கவிதைக்காரர்கள் வீதி





பாசம்
எல்லோரும்
மழையில் நனைந்த
என்னைத் திட்டினார்கள்.
அம்மா மட்டும்
என் தலையைத் துவட்டிவிட்டு
மழையைத் திட்டினாள்.
- காந்திலெனின், திருச்சி.

சுவாசம்
பாகனின் சுவாசம்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
யானையின் தும்பிக்கையில்!
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

மயக்கம்
சோற்றைப் பிசைந்து
ஊட்ட வரும்
பிஞ்சுக் கை அழகைக் கண்டு
வாய் திறக்க மறந்து
மயங்கிக் கிடக்கின்றன
பொம்மைகள்!
- எம்.ஏ.கண்ணன், ராஜபாளையம்.

குழப்பம்
ஏழையின் வீடு
எதைப் பாதுகாக்கின்றன
பூட்டுகள்?
- பெ.பாண்டியன், காரைக்குடி.

ஆனந்தம்
குழந்தைக்கு அம்மா
சோறூட்டும்போதெல்லாம்
குழந்தையின் அழகில்
பசியாறுகிறது
நிலா!
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

விருப்பம்

சிரித்தால் தெரியாத
அழுதால் புரியாத
சேஷ்டைகள் செய்யாத
முகமூடியை ஒருபோதும்
விரும்புவதில்லை,
முகம் பார்க்கும் கண்ணாடி...
- தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.