டூர் ஸ்பாட் ஆன ஷூட்டிங் ஸ்பாட்





‘‘சினிமா எடுக்க இப்போல்லாம் ஃபிலிமே ஆடம்பரம்... இதில் ஃபிலிம் சிட்டியெல்லாம் எதுக்கு?’’ என்கிறது நவீன சினிமா. இந்தப் பரிணாம மாற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில்தான் தன்னைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது ஆந்திராவின் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி.


ஒரு காலத்தில் சினிமாக்காரர்களுக்காக கட்டப்பட்ட இந்த நகரம், இப்போது வெறும் ஷூட்டிங் ஸ்பாட் மட்டுமல்ல; ‘‘நோ பீஸ் ஆஃப் மைண்ட்...’’ என்று நொந்துகொள்கிறவர்களுக்கும்; குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடத் துடிப்பவர்களுக்கும்; பட்ஜெட் தேனிலவுக்கு ப்ளான் போடுகிறவர்களுக்கும் ஒரு ஜாலி சொர்க்கபுரியாகவும் திகழ்கிறது!

2000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஃபிலிம் சிட்டி, உலகிலேயே பெரிய ஃபிலிம் ஸ்டூடியோ காம்ப்ளக்ஸ் என்று கின்னஸ் சாதனையை தன் வசம் கொண்டுள்ளது. மொத்த நகரமும் இயற்கையாக அமைந்த மலைகளுக்கிடையே வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஓர் அழகுப் பெண்ணின் மேனியைப்போல ஏற்ற இறக்கங்களுடன் வளைந்து நெளிந்து செல்லும் தார்ச் சாலைகளின் பளிச் அழகே தனிதான். வண்ணத்துப்பூச்சி பூங்கா, பிருந்தாவன பூங்கா, போன்சாய் மரங்கள் அடர்ந்த பூங்கா என வண்ணமயமாகத் தொடங்கும் சாலையில் அடுத்தடுத்த காட்சிகள், இயற்கை அழகின் சாட்சிகள்.



ஜெய்ப்பூர், ரோம், டோக்கியோ, ஊட்டி போன்ற லொகேஷன்கள் இங்கு செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒரே கல்லில் ஒரு மாந்தோப்பையே வீழ்த்திய திருப்தி கியாரன்டி. குறிப்பாக அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்கள் ஒரிஜினலுக்கே சவால் விடும் அளவுக்கு செம நேர்த்தி!

தண்ணீருக்கு அடியில் ஷூட்டிங் நடத்தும் லொகேஷன், தென்னிந்திய, வட இந்திய தெருக்கள், கோயில்கள், மசூதிகள், கல்யாண மண்டபம், லண்டன் மாநகர வீதிகள், மருத்துவமனை, ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் என அத்தனை செட்களும் தத்ரூபம். சோகப் பாடலை படம் பிடிப்பதற்காகவே கள்ளிச்செடிகளும் கற்பாறைகளும் நிறைந்த ஒரு லொகேஷன் கண்ணைக் கசக்கு
கிறது.



இப்போதும் பல தென்னிந்திய பிரமாண்ட படங்களின் ஷூட்டிங்குகள் இங்கு நடக்கின்றன. ‘எந்திரன்’ படத்தின் ‘அரிமா... அரிமா...’ பாடல் செட்டும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ தெலுங்குப்பட செட்டும் இன்னும் பிரிக்கப்படாமல் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. சினிமா உலகம் மட்டுமே அறிந்த இவற்றையெல்லாம் பொதுமக்களும் பார்க்கலாம் என்பதே இந்த ஃபிலிம்சிட்டி நிர்வாகத்தின் புது ஐடியா.
இங்கு, ‘கௌபாய் சிட்டி’ என்ற இடத்தில் திரைப்படத்தில் வருவதுபோன்ற சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக செய்துகாட்டுகிறார்கள். ‘ராமோஜி மூவி மேஜிக்’ என்ற இடத்தில், ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக விளக்குகிறார்கள். பார்வையாளர்களிலிருந்தே நாயகன், நாயகியைத் தேர்வு செய்து அவர்களை நடிக்க வைத்துப் படமாக்குகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் படத்தில் கிராஃபிக்ஸ், இசை, எடிட்டிங், மிக்ஸிங் அனைத்தும் சேர்த்து சில நிமிடப் படங்களாகப் போட்டுக் காட்டுவது புது அனுபவம்.



பயணிகள் தங்குவதற்கும் உணவருந்தவும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்களின் அலுவலக கூட்டங்கள் நடத்துவதற்காக குளுகுளு அரங்குகள், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கான தனி மண்டபங்கள் என்று மேலும் பல புதிய உபதொழில்களில் இறங்கிவிட்டது இந்த ஃபிலிம் சிட்டி. காலமாற்றத்தில் காணாமல் போய்விடாமல் இருக்க, என்னவெல்லாம் செய்ய நேர்கிறது!
- அமலன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்