கர்ணனின் கவசம்





ருத்ரன் வீட்டு பின்புறம் வந்த அந்த உருவம் தன் நடையை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்தது. யாருமில்லை. என்றாலும் மேற்கொண்டு ஓரடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. வேப்பமரத்தின் பின்னால் சென்று மறைந்து கொண்டது. மூச்சை தேக்கி கட்டுப்படுத்தியதன் மூலம் தன் மனதை சமநிலைக்குக் கொண்டு வந்த அந்த உருவம், தலையை மட்டும் நீட்டி வீட்டை உற்றுப் பார்த்தது.

ஜன்னல்கள் திறந்திருந்தன. ஆனால், பின்புறக் கதவு தாழிடப்பட்டிருந்தது. ஒரு முடிவுடன் வீட்டை நோக்கி அந்த உருவம் அடியெடுத்து வைத்தது.
ஆயியும், ருத்ரனின் மனைவியான விஜயலட்சுமியும் இப்போதைக்கு வர மாட்டார்கள். அசோக சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட ரகசியக் குழுவின் வாரிசுகளுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உரையாடல் முடிந்து அவர்கள் வீடு திரும்ப குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும். அதற்குள் வேலையை முடித்துவிட வேண்டும்.

நிதானத்துடன் வீட்டை நெருங்கிய உருவம், வாசல்புறம் சென்றது. பூட்டையும், கதவையும் கண்களால் அளவிட்டது. புன்னகையுடன் தன் இடுப்பிலிருந்து ஒரு சுருக்குப் பையை எடுத்தது. அதனுள் இருந்த க்ளவுசை தன் கைகளில் அணிந்து கொண்டது. அதே சுருக்குப் பையிலிருந்து கொத்து சாவியை எடுத்து, பார்வையால் அலசியது. பின்னர் ஒரேயொரு சாவியை மட்டும் எடுத்து பூட்டினுள் நுழைத்து திருகியது.

க்ளக்.
பூட்டு திறந்தது. சத்தம் எழுப்பாமல் தாழ்ப்பாளை நீக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தது.
நேராக பூஜையறையை அடைந்த அந்த உருவம், அங்கிருந்த மரப் பெட்டியை திறந்தது. உள்ளே மினுமினுத்த விஜயாலயச் சோழனின் வாளை கைகள் நடுங்க எடுத்தது.

அந்த உருவத்தின் கண்கள் அனலைக் கக்கின. மனக்கண்ணில் திருப்புறம்பியம் போர் உயிர்பெற்று எழுந்தது. பாண்டியர்களின் உட்பகையை பயன்படுத்தி, முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரை அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசனான விஜயாலயன் தாக்கினான். பல்லவர்கள் சார்பாகப் போரிட்டு தஞ்சையைக் கைப்பற்றினான். தன் அரசை விரிவுபடுத்தினான்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் சட் சட் என்று நொடியில் தோன்றி மறைந்தன. தென்னிந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த திருப்புறம்பியம் போரில் எந்த வாளை விஜயாலயன் பயன்படுத்தினானோ... எதிரிகளைப் பந்தாடினானோ... அந்த வாள்தான் அது. இந்தப் போர்தான் பிற்கால சோழர்கள் மாபெரும் பேரரசை நிறுவ வித்திட்டது.

மாபெரும் பேரரசு... இதனைத் தொடர்ந்துதான் அந்த மாபெரும் படுகொலையும் நிகழ்ந்தது. ஆதித்ய கரிகாலனின் படுகொலை...
கண்களில் வழிந்த குரோதத்துடன் அதன் கூர்மையை சரிபார்த்துவிட்டு அந்த உருவம் பழையபடி பெட்டியை மூடியது. கைகளில் ஏந்திய வாளுடன் வந்த வழியே திரும்பியது.

அந்த உருவம், வேறு யாருமல்ல... ரவிதாசனின் மனைவியான ராஜிதான் அது.
அறுபட்ட கைகளுடன் துடிதுடித்த ஆதித்யாவை பார்த்து செய்வதறியாமல் தாரா திகைத்து நின்றது சில நொடிகள்தான். அதற்குள் ஐந்து மனிதர்கள் ஓடி வந்தார்கள்.

அவர்கள் அனைவருமே ஆறடி உயரமிருப்பார்கள். அதற்கேற்ற உடல்வாகு. உடலுடன் ஒட்டிய பழுப்பு நிற உடை. ஒருவேளை அது கவசமாகவும் இருக்கலாம். நாற்பதுக்கு மேல் வயதை மதிப்பிட முடியாது. மாநிறம். கூர்மையான நாசி. காது மடல்கள் அளவாக இருந்தன.

