எழுத்தும் எனர்ஜியும்





ஓரறிவு ஜீவராசிகளின் உணர்வுகளையும் மொழியாக்க வல்லது ஏ.பி.முகனின் எழுத்து. இயற்கையின் மீதான நேசிப்பும், வாழ்தலின் மீதான நம்பிக்கையும், சமூக அவலங்களுக்கு எதிரான உக்கிரமும், மனதைத் தாக்குகிற உளவியல் தன்மையும் முகனின் படைப்புகளை தனித்துவமாக அடையாளப்படுத்துகின்றன.

‘வளையத் தெரிந்த மரங்கள்’, ‘அந்தரங்க மனசு’, ‘மறப்பதற்கு மனிதன் அல்ல...’ ஆகியவை முகனின் அடையாளமான இலக்கியப் படைப்புகள். ‘கறுப்பில் இருந்து சிவப்பு வரை’ என்ற மிக விரிவான இவரது ஜோதிட வரலாற்று நூல், ஜோதிடத்தின் உள்ளீடுகள் பற்றி அழுத்தமான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏ.பி.முகனின் விரிவுப்பெயர், ஏ.பாலமுருகன். படைப்பாளியாக, சினிமாக்காரராக இயங்கும் இவரின் பிரதான அடையாளம் ஜோதிடர்.

‘‘நான் பிறந்த மூணு மாசத்துல அம்மாவுக்கு மனநிலை பாதிச்சிருச்சு. ஒருமுறை என்னைத் தூக்கி கீழே எறிஞ்சுருச்சு அம்மா. என்னைப் பாத்துக்கிறதுக்காக அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணினார். அந்த அம்மா, ரெண்டாவது பிரசவத்தப்போ இறந்து போச்சு. அதுக்குப் பிறந்த குழந்தையைப் பாத்துக்கிறதுக்காக 3வது கல்யாணம் பண்ணிக்கிட்டார் அப்பா. எல்லாத்தையும் சேத்து மொத்தம் மூணு பிள்ளைகள். அப்பாவுக்கு வெங்காய வியாபாரம். பழைய இரும்பு வாங்கிக்கிட்டு அதுக்குப் பதிலா வெங்காயம் கொடுப்பார்.

சின்ன வயசுல விளையாட்டில தீவிர ஆர்வம். Ôபி.டி வாத்தியார் ஆயிருவேடா’ன்னு எங்க சார் சொல்லுவார். கபடி, அத்லெட்டிக்னு எந்த விளையாட்டுப் போட்டி நடந்தாலும் போய் கலந்துக்கிட்டு கப்போடதான் திரும்புவேன். எழுத்து, ஏழாம் வகுப்புலயே ஆரம்பிச்சிருச்சு. எங்க தமிழ் அய்யா, ‘முல்லை’ன்னு ஒரு தலைப்பைக் கொடுத்து. கதை, கவிதை, கட்டுரை ஏதாவது ஒண்ணை எழுதிக்கிட்டு வரணும்னு வீட்டுப்பாடம் கொடுத்தார். என்னவோ எழுத்தை மடக்கி, மடக்கி எழுதுனேன். ‘கவிதைடா...’ன்னு பாராட்டுனார் தமிழய்யா. அப்போ எனக்குள்ள ஒரு கவிஞன் புகுந்துட்டான். பிளஸ் 2 படிச்சுக்கிட்டிருந்தப்போ, மகேந்திரன்னு ஒரு நண்பன். ‘திருச்சியில நேவிக்கு ஆளெடுக்கிறாங்க, நீயும் வர்றியா’ன்னு கேட்டான். உற்சாகமா கிளம்பிட்டேன். லாங் ஜம¢ப், ஹை ஜம்ப்னு எல்லாத்திலயும் செலக்ட் ஆயிட்டேன். ‘6 மாசத்துக்குள்ள கடிதம் வரும். சர்டிபிகேட் வெரிபிகேஷனுக்கு வந்திரு’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

நேவியில வேலை கிடைக்கப் போகுது. பிறகெதுக்குப் படிப்பு..? 6 மாசத்தை ஓட்டணுமேன்னு ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியில வேலைக்குச் சேந்தேன். பாலக்காடு கிளையில தூக்கிப் போட்டுட்டாங்க. அந்த சமயத்துல நேவியில இருந்து வீட்டுக்கு வந்த லெட்டரை எனக்கு அனுப்பாம விட்டுட்டாரு அப்பா. தகவல் தெரிஞ்சு, அடிச்சிப் பிடிச்சு ஓடுனா, ‘தேதி முடிஞ்சு போச்சு.. வீட்டுக்குப் போ’ன்னு அனுப்பிட்டாங்க. எதுக்காக படிப்பை பறிகொடுத்தேனோ அது கைவிட்டுப் போயிடுச்சு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

