கள்ளிக்காட்டு காதல்கள்!





காதலுக்காக உயிர் தந்து
கடவுளாக இன்றும் வாழும்
தெக்கத்தி ஆத்மாக்களின் கதை

‘கண்ணங்காடு’ங்கற கிராமத்துல எல்லாருக்கும் பிழைப்பே ஆடு மேய்க்கிறதும், கெடை போடுறதும்தான். நெலத்துல கெடை போட்டா, ஆட்டுப்புழுக்கை ஒரமாகி வெள்ளாமை செழிக்கும். கெடைக்கு அதிகாரியா காந்தரூவன்னு ஒருத்தன் இருந்தான். எந்தெந்தப் பிஞ்சையில் கெடை போடணும்னு பிஞ்சைக்காரங்ககிட்ட விசாரிச்சிட்டு வாரதும், கெடை போட்டவங்ககிட்ட கூலி வாங்கிக் கொண்டு வந்து ஆடு மேய்க்கிறவங்களுக்குக் கொடுக்கறதும் தான் அவன் வேலை.

அன்னைக்கும் அப்படித்தான். யாருக்கு கெடை வேணுமின்னு அவன் விசாரிச்சிட்டு வரும்போது, கண்டையன் அவனைக் கூப்பிட்டாரு. ‘‘எங்களுக்கு மேலப் பிஞ்சையில இருவது நாள் கெடை போடணும். போட்டுரு. கெடைக்காவலுக்கு எங்க வீட்டுல தோதான ஆளா யாருமில்ல. அதனால நாந் தான் வருவேன். என்னச் சாமம், ஏமம் மாத்திவிட நீ வா!’’ன்னு சொன்னாரு.
காந்தரூவனும் சரி பாப்போமுன்னு சொல்லி ஆட்ட ஓட்டிக்கிட்டு மறுநாள் வந்தான்.

‘‘தாயி! இன்னைக்கில இருந்து காட்டுல இருவது நாளைக்கு கெட போடுதோம். நாந்தான் கெடக் காவலுக்குப் போறேன். நீ பொழுதடைய எனக்கு ராச்சாப்பாட்டக் கொண்டாந்து கொடுத்துரு’’ன்னு கண்டையன் தன் மக சுந்தரிகிட்ட சொல்லிட்டு கெடைக்குப் புறப்பட்டாரு.

சுந்தரியும் அதுபடியே ரெண்டு நாளு கஞ்சி கொண்டு போனா. தூரத்தில கஞ்சிக் கலயத்தோட மக வாரத பார்த்தா போதும்... கண்டையன் குறுக்கால நடந்து வந்து கஞ்சிக் கலயத்த வாங்கிருவாரு. ‘‘பொழுது அடையுத நேரம்... நீ காவத்தா போயிட்டு வாம்மா’’ன்னு சொல்லி அனுப்பி வச்சிருவாரு.

மூணாவது நாளு கஞ்சி வார நேரம்தான். கண்டையன் மடிய திறந்து பாக்காரு... வெத்தலயும் சுண்ணாம்பும் இருக்கு; பாக்கு இல்ல. வெத்தல போடாம அவருக்கு ஒண்ணும் ஓடாது. ‘‘நானு ஊருக்குள்ள இருக்க கடையில போயி பாக்கு வாங்கிட்டு வந்துருதேன். நீ அதுவரைக்கும் கெடயப் பாத்துக்கோ’’ன்னு காந்தரூவன்கிட்ட சொல்லிட்டுப் புறப்பட்டாரு.
அவர் போன கொஞ்ச நேரத்துல சுந்தரி கஞ்சிக் கலயத்தோட வந்தா. பிஞ்சய நெருங்கும்போதே வேகமா வந்து கஞ்சிய வாங்கிட்டுப் போற அய்யாவக் காணாம திகைச்சிப் போயி சுத்தி முத்திப் பாத்துக்கிட்டே காந்தரூவன் கிட்ட வந்தா. சூரியனே கெறக்கத்துல சுதி எறங்குற நேரம்... தங்க நெற வானம் போலவே இவளும் தங்கச் சிலையா நிக்கிறா. இவ அழகைப் பார்த்து அவனும் சிலையா நின்னான்.