தாடியில்லாமல் மீசையுடன் காட்சியளித்தவர்கள் துரிதமாக இயங்கினார்கள். ஒருவர், ஆதித்யாவின் வெட்டுப்பட்ட கரங்களை வாழை மட்டையில் எடுத்து வைத்தார். இன்னொருவர், அவனைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டார். மூன்றாவது நபர், தாராவின் கைகளைப் பிடித்தார். நான்காவது நபர் வழிகாட்ட, அவர்கள் அனைவரும் வேகமாக நடந்தார்கள்.

இவர்கள் எல்லாம் யார்... எங்கு அழைத்துச் செல்கிறார்கள்... எதுவுமே தாராவுக்கு புரியவில்லை. தெரியவில்லை. ஆனால், சில நாட்களாக நடைபெற்று வரும் எதிர்பாராத சம்பவங்களின் தொடர்ச்சி இது என்பது மட்டும் அவள் சிற்றறிவுக்கு எட்டியிருந்தது. எனவே முரண்டு பிடிக்காமல் அவர்களுடன் சென்றாள்.

பொழுது விடிந்திருந்ததால் திரிசங்கு சொர்க்கத்தை அவளால் இப்போது தெளிவாகப் பார்க்க முடிந்தது. அகலமான சாலைகள். வானுயர்ந்து நிற்கும் பொன்வேய்ந்த மாட மாளிகைகள். எட்டு திசையிலிருந்தும் இசை கானங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. புரவிகள் பூட்டப்பட்ட சாரட்டில் மனிதர்கள் சிலர் பறந்து கொண்டிருந்தார்கள். சிவப்பு நிற பட்டில் அவர்கள் ஆடைகள் அணிந்திருந்தார்கள். தங்க, வைர நகைகள் அனைவரது மார்பையும் அலங்கரித்தன.

இனம் புரியாத நிறைவுடன் இதையெல்லாம் பார்த்தபடி வந்து கொண்டிருந்த தாராவின் இதயம் சட்டென்று துடிப்பதை நிறுத்தியது. கண்கள் விரிய தங்களை அழைத்துச் செல்லும் மனிதர்களையும், தரையையும் மாறி மாறிப் பார்த்தாள். அச்ச உணர்வு அவளைத் தொற்றிக் கொண்டது.

காரணம், பாதரச சாலையில் அவளது நிழலும், எவர் தோளிலோ சுயநினைவற்று படுத்திருந்த ஆதித்யாவின் நிழலும் விழுந்தன.

ஆனால் -
மற்றவர்கள் யாருடைய நிழலும் சூரிய ஒளிபட்டு தரையில் சின்னப் புள்ளியாகக் கூட விழவேயில்லை.
அதிர்ந்து போனாள். அவளது நடையின் வேகம் குறைந்தது.
‘‘கண்டுபிடிச்சுட்டீங்களா?’’ - அவள் கையைப் பிடித்திருந்த மனிதன் சிரித்தான். ‘‘நீங்க புத்திசாலின்னு தலைவர் சொன்னது சரியாத்தான் இருக்கு. எதுவா இருந்தாலும் நம்ம இடத்துக்கு போனதும் பேசிக்கலாம். இப்ப அமைதியா எங்க கூட வாங்க...’’
முன்னால் சென்றுகொண்டிருந்த மனிதன் கத்தினான். ‘‘நம்ம நேரம் முடியறதுக்குள்ள நம்ம இடத்துக்கு போயாகணும். ம்... வாங்க!’’
நடந்தார்கள். ஆனால், ஓடுவது போலவே தாராவுக்குத் தெரிந்தது. அகலமான சாலையை தவிர்த்துவிட்டு பசுமையான ஒரு தோட்டத்துக்குள் புகுந்தார்கள். புதர் போல் வளர்ந்திருந்த புற்கள், இவர்கள் வருவதையறிந்து பிரிந்தன. வழி விட்டன.

உருவான ஒற்றையடிப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் நடந்தார்கள். வழிகாட்டும் மனிதர் முன்னால் சென்றார். தாரா இறுதியாக வந்தாள். ஒவ்வொரு அடியை அவள் எடுத்து வைத்த பின்னும் ஒற்றையடிப் பாதை மறைந்தது. போலவே ஒவ்வொரு அடியை அந்த வழிகாட்டும் மனிதர் எடுத்து வைக்கும்போதுதான் பாதையே உருவானது.

