தூக்கு? எப்போது





‘‘தனது அரக்கத்தனமான செயலுக்கு அஜ்மல் கசாப் எப்போதும் வருந்தியதாகத் தெரியவில்லை. மிகவும் அபூர்வத்திலும் அபூர்வமான, பத்து லட்சத்தில் ஒரு வழக்கான இதில் மரண தண்டனை அளிக்காவிட்டால், வேறு எந்த வழக்குக்கு அளிக்க முடியும்?’’ என்று கேட்டு கசாப்புக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘கசாப்பை உடனே தூக்கில் போட வேண்டும்’ என்கின்றன பல அரசியல் கட்சிகள். ‘மக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்’ என்கிறது சிவசேனா. உண்மையில் இது
சாத்தியமா?

166 பேரை பலிகொண்ட மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் உயிரோடு பிடிபட்ட ஒரே தீவிரவாதி கசாப். சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அந்த தண்டனை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு, இப்போது உச்ச நீதிமன்றமும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியிடம் கருணை மனு போடுவதுதான் கசாப்புக்கு ஒரே வழி. ஜனாதிபதி அதை எப்படி பரிசீலிக்கிறார் என்பதைப் பொறுத்து தண்டனை நிறைவேற்றப்படும்.

பிரணாப் முகர்ஜி அந்தப் பதவிக்குப் புதியவர். கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம் என அரசியல் சட்டத்தில் தெளிவாக இல்லை. 45 நாட்களிலேயே ஒரு மனு நிராகரிக்கப்பட்ட வரலாறும் உண்டு; 20 ஆண்டுகளாக பரிசீலனையில் இருக்கும் மனுவும் உண்டு. கசாப்பின் மனுவுக்கு என்ன கதி நேரும் என்பது சஸ்பென்ஸ்!

‘தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிற பணியாளர்களே இப்போது இந்தியாவில் இல்லை. யாரை வைத்து கசாப்பை தூக்கில் போடுவார்கள்?’ என்று ஒரு விவாதம் பரபரக்கிறது. ஆனால், ‘‘அப்படி குறிப்பிட்ட பணியாளர்கள்தான் இதைச் செய்ய வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. குற்றவாளியின் முகத்தில் கறுப்புத்துணியைப் போர்த்தி, கழுத்தில் கயிற்றின் சுருக்கை போடும் பணியை ஒரு சாதாரண ஜெயிலரே செய்யலாம். லீவரை சிறைக் கண்காணிப்பாளர் இழுத்து, மரண தண்டனையை நிறைவேற்றலாம்’’ என்கிறார் மகாராஷ்டிர டி.ஐ.ஜி. ஸ்வாதி சாத்தே.

மும்பையின் ஆர்தர் ரோடு சிறையில், உயர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் கசாப்பின் பாதுகாப்புக்காகவும் பராமரிப்புக்காகவும் வழக்குக்காகவும் இதுவரை 53 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. உயிரோடு பிடிபட்ட அந்த நிமிடத்திலேயே, தன்னைக் கொன்றுவிடச் சொல்லி போலீசிடம் மன்றாடினான் கசாப். ‘தற்கொலைப்படைத் தீவிரவாதியாக தாக்குதல் நடத்துபவன் செத்து மடிய வேண்டும்’ என்பது தீவிரவாதத்தின் எழுதப்படாத விதி. கசாப் எப்படியும் இறக்கப் போகிறான் என்பதை முடிவு செய்து, பாகிஸ்தானில் இருக்கும் அவன் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டது லஷ்கர் தீவிரவாத அமைப்பு. ஒருவேளை விடுதலை பெற்று சொந்த ஊர் போனாலும், அவனுக்கு முடிவு இதுவாகத்தான் இருக்கும். அவன் விரும்பிய மரணம் அவனுக்கு எப்போது நிகழும்?
- அகஸ்டஸ்