநாட்டு, கையெழுத்து, சாட்சி எல்லாம் தேவைப்படுது. எந்தா பெரிய அக்ரிமென்டா இருந்தா என்ன... எல்லாத்தையும் மீறிட்டு, நாட்டு எல்லையையே தாண்டுறான் மனுசன்.

ஆனா பாருங்கண்ணே... துப்பாக்கி மாதிரி கையை மடக்கி வச்சு, ‘அட்டாக்’னு ஒத்தை வார்த்தை சொன்னா போதும்ணே குழந்தைகளுக்கு! சிலையாட்டம் நிக்கணுமாம். சொன்னவன் பக்கத்துல இல்லேன்னாலும், ஏதோ ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நிக்கிறாண்ணே அந்தப் பையன். சின்னப் பிள்ளைங்க வெளாட்டை ஏன் பெரியவங்க வெளாடுறதில்லன்னு இப்ப தெரியுதா? இந்தத் திருட்டுப் பய ஏமாத்து வான்ணே... கண்ணாமூச்சில கூட கள்ளத்தனம் பண்ணி கட்டிப் பொறண்டு கண்ணு முழியப் பேத்துக்கிட்டுக் கெடப்பான். ஐஸ் பாய்ல அழுகுனி ஆட்டம் ஆடி, ஐகோர்ட்டு வரைக்கும் போய் அடிச்சிக்குவான். பிள்ளைக ஏமாத்துறது இல்லண்ணே... அப்படியே ஏமாத்தினாலும் உடனே மன்னிச்சுடும். பெரிய மனசு அதுகளுக்கு.



நாம ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்குண்ணே. நாமும் சின்ன பிள்ளையா பெரிய மனசோட இருந்த காலம் அது. நான் பள்ளிக்கூடம் போன காலத்துல, ஒரு பென்சில் வரும்ணே... நல்லா ஒண்ணரை அடி நீளத்துக்கு இருக்கும். பின்னாடி கை மாதிரி ஒரு ப்ளாஸ்டிக் மூடி போட்டிருக்கும். அப்போல்லாம் அந்த கை வச்ச பென்சில்தான்ணே டொயோட்டா காரு. பள்ளிக்கூடத்துல ஒரு பய அத வாங்கிட்டான்னா, பண்ணையாரு மாதிரி மெதப்பா அலைவான். எல்லாரும் அவனுக்கு சல்யூட் வைக்காத குறைதான். எங்க வகுப்புல ஒருத்தன் அத வாங்கிட்டான். படம் பாக்கும்போது, பி.எஸ்.வீரப்பா கதாநாயகிகிட்ட, ‘மாட மாளிகைகள் இருக்கு, பொன், வைரம், வைடூரியம் இருக்கு’ன்னு ஆசை காட்டுவாருண்ணே. அப்போ இவன் பக்கத்துல உக்கார்ந்து, ‘‘ஹும்ம்... இதெல்லாம் என்ன... எங்கிட்ட கை வச்ச பென்சிலே இருக்கு’’ம்பான்ணே. பெருமைன்னா பெருமை... பேய்த்தனமான பெருமை. அதை சீவினா கரைஞ்சுடும்னு அவன் வீட்டுப் பாடம் கூட எழுதாம வருவான்ணே. வாத்தியார் காதத் திருகும்போதுகூட, ‘என்னை என்ன வேணா பண்ணிக்கங்கடா... எனக்கு என் பென்சில் இருக்கு’னு அவன் கண்ல ஒரு கர்வம் தெரியும்ணே. பென்சில்ல எதுக்காக பிளாஸ்டிக் கைய வச்சாய்ங்கனு எனக்கு இப்ப வரைக்கும் தெரியலண்ணே. ஆனா, முதுகு சொறிய அது வாட்டமா இருக்கும். முழுசா மூணு செகண்ட் கூட அவன் அதை எங்க கண்ல காட்ட மாட்டான்... அப்புறம் எங்கருந்து முதுகு சொறியறது?