அதிசயத்துடன் இந்த மாயாஜாலத்தைப் பார்த்த தாரா, இன்னொரு ஆச்சர்யத்தையும் அனுபவித்தாள். நாகலிங்கப் பூவின் மணமும், ரோஜாவின் வாசனையும் தாராவின் நாசியை நிரப்பின. ஆனால், அந்தப் பூக்கள் அவள் கண்களுக்கு தெரியவேயில்லை. சுற்றிலும் புற்கள்தான் அடர்ந்திருந்தன.
கிட்டத்தட்ட முந்நூறு அடிகள் அவர்கள் இப்படி நடந்ததும் நதியொன்றை அடைந்தார்கள். பால் போல் வெண்மை பொங்க நீர் ஓடிக் கொண்டிருந்தது.

‘‘நாம அக்கரைக்கு போக ணும்...’’ - தாராவின் கைகளைப் பற்றியிருந்த மனிதர் கிசுகிசுத்தார்.
புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையசைத்த தாரா, அந்த மனிதரின் பிடியைத் தளர்த்திவிட்டு தன் ஜீன்ஸை மடித்துவிட குனிய முற்பட்டாள்.
‘‘என்ன செய்யறீங்க?’’ பிடியை இறுக்கியபடி அந்த மனிதர் கேட்டார்.

‘‘தண்ணில இறங்கணுமே...’’
‘‘முட்டாள்தனமா எதுவும் செய்யாதீங்க. நம்ம இடத்துக்கு போய்ச் சேர்ற வரைக்கும் என் பிடியை நீங்க விடக் கூடாது...’’
‘‘ஜீன்ஸ் நனைஞ்சுடுமே..?’’
‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது...’’ - அவளைப் பிடித்தபடி அந்த மனிதர் நதியில் இறங்கினார்.
உண்மைதான். பாதத்தைத் தாண்டி தண்ணீர் அவள் காலை நனைக்கவேயில்லை. திகைத்தாள். நீரில் நடக்கிறோமா?
‘‘ஆமா...’’ அவள் மனதைப் படித்ததுபோல் பதிலளித்த அந்த மனிதர் தொடர்ந்தார். ‘‘இமயமலையை விட இந்த நதியோட ஆழம் அதிகம்...’’
கேட்டவளுக்கு தலை சுற்றியது. கால்கள் நடுங்கின. தடுமாறினாள். ‘‘பயப்படாம எங்க நான் கால் வைக்கிறேனோ அங்க உங்க பாதத்தை வைங்க...’’ - சொன்ன அந்த மனிதரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு ஆற்றில் நடந்தாள். சில நிமிடங்கள்தான். ஆனால், பல யுகங்கள் போல் அவளுக்குத் தெரிந்தது.

ஒருவழியாக ஆற்றைக் கடந்தார்கள். தொலைவில் கோட்டை ஒன்று அவர்களை வரவேற்றது. அதைப் பார்த்ததுமே தாரா மிரண்டாள். உயரமானதுதான். வலுவானதுதான். ஆனால், இதுவரை திரிசங்கு சொர்க்கத்தில் அவள் பார்த்த எந்தக் கட்டிடமும் போல் அந்தக் கோட்டை இல்லை. குறிப்பாக பொன்னால் அது கட்டப்படவில்லை. பதிலாக பூமியில் எப்படியொரு கோட்டை கட்டப்படுமோ, அப்படி அது கற்களால் எழுப்பப்பட்டிருந்தது.

‘‘இது மட்டும் மனுஷனால உருவாக்கப்பட்டது போலிருக்கே..?’’ - வார்த்தைகளை விழுங்கியபடி கேட்டாள்.
‘‘ஆமா... ராஜராஜ சோழனால கட்டப்பட்ட கோட்டையோட ஙிணீநீளீ ஹிஜீ இது. அந்தக் கோட்டைய யார் கட்டினாங்களோ, அவங்கதான் அதே போல இங்கயும் எழுப்பியிருக்காங்க...’’ என்ற அந்த மனிதர், ‘‘அதுதான் நம்ம இடம்... நெருங்கிட்டோம்...’’ என்றார்.

