‘‘டைட்டிலைப் பார்த்தவுடனே தெரிஞ்சிடும், இது நகைச்சுவைப் படம்னு. ஆனா, ‘சும்மா படத்தைப் பார்த்தோம்... சிரிச்சுட்டுப் போனோம்...’னு இல்லாம கோபத்தையும், வருத்தத்தையும் கூட சிரிப்பாவே பதிவு செய்யற படம். சார்லி சாப்ளினை எடுத்துக்கிட்டா அவர் படத்துக்குள்ள வாழ்க்கையோட வலிகள் இருக்கும். அவரும் கதைப்படி வதைபடவே செய்வார். ஆனா நாம அதைப் பார்த்து சிரிப்போம். அதே போலத்தான் இதுவும்...’’ என்று தன் நான்காவது படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ பற்றி சின்ன முன்னோட்டம் கொடுத்தார் பாண்டிராஜ்.
‘‘இங்கே என் நாயகர்கள் பில்லாவும், ரங்காவும் கூட அப்படித்தான். அடிக்கிற காத்துல பறக்கிற சருகுகளா வாலிபத்துல எந்த நோக்கமுமில்லாம சுற்றித் திரிகிற ரெண்டு பேர். பக்கத்தில் இருக்கவங்க சொல்ற நல்லது கெட்டதை காது கொடுத்தே வாங்கிக்காம திமிறி அலைகிற ரெண்டு பேருக்கும் வாழ்க்கை ஒரு கட்டத்துல பாடம் கத்துத் தருது. ‘அட... நமக்குள்ளும் ஒரு பொறி இருக்கு!’ன்னு அவங்க உணர்ற கதைதான் இது...’’ என்கிற பாண்டிராஜ் படத்தில் மேற்படி பில்லா, ரங்காவாக விமலும், சிவகார்த்திகேயனும்.
அவரே சினிமாவுக்குள் கொண்டுவந்த இரண்டு பேரையும் மீண்டும் இயக்குவதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கிறதா..?

‘‘நம்ம பசங்க என்கிற ஒரே காரணம்தான். கைக்கு அடக்கமா நம்ம சொல்ல வர்றதை சரியா புரிஞ்சு செஞ்சிடுவாங்க. இருந்தாலும் நான் ஆரம்பிச்சு வச்ச இடத்திலேர்ந்து வியாபார ரீதியாவும், ரசிகர்கள் ரேட்டிங்கிலும் ரெண்டுபேரும் உயரத்துக்குப் போயிட்டவங்க. அதனால கைமீறிப் போயிடுவாங்களோன்னு முதல்ல கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனா அது வேண்டாத சந்தேகம்னு ரெண்டு பேருமே புரிய வச்சுட்டாங்க. ஷூட்டிங்குக்கு வந்த முதல் நாளே முதல் முறை பார்த்த அதே ரவுசும், லந்துமா அடிச்சுக் கலகலக்க வச்சுட்டாங்க. அட்மாஸ்பியரை அழகாக்கற இந்த ரெண்டு பேரோட கேரக்டர்களும் என்னை மீண்டும் ஈர்த்ததும் காரணம்...’’
கேடிக்கும், கில்லாடிக்கும் ஏற்ற லேடி கிடுக்கிகளாக பிந்து மாதவியையும், ரெஜினாவையும் ஜோடி சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ்.
‘‘பசங்க அப்படின்னா, பொண்ணுங்க அப்படி இல்லை. அவங்க வல்லினம்னா, அதுக்கு நேர்மாறா மெல்லினம், இடையினமா இந்த ரெண்டு பேரும். பிந்து மாதவிக்குக் கண்களே நடிக்குது. படத்துல ‘மித்ரா மீனலோசினி’ன்னு பொண்ணுக்குப் பேரு. தமிழ் பேசத் தெரிஞ்ச நல்ல நடிகையான ரெஜினா, இங்கே வாய்ப்பில்லாம தெலுங்கில போய் மூணு படம் நடிச்சுட்டு வந்திடுச்சு. ‘பாப்பா’வா வர்ற ரெஜினாவையும், பிந்து மாதவியையும் இனி தொடர்ந்து படங்கள்ல பார்க்கலாம்.
நான் 15 வருஷமா புதுக்கோட்டைக்குப் போற வழியில திருச்சியைப் பார்த்துக்கிட்டே போய் வந்திருக்கேன். மலைக்கோட்டை, காவிரிதான் திருச்சிக்கு அடையாளம்னாலும், இவை தவிர்த்த திருச்சி எப்படி இருக்கும்? அதை இந்தப் படம் சொல்லும். அதுக்காகவே ‘பொன்மலை’யைக் கதைக்கான தளமா தேர்ந்தெடுத்தேன். ரயில் சத்தம், ரயில்வே குவார்ட்டர்ஸ் சுற்றம்னு புதுசான டவுன்ஷிப்ல கதை நகருது. அதனால அங்கே இருக்கிற இயல்பான முகங்களையே படத்துக்குள்ள பயன்படுத்திக்கிட்டேன். இவங்களோட ‘பரோட்டா சூரி, பசங்க’ சுஜாதா, ‘மெரீனா’ கௌதம்னு தெரிஞ்ச முகங்களும் இருக்காங்க.

இதுவரை இல்லாம யுவன் என் படத்துக்குள்ள இசையமைக்க வந்திருக்கார். லைனைக் கேட்டு சிரிச்சபடியே ஒப்புக்கிட்டார். அதனால படத்தை எடுத்துப் போட்டுக் காட்டியே சாங் வாங்கிடலாம்னு அந்த இடத்தை அப்படியே விட்டு வச்சிருக்கேன். நல்ல படங்களைத் தந்த ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ மதனோட சேர்ந்து என்னோட ‘பசங்க புரொடக்ஷன்ஸு’ம் இந்தப் படத்தைத் தயாரிக்குது.
படத்துக்குள்ள உறவுகளோட முக்கியத்துவம் பேசப்பட்டிருக்கு. இல்லாதவங்க பெற்றோரைப் பற்றியே பேசறதும், இருக்கிறவங்க அவங்களைப் பற்றி பேசாமலே இருக்கிறதும் இந்தக் காலகட்டத்து முரண். ‘அடடா... அவங்களைக் கவனிக்காம போனோமே..?’ன்னு பெற்றோரைப் பத்தி நாம நினைக்கிற நேரம், அவங்க பக்கத்துல இருக்க மாட்டாங்க. ஜெயிச்சு நின்னுட்டு திரும்பிப் பார்த்தப்ப பெத்தவங்க கூட இல்லாததை என் வாழ்க்கையிலேயே உணர்ந்து கலங்கியிருக்கேன். இந்தப் படம் பார்க்கிறவங்க அப்பா அம்மாவோட அருமையையும் உணர முடியும். குறைஞ்ச பட்சம் அவங்களுக்கு ஒரு போன் காலாவது போட்டு ‘எப்படி இருக்கீங்க..?’ன்னு கேட்க வச்சுடும் முயற்சியும் உள்ளே இருக்கு...’’
- வேணுஜி