கவர்ச்சி டூ கருவாச்சி!





ரம்ஜான் கொண்டாட்டத்தைப் புரட்டிப் போட்ட கோன் மெஹந்தியின் அவலட்சணமான பகீர் பின்னணியைத் தந்து இளைஞிகளை எச்சரித்த விதம் அருமை!
- கவியகம் காஜுஸ், கோவை-24.

‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பது போல, இலங்கையில் போர் முடிந்தாலும் தமிழர்களின் அவலநிலை முடிவுக்கு வராதது மனதை வாட்டுகிறது.
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு.

‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்’ என்பதை சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், வண்ணை சிவாவின் மாவு மில்லும் ‘ஹைக்கூ’ பாடும் என்பதை ‘எமக்குத் தொழில் எழுத்து’ மூலம் தெரிந்துகொண்டோம்.
- எஸ்.கோபாலன், சென்னை.

ஒரு தபால்தலையின் விலை 3.5 கோடி என்றதும் தலையே ‘கிர்ர்’ ஆகிடுச்சு. அபூர்வ ஸ்டாம்புகளைப் பற்றிய செய்திகளைத் தந்து உங்கள் தனி ‘முத்திரை’யைப் பதித்துவிட்டீர்கள்!
- எம்.ஆர்.அனுஷா, பெங்களூரு;
எஸ்.வாசுதேவன், சென்னை-14.

கல்வியை வியாபாரமாக்கியது போல் மருத்துவத்தையும் அரசுகள் கை கழுவ நினைத்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்கின்ற தங்களது நெத்தியடி கருத்து, உரியவர்களுக்கு உறைத்தால் சரி!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

‘தலையைக் காணோம்’ கட்டுரையில் எட்வர்டு நெட் கெல்லி பற்றிய தகவல்கள், விறுவிறுப்பான ஆங்கிலப் படத்திற்கு இணையாக இருந்தது. அவர் கொள்ளுப் பேத்தியின்
வேண்டுகோள்தான் ‘விநோத’ ரஸ மஞ்சரியின் ஹைலைட்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘நேற்றைய பொழுதில்...’ சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனின் போஸ், ஒரு தேன் விருந்து!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

‘நான் பாலாவின் நாயகி’ என்று பெருமையாக வேதிகா கொடுத்திருக்கும் பேட்டி, கிறங்கடிக்கும் ஸ்டில்ஸ் எல்லாம் ஓகேதான். ஆனால், படம் முடியும் வரையில்தான் இப்படியெல்லாம் கவர்ச்சி போஸ் கொடுக்க முடியும். படத்துல மனுஷன் அவரை கருவாச்சியாக்கிட மாட்டாரு?
- வி.சி.கிருஷ்ணன், செங்கை

‘வரும் காலத்தில் கொட்டாவி விட்டால், குறட்டை விட்டால், குப்புறப் படுத்தால் கூட அவதூறு வழக்கு பாயும்’ என்ற ஆல்தோட்ட பூபதியின் நையாண்டி நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய கருத்து!
- எஸ்.சதீஷ், சென்னை-94.

ரா.கி.ர என்ற எழுத்து அருவிக்கு மரணம் அணை கட்டினாலும் காலம் அவரது நினைவுகளை நம் நெஞ்சங்களிலிருந்து மறைக்க முடியாது என்பதற்கு பாக்கியம் ராமசாமியின் அஞ்சலிக் கட்டுரையே அழுத்த சான்று!
- எம்.சம்பத், கரூர்.