நேவி வேலை போனபிறகு, எனக்குள்ள இருந்த கவிஞன் விழிச்சுக்கிட்டான். முழுநேரமும் எழுத்துதான். என்னை மாதிரியே ‘இலக்கிய வெறி’யோட சுத்திக்கிட்டிருந்த ‘எத்தன்’ சுரேஷ், லிங்குசாமி, பிருந்தாசாரதி, கலைமணி, ராஜாசங்கர் நேரு, சுபஹான், சேதுராமன், பரணி எல்லாரும் ஒண்ணு கூடி ‘மலரும் பூக்கள் வளரும் மன்றம்’னு ஒரு இலக்கிய அமைப்பை ஆரம்பிச்சோம். கவிதை வாசிப்பு, கருத்தரங்கம்னு வாழ்க்கை படுஸ்பீடா ஓடுச்சு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோட தொடர்பு கிடைச்ச பிறகு, இன்னும் வீரியமா எழுத்து மாறிடுச்சு. எழுத்தோட சேர்த்து சமூகப் பணிகள்லயும் இறங்குனோம். இந்த உலகத்தையே எழுத்தால புரட்டிப் போட்டுடணும்ங்கிற வெறி..’’ - சிரிக்கிறார் முகன்.



‘‘இளையராஜா சாரோட சகோதரர் பாஸ்கர், ஒரு நிகழ்ச்சிக்காக கும்பகோணம் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில இளையராஜா பத்தி ஒரு கவிதை படிச்சேன். பாஸ்கர் என்னைக் கூப்பிட்டு, ‘கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. நீங்க சென்னை வந்து அண்ணனைப் பாருங்க...’ன்னு சொன்னார். அந்த வினாடியில புடிச்சுது சினிமா கிறுக்கு. மனசுக்குள்ள பெரிய சினிமா பாடலாசிரியன் ஆகிட்டேன்.
சென்னையில ஒரு தமுஎச மாநாடு நடந்துச்சு. அதுக்கு போனவன், நேரா இளையராஜா சார் வீட்டுக்குப் போயிட்டேன். சாயங்காலம் வரைக்கும் வெளியிலயே நின்னேன். வெளியில போயிட்டு வீட்டுக்கு வந்த ராஜா சாருக்கு வணக்கம் வச்சு, விஷயத்தைச் சொன்னேன். ‘நீ பாஸ்கரைக் கூட்டிக்கிட்டு வா’ன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டார். கடைசிவரைக்கும் பாஸ்கரை பார்க்கவே முடியலே. எழில்னு ஒரு நண்பர் சென்னையில இருந்தார். அவரைப் போய் பாத்தேன். ஒரு சின்ன ரூம்ல களஞ்சியம் உள்ளிட்ட நாலு பேர் தங்கியிருந்தாங்க. அதையே நானும் ஜாகையாக்கிக்கிட்டேன். அரிசி வாங்கி வச்சுட்டு எல்லாரும் வாய்ப்புத் தேடி போவாங்க. நான் கஞ்சி செய்வேன். ஊறுகாயை தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவோம். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அலுவலகத்துக்குப் போய் கவிதை நோட்டைக் கொடுப்பேன். ‘போ சொல்லியனுப்புறோம்’னு சொல்லுவாங்க. சில பேர், ‘உன் கையெழுத்து நல்லாயிருக்கு. உதவி இயக்குனராக முயற்சி செய்’னு சொன்னாங்க. அதுக்கும் முயற்சி செஞ்சேன். எதுவும் நடக்கலே.

சாப்பாட்டுக்கே தடுமாற்றமா போச்சு. ஒரு நண்பர் ஓட்டல் சப்ளையர் வேலையில சேத்துவிட்டார். தினமும் காலையில பாண்டியராஜன் சார் வீட்டுக்குப் போயிருவேன். வாசல்லயே நிப்பேன். அவர் முகம் தெரிஞ்சவுடனே ஓடிப்போய் சல்யூட் வைப்பேன். அவரும் சல்யூட் வச்சுட்டு போயிடுவார். ஒருநாள் கூப்பிட்டு விசாரிச்சார். கவிதை நோட்டைக் கொடுத்தேன். ‘நாளையில இருந்து ஆபீசுக்கு வா’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நாலஞ்சு மாசம் போனேன். அதுக்குள்ளயே சினிமா ஆசை குறைஞ்சு போச்சு. திரும்பவும் கும்பகோணம் போனேன். அங்கேயும் காலம் என்னை சுழற்றிச் சுழற்றி அடிச்சுச்சு...’’ - முகனின் வார்த்தைகளில் விரக்தி தொனிக்கிறது.