சொழட்டி சொருகி இருக்கற கொண்டையிலயும் கழுத்திலயும் ஆவாரம்பூவை சொருகி மாலையா போட்டுருக்கா. தூக்கிக் கட்டியிருக்க நவ்வாப் பழத்துக் கண்டாங்கி சேலையில அவ கெண்டைக்காலும், அந்தக் கால்ல அவ குத்தியிருக்க ஆடும் மயிலோட சித்திரப் பச்சையும் அவனுக்குத் தெரிஞ்சுது. காந்தரூவன் சொக்கிப்போயி வச்ச கண்ண எடுக்காம அவளயே பாத்துக்கிட்டு இருந்தான். இவளும் காந்தரூவனப் பாத்துக்கிட்டே இருந்தா. சின்னச் சின்ன ஆடுகளுக்குள்ள நின்னதால ஏற்கனவே உசரமான அவன், இவ கண்ணுக்கு இன்னும் உயரமா தெரிஞ்சான். காத்து கோதலுக்கு அவன் முடி சிலும்பி சிலும்பி ஆடுற அழகை அவ கண்ணு விரியப் பாத்துக்கிட்டு இருந்தா. அப்ப ஒரு ஆடு அவ கால உரசி, ‘மே...’ன்னு கத்திக்கிட்டு ஓட...
சுந்தரி சுய நினைவுக்கு வந்தா.

ஒரு இளந்தாரி முன்னால கூசாம நிக்கோமேன்னு வெக்கப்பட்டுக்கிட்டே, ‘‘அய்யாவுக்குக் கஞ்சிகொண்டு வந்தேன். அவரக் காணோமே’’ன்னு தலையில இருந்த கஞ்சிக் கலயத்த இறக்கினா.
‘‘அவரு பாக்கு வாங்க ஊருக்குள்ள போயிருக்காரு’’ன்னவன், அவ கலயம் எறக்க ஒரு கை புடிச்சான். அப்ப அவன் கையி இவ விரல் மேல் பட, சுந்தரிக்கு வெக்கம் தாங்கல. ‘‘அய்யா வந்தா கொடுத்திருங்க’’ன்னு சொல்லிட்டு, அவனத் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டே வீடு வந்து சேந்தா.

இவ போனதுமே, கலயத்துல என்ன கஞ்சி இருக்குன்னு திறந்து பார்த்தான். சோளக்கஞ்சியும், சூடக்கருவாட்டுக் குழம்பும் இருந்துச்சி. மசாலா வாசனை ஆளைத் தூக்குது. ஒரு வாயி சாப்பிட்டு பாப்போம்னு கொஞ்சம் எடுத்து வச்சான்... அவ்வளவுதான்! நாக்குலயே ருசி ஒட்டிக்கிடுச்சி. ‘கொஞ்சம்... இன்னும் கொஞ்சந்தான்’னு சொல்லிச் சொல்லி ஒரு கலயம் கஞ்சியவும் குடிச்சிப்புட்டான்.
கடைக்குப் போன கண்டையன் திரும்பி வந்தாரு. அவருக்கு பசி பொறுக்க முடியல. ‘‘இன்னும் கஞ்சிய காணமே... வவுத்துப்பசி தீயாப் புடிக்கே’’ன்னு சொல்லிக்கிட்டு வழிய வழியப் பாக்காரு. காந்தரூவனும் பேச்சு மூச்சு காட்டாம இருந்துக்கிட்டான். கண்டையன் ரா விடிய பட்டினியில அலமோதிக்கிட்டே காவல் இருந்தாரு. பொழுது விடிஞ்சும் விடியாம வேகுவேகுன்னு வீட்டுக்கு வந்தவரு, ‘‘ராத்திரி கஞ்சி கொண்டு வராம என்னப் பட்டினியா போட்டுட்டயேம்மா’’ன்னு ரொம்ப கோவிச்சாரு.

சுந்தரிக்கு திக்குன்னுச்சி. ‘‘இல்லையேய்யா... கஞ்சி கொண்டு வந்தனே’’ன்னு சொல்லப் போனவளுக்கு, காந்தரூவன் நினைவு வந்துருச்சி. ‘சரி... அவருதான் கஞ்சிய குடிச்சிருப்பாரு’ன்னு நெனச்சவ, ‘‘ஒரே வயித்து வலிய்யா... அதான் கஞ்சி கொண்டார முடியல’’ன்னு ஒரு பொய்யச் சொல்லி வச்சா.

இப்பவெல்லாம் சுந்தரி ரெண்டு கலயத்தில கஞ்சி கொண்டு போறா. ஒண்ணு அய்யாவுக்கு; ஒண்ணு காந்தரூவனுக்கு. கெடை போட்டு பத்து நாளைக்கு மேல ஆயிப்போச்சி. அன்னைக்கு தினத்துக்கு கண்டையன்கிட்ட வெத்தல துப்பரவா இல்ல. காந்தரூவன்கிட்ட சொல்லிட்டு வெத்தல வாங்க ஊருக்கு வந்தாரு. கொஞ்ச தூரத்தில சுந்தரி கஞ்சிக் கலயத்தோட வாரதப் பார்த்தாரு. ‘என்ன இது... இந்நேரத்துக்கே இவ கஞ்சி கொண்டு வாரா’ன்னு யோசனை ஓடும்போதே, அவ தலையில ரெண்டு கலயம் இருக்குறத கண்ணு பாக்குது.