சின்னதாகத் தெரிந்த அந்தக் கோட்டை அருகில் செல்லச் செல்ல தன் பிரமாண்டத்தை உணர்த்த ஆரம்பித்தது. கோட்டையை நெருங்கியதும் முன்னால் சென்ற மனிதர் அண்ணாந்து பார்த்தார். கோட்டையின் மேற்புறம் மனித நடமாட்டமே இல்லை. ஆனாலும் அடிவயிற்றிலிருந்து குரல் கொடுத்தார். ‘‘ஐம் க்லீம் சௌ...’’

உடனே இரும்புகள் உருளும் சத்தம் இடி போல் ஒலித்தது. அதனையடுத்து கரகரவென ஒலியுடன் கோட்டைக் கதவுகள் திறந்தன.

ஆனால், முன்னால் இருந்த மனிதர் அதனுள் நுழையவில்லை. பதிலாகத் திரும்பி, ‘‘இளவரசிய இங்க கூட்டிட்டு வா...’’ என்று தாராவின் கையை பிடித்திருந்த மனிதரிடம் கட்டளையிட்டார்.
அந்த மனிதரும் தாராவை அழைத்து வந்து முதல் மனிதரிடம் ஒப்படைத்தார். அவளது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட முதல் மனிதர், ‘‘எல்லாரும் பின்னாடி போங்க...’’ என்று கட்டளையிட்டார். சீராக அடியெடுத்து வைத்தபடி மற்றவர்கள் பின்வாங்கினார்கள். ஆறடி நகர்ந்ததும் அரைவட்ட வடிவில் நின்றார்கள்.

தாரா மலங்க மலங்க விழித்தாள். ஆதித்யாவின் மயக்கம் இன்னும் தெளியவில்லை. துண்டான அவன் கைகள் வாழை மட்டையில் துடித்துக் கொண்டிருந்தன. திறந்திருந்த கோட்டைக் கதவிலிருந்து யாரும் வெளிவரவுமில்லை. இவர்களும் உள்ளே நுழையவில்லை.

ஏன் இப்படி நிற்கிறார்கள்... தன்னை என்ன செய்யப் போகிறார்கள்... விடைதெரியாத கேள்வியுடன் அந்த முதல் மனிதரை ஏறிட்டாள்.

‘‘நீங்கதான் இளவரசின்னு எங்களுக்குத் தெரியும். ஆனா, இந்தக் கோட்டைக்கும் அது தெரியணும் இல்லையா? அதனால...’’
‘‘அதனால?’’
‘‘உங்க அடையாளத்தைக் காட்டுங்க...’’ என்றார் அவர்.
‘‘அடையாளமா?’’ தாராவின் குரலில் குழப்பம் சூழ்ந்தது.
‘‘ஆமா...’’
‘‘வாட் டூ யூ மீன்?’’
‘‘ஐ மீன் வாட் ஐ ஸே...’’ என்ற அந்த முதல் மனிதர், மைக்ரோ செகண்ட் கூட தாமதிக்காமல் தாராவின் இரு கைகளையும் ஒன்று சேர்த்தார். அவளது கட்டை விரல் நகங்களை ஒன்றுடன் ஒன்று உரசினார்.

இதனை அடுத்து மற்றவர்கள் எதிர்பார்த்த, ஆனால், தாரா எதிர்பார்க்காத அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அவள் கைகள் விறகைப் போல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. ஜ்வாலாமாலினியாக ஜொலித்தாள். ஆனால் அந்த வெப்பம், அவளது கைகளையோ, காலையோ தாக்கவேயில்லை. பதிலாக ஐஸ்கட்டியில் இருப்பது போல் குளிர்ந்தாள்.
பிரமை பிடித்து நின்ற தாராவை யாரோ, ‘‘வாம்மா, வா...’’ என அழைத்தார்கள்.

யார் என்று பார்த்தாள்.
பூரண கும்ப மரியாதையுடன் கோட்டைக்குள்ளிருந்து ஒருவர் வாய் நிறைய புன்னகையுடன் பரிவாரங்கள் சூழ வந்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் தாரா அதிர்ந்தாள்.
காரணம், யார் இறந்துவிட்டதாக அவளுக்குச் செய்தி வந்ததோ, யார் முகத்தைப் பார்க்கவே கூடாது என்று இறுதிச் சடங்கிற்குக் கூடச் செல்லாமல் சென்னையிலிருந்து மும்பைக்கு வந்தாளோ... அவர்தான் வந்து கொண்டிருந்தார்.
அவர், தாராவின் அப்பா.
(தொடரும்)