அர்ஜுனுக்கு கமல் போட்ட மேக்கப்!

கல்லூரியில் படிக்கும்போதே நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தேன். அவர் நடித்த படம் வெளியாகும் நாளில் டிக்கெட் எடுக்க முதல் ஆளாக தியேட்டரில் நின்ற அனுபவமும் இருக்கு. ஒரு சாதாரண கமல் ரசிகனாக இருந்த நான், அவருடன் சேர்ந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பெரிய பாக்கியமாக நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ என கமலுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் அர்ஜுன்...

‘‘ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘குருதிப்புனல்’ படப்பிடிப்பின்போது எடுத்த படம்தான் இது. கதைப்படி எனக்கு அடிபட்டு காயத்துடன் கிடப்பதுபோன்ற காட்சியைப் படமாக்குவதற்கு முன், என் முகத்தில் கமல் சார் மேக்கப் போட்டு விடுகிறார். மற்ற மேக்கப் மாதிரி இதனை சாதாரணமாகப் போட்டுவிட முடியாது. நன்கு தெரிந்தவர்களால்தான் இதனைச் செய்யமுடியும். கமல் சார்தான் சகலகலா வல்லவனாயிற்றே! உடம்பில் காயம் இருப்பது போன்று மேக்கப் போடும் கலையும் அவருக்குத் தெரியும் என்பதை நான் அன்றைக்குத்தான் தெரிந்துகொண்டேன். இதற்கென்று கமல் தனியாகப் படித்து பயிற்சி எடுத்திருக்கிறாராம்.

எனக்காக அவர் இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டார். ஒரு நிமிடம்கூட ரெஸ்ட் எடுக்காமல் நின்றுகொண்டே இருந்தார். அவரது தொழில் நுணுக்கத்தையும், ஆர்வத்தையும் நேரடியாகப் பார்த்து பிரமித்துப்போன அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அவர் நினைத்தால் அவர் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு ஒதுங்கி நிற்கலாம். ஆனால் கொஞ்சமும் சுயநலம் கருதாத கலைஞன் என்பதால், உடன் நடிக்கும் நடிகர்கள் மீதும் அக்கறை காட்டுவார்.

குறிப்பாக என் மீது அவர் ஸ்பெஷல் கேர் எடுத்துக்கொண்டதை என்றைக்கும் நான் நன்றியோடு நினைத்துப் பார்ப்பேன். சினிமாவை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை அவருடன் சேர்ந்து பணியாற்றும்போது தெரிந்துகொண்டேன். சினிமாவில் புதிதாக வரும் தொழில்நுட்பங்களை முதல்முறையாக செய்து பார்க்கும் தைரியமும் திறமையும் கமலுக்குத்தான் இருக்கிறது.. இயக்குனர் கே.விஸ்வநாத், பி.சி.ஸ்ரீராம், கமல், நாசர் என்று அந்த டீமோடு பணிபுரிந்த அனுபவம் அலாதியானது!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்