‘நமக்கு தினம் ஒரு கலயம் கஞ்சிதானே கொண்டு வாரா... சரி, இன்னொரு கலயத்துக் கஞ்சிய யாருக்குக் கொடுக்கான்னு பாப்போம்’னு அப்படியே அங்கன கள்ளிப்புதருல மறைஞ்சிக்கிட்டாரு. இவரு தலை மறைஞ்சதுமே காந்தரூவன் கம்மங்காட்டு வழியா அங்க வாரான். அவனப் பாக்கவும், இவ கலயத்தோட ஓடி வாரா. பிறவு ரெண்டு பேரும் கலயத்துக் கஞ்சிய ஒருத்தருக் கொருத்தரு ஊட்டிக்கிட்டு, கொஞ்சிக்கிட்டு, குலாவிக்கிட்டு இருக்காக.

பாத்த கண்டையனுக்கு கண்ணு ரெண்டும் நெருப்புத் துண்டா மாறிப் போச்சி. ‘போயும் போயும் சாதிவிட்டு, வேற சாதிக்காரப் பயலோடவா ஒண்ணா மண்ணா திரியுதே’ன்னு கோவத்தோட நேரா கெடைக்கு வந்தாரு. கெடையில காந்தரூவனக் காணோம். வேற ஒரு பய நிக்கான். ‘‘எங்கடா அவன..?’’ன்னு கேட்டதுக்கு, ‘‘இங்கன ஒரு சோலியாப் போயிருக்காரு. இந்தா ஒரு மூச்சில நானு போயி கூட்டி வாரேன்’’னு அவன் ஓடுனான்.

பொழுது அடைய, சுந்தரி எப்பவும் போல அய்யாவுக்கு கஞ்சிகொண்டு வந்து கொடுத்தா. கண்டையன் அவளையே குறுகுறுன்னு பாத்தாரு. அந்தப் பார்வை அவளுக்கே வித்தியாசமா இருந்துச்சி. ‘‘என்னய்யா அப்படி பாக்கீரு?’’ன்னு கேக்கப் போனவ, மனசுக்குள்ள குத்தம் குறுகுறுத்ததால பேசாம இருந்தா.



‘‘நாளையில இருந்து நீ கஞ்சி கொண்டு வர வேணாம். கெட முடியுது’’ன்னாரு கண்டையன். சுந்தரி நடந்தா. அவ மனசு படபடன்னுச்சி. நெஞ்சுக்குள்ள காதலும், பயமும் அலை அலையா அடிக்குது.

தூரத்து ஊருல இருந்த தன் பிள்ளைங்க மூணு பேத்தையும் வரவழைச்சாரு கண்டையன். ‘‘நம்ம வீட்டுப் பொண்ண தொட்டவனை ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கிட்டு வருவோம்’’னு அவுககிட்ட அவர் சொல்லிக்கிட்டிருந்ததை சுந்தரி கேட்டுட்டா. கொல்லக் கதவத் திறந்துக்கிட்டு காதலன்கிட்ட ஓடினா. அவ காலடிச்சத்தம் கேட்டு அவ அண்ணங்களும், அய்யாவும் பின்னாலயே ஓடினாங்க.

நேரா காந்தரூவன்கிட்ட போனவ, ‘‘என் அண்ணங்க உன்ன வெட்ட வாராக. எங்கயாவது போய் பிழைச்சிக்கோ!’’ன்னு சொன்னா.

‘‘நீயும் வந்துரு... போயிரு வோம்!’’ன்னான் அவன். இதுக்குள்ள அவ அண்ணங்க வந்துட்டாங்க. சுந்தரியை ஒண்ணும் செய்ய மாட்டாங்கன்னு நெனச்சு காந்தரூவன் அங்கிருந்த புளியமரத்துல ஏறி ஒளிஞ்சுக்கிட்டான். வந்தவுங்க காந்தரூவனைக் காணாத கோவத்துல இவளை வெட்டிக் கொன்னுட்டாங்க. அவ இல்லாத வாழ்க்கை எதுக்குன்னு காந்தரூவனும் கூடவே செத்துப் போனான்.

காதலுக்காக உயிர் விட்ட இவங்களுக்கு இன்னைக்கும் கந்தர்வக்கோட்டை பக்கத்துல கோயில் இருக்கு...