நானெல்லாம் அந்தப் பென்சில ஒரு நாளும் வாங்கினதுமில்ல. வச்சிப் புழங்கினதும் இல்ல. நாங்க அஞ்சு பைசா, பத்துப் பைசாவுக்கெல்லாம் புளியங்கொட்டை பெறக்கி வித்தப்போ, அந்த பென்சில் ஒரு ரூவாண்ணா. அதெல்லாம் கண்ணால பாக்க முடியுமா? அப்படியே காசு கிடைச்சாலும் நமக்கு சந்தோஷம் பென்சில்ல இல்லண்ணே. சினிமா பாக்குறதுலதான். எங்கே என்ன படம் ஓடிச்சுன்னாலும் அழுது அடம்பிடிச்சு ஓடிருவேன்...

அந்தக் காலத்துல எங்கூரு பக்கமெல்லாம் ஒரு பேப்பரை வாங்கி ஊரே படிக்கும். சினிமாவும் அப்படித்தான்.
புதுப் படம் பார்த்தவன் திண்ணைக்குத் திண்ணை டூரிங் டாக்கீஸ் ஓபன் பண்ணி பத்து பேருக்கு கத சொல்லுவான்ணே. நான் அதுல மன்னன். அந்தக் கால சினிமா உலகத்துக்கு பெரிய நஷ்டம் என்னாலயே வந்திருக்கும்ணே. என்கிட்ட கதை கேக்குறவன், ‘அப்பாடா, இதுக்கு மேல பத்து வருஷத்துக்கு படம் பாக்க வேணாம்டா’ன்னு ஒரு முடிவோட எந்திரிப்பான்ணே. அந்த அளவுக்கு வெலாவாரியா கத சொல்லுவேன். எம்.ஜி.ஆர், நம்பியார், அசோகன் மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்ணி வசனத்தை ஒப்பிப்பேன். ஆக்ஷன் காட்சியைக் கூட அப்படியே திண்ணைக்குக் கொண்டு வருவேன். ரெண்டரை மணி நேரம் பாத்த படக் கதைய அஞ்சு மணி நேரம் சொல்லுவேன்னா பார்த்துக்கங்கண்ணே.



‘அன்பே வா’னு நினைக்கேன்... எங்க ஊருக்கு லேட்டா வந்த ஒரு எம்.ஜி.ஆர் படத்தைப் பார்த்துட்டு வந்தேன். பயலுக எல்லாம் என்னையச் சுத்தி உக்காந்து கத கேட்டாய்ங்க. அந்தப் படத்துல வாத்தியாரு ஒரு மொட்டையன் கழுத்துல கம்பிய வச்சு நெரிப்பாருண்ணே. அந்த சீன் வந்தப்ப கையில கம்பி கிடைக்கல. அதான் அந்த பென்சில் பய இருக்கானே... இதான் சான்ஸு... ‘‘எலே, உன் பென்சிலு நல்லா நீளமா இருக்கும்... அதக் குடுலே’’னு கேட்டேன். வாத்தியார் கதையாச்சே... ஆர்வம் தாங்காம அவனும் குடுத்துட்டான். அவனையே மொட்டையனா புடிச்சு, அந்த பென்சிலால கழுத்தை நெரிச்சுக் காட்டினேன் பாருங்க... பொட்டுனு பென்சில் ஒடைஞ்சு போச்சு.

கத்தினான் பாருங்க... யம்மாடியோவ்! இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது. திண்ணையில இருந்த அத்தனை பேரும் தெறிச்சு ஓடிட்டோம். அங்கன எல்லா பயலும் நம்மளை மாதிரிதானே! கஷ்டப்பட்ட ஜீவனுக. அந்த பென்சில் அவனுக்கு வாழ்நாள் பொக்கிஷம்ணே. அதப் போயி ஒடச்சிட்டோமேனு வருத்தமா இருந்துச்சு. என்னால அதுதான் முடியும். நான் என்னைக்கு புளியங்கொட்டை வித்து அவனுக்கு வேற பென்சில் வாங்கிக் குடுக்குறது? ஆனாலும் அதையெல்லாம் மறந்துட்டு, அடுத்த எம்.ஜி.ஆர் படத்துக்கு கத கேக்க அவனும் திண்ணைக்கு வந்து உக்காந்தான்ணே. அப்படி மன்னிக்கிற குணம் இன்னிக்கு யாருகிட்ட இருக்கு? சொல்லுங்க பாப்போம்!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்