‘‘ஊர்ல ‘எத்தன்’ சுரேஷ் ஒரு பதிப்பகத்துல இருந்து புத்தகங்கள் எடுத்து வித்துக்கிட்டிருந்தார். அவரோட சேந்து புத்தகங்கள் எடுத்து ஊர் ஊரா சைக்கிள்ல போய் வித்தேன். 100 ரூபாய்க்கு வித்தா 20 ரூபா கமிஷன். படிப்படியா விநியோகஸ்தர் ஆனோம். ஆனா, பல பேர் பணம் தராம ஏமாத்திட்டாங்க. கடன்ல தொழில் நொடிச்சுப் போச்சு. இதுக்கிடையில கும்பகோணத்துலேயே ஒரு லெண்டிங் லைப்ரரி ஆரம்பிச்சேன். அதுல ஒரு பொண்ணை வேலைக்கு வச்சிருந்தேன். அந்தப் பெண், பக்கத்துல வேலை செஞ்ச ஒருத்தனோட ஓடிப்போயிடுச்சு. யார் எவ்வளவு புக் எடுத்தாங்கன்னு கூட கணக்கு இல்லை. அதையும் மூட வேண்டியதாயிடுச்சு.

கடவுள் நம்பிக்கையே இல்லாம இருந்த எனக்கு, இந்தத் தருணத்துலதான் ஜோதிடத்து மேல நம்பிக்கை வந்துச்சு.  ஜோதிடத்தை ஆய்வு செய்யறபோது எல்லாமே அறிவியலாவும், கணிதமாவும் இருந்துச்சு. பள்ளியில படிச்ச நியூட்டன் விதி, பிதாகரஸ் தேற்றம் எல்லாத்தையும் ஜோதிடத்துல பார்க்கமுடிஞ்சுது. என் படைப்புகள்ல ஜோதிட மந்திரங்களும், தத்துவங்களும் என்னையறியாம உள்ளீடுகளா பரவத் தொடங்குச்சு. பத்திரிகைகளுக்கு ஜோதிடம், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுனேன். ஜோதிடம் பார்க்கவும் ஆரம்பிச்சேன். எந்த சினிமா என்னை அங்கீகரிக்காம ஒதுக்குச்சோ, அங்கிருந்த பல ஆளுமைகள் ஜோதிடம் பார்க்க வந்தாங்க. வெளிநாட்டு வாய்ப்புகள் எல்லாம் அமைஞ்சுது. நான் எதை எதிர்நோக்கி சென்னைக்கு வந்தேனோ, அதை ஜோதிடமே எனக்கு பெற்றுக்கொடுத்துச்சு. ஜோதிடம் பார்க்கவந்த ஒரு சினிமா பைனான்சியர், என் பின்புலத்தைக் கேள்விப்பட்டு, ‘நானே பைனான்ஸ் பண்றேன், படம் எடுங்க’ன்னார். ‘தீண்ட தீண்ட’ படம் வந்துச்சு. என் லட்சியம் நிறைவேறிடுச்சு.
ஜோதிடம் பற்றிய என் தேடல் விரிவடைஞ்சுக்கிட்டே இருக்கு. இதுவரைக்கும் எழுதின கவிதைகள், கதைகள், ஆய்வுகளை நூல்களாக்கிட்டேன். ‘விடியும்வரை பேசு’ன்னு என் ரெண்டாவது படத்தையும் எடுத்து முடிச்சுட்டேன். என் ஆழ்மன உணர்வுகளை, என் வாழ்க்கைக்கும் காலத்துக்கும் நிகழ்ந்த போராட்டத்தை, என் மண்ணுக்கும், எனக்குமான தொன்று தொட்ட உறவைப் பத்தியெல்லாம் இன்னும் நிறைய எழுதுவேன். எழுத்து இருக்கிற வரைக்கும் நான் இருப்பேன்...’’
- உக்கிரம் ததும்பச் சொல்கிறார் முகன்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்