* அமித் அக்ரவத்துக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டுகிறது. அதிகம் படிக்காத அவருக்குள் 20 ஆண்டுகளுக்குமுன் ஒரு விஞ்ஞானி உதயமானான். கிராமத்துப் பொதுக்கிணற்றில் வாளியில் தண்ணீர் இழுக்கும் பெண்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். ஆழமான கிணற்றிலிருந்து தண்ணீர் இழுப்பதற்குள் மூச்சு வாங்கியது. தளர்ந்து கயிற்றை விட்டால், ராட்டினம் சுழன்று வாளி கிணற்றுக்குள் விழுந்துவிடும். பக்கெட் பாதி கிணறு தாண்டியதும் கையை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்தார். அதற்கு அவர் கண்டுபிடித்தது, ஆடோமாடிக் பிரேக் வைத்த ராட்டினம். பிரேக்கை அழுத்திவிட்டால் போதும்... பக்கெட் அந்தரத்தில் நிற்கும். பேராசிரியர் அனில் குப்தாவின் அறிமுகம் கிடைத்ததும், அமித் இதை நிறைய தயாரித்து விற்கிறார். இதுவரை 5 ஆயிரம் ராட்டினங்கள் விற்றிருக்கிறார். வெறும் 400 ரூபாய் விலை. ஏழை கிராமங்களுக்கு இதை இலவசமாகவே தருகிறார். அவர்களே இதைப் பார்த்து எத்தனை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். அமித் இதற்கு பேடன்ட் வாங்கவில்லை. ‘‘பெண்கள் கஷ்டப்படாமல் இருந்தால் போதும்’’ என்கிறார்.

பருத்திச்செடியிலிருந்து பஞ்சு பிரித்தெடுப்பது கடினமான வேலை. பெண்களும் சிறுமிகளும் வெயிலில் காய்ந்து இதை முடிப்பதற்குள் கைகள் புண்ணாகிவிடும். நாட்டுபாய் என்ற விவசாயி இதற்குத் தீர்வு தேடினார். தனது டிராக்டரில் குழாய்களையும் வேக்குவம் கிளீனரையும் சில கருவிகளோடு இணைத்து ஒரு சிஸ்டத்தை உருவாக்கினார். கிட்டத்தட்ட 11 லட்ச ரூபாய் செலவழித்து உருவாக்கிய இந்தக் கருவி, இரண்டு நாட்கள் உழைத்து 10 பேர் செய்கிற வேலையை ஒரு மணி நேரத்தில் முடிக்கும். இந்தக் கருவியை இறுதி செய்ய அவருக்கு இன்னும் சில லட்சங்கள் தேவைப்பட்டது. ஆனால் நாட்டுபாயின் மனைவி டென்ஷனாகிவிட்டார். ‘‘இந்த பைத்தியக்கார வேலையை இதோடு நிறுத்தாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவேன். குடும்பச் சொத்தை அழித்து, நம் பிள்ளைகளை ரோட்டில் நிறுத்திவிடுவாய் போலிருக்கிறதே’’ என சண்டை போட்டார். சில நாட்களில் பேராசிரியர் அனில் குப்தா அந்த கிராமத்துக்கு வந்து, ‘நாட்டுபாய் பைத்தியக்காரர் இல்லை; மிகப்பெரிய விஞ்ஞானி’ என்று அறிவித்தார். அவரது கண்டுபிடிப்பு முழுமை பெற பண உதவியும் செய்தார்.
* ஜஹாங்கீர் அகமது ஒரு எலெக்ட்ரிக் பெயின்டிங் பிரஷ் கண்டுபிடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிரஷ்ஷை பெயின்ட் டப்பாவில் நனைத்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மோட்டாரின் உதவியோடு பிரஷ்ஷின் குஞ்சங்களுக்கு பெயின்ட் பாய்ச்சப்படுகிறது. குனிந்து நிமிர்ந்து அவதிப்படாமல், நாள்முழுக்க நிறுத்தாமல் பெயின்ட் அடித்துக் கொண்டே இருக்கலாம். இதைக் கண்டுபிடித்த ஜஹாங்கீரை அவரது ஊர்க்காரர்கள் ‘லூசு’ என்றார்கள். பேராசிரியர் அனில் குப்தாவின் கண்ணில் பட்டார் ஜஹாங்கீர். இப்போது இந்த பிரஷ்ஷை ஒரு பெரிய நிறுவனம் உலகம் முழுக்க மார்க்கெட் செய்யப் போகிறது.
- யார் இந்த அனில் குப்தா?
59 வயதாகும் அனில் குப்தா ஒரு நிர்வாகவியல் பேராசிரியர். இளம் வயதில் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, கிராமத்து விவசாயிகளின் மேதமையை நேரில் பார்த்து வியந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக அவர் கிராமம் கிராமமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ‘அறிவைத் தேடும் பயணம்’ என்று இதற்குப் பெயர். நடிகரின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதவர்கள், சமூக வலைதளங்களில் கடலை போடாதவர்கள், பெண்கள் பின்னால் சுற்றுவதை முழுநேர வேலையாக வைத்திருக்காதவர்கள் என ஒரு சிறு இளைஞர் கூட்டம் அவரோடு போகிறது. கிராமங்களில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எளிய முறையில் யாரா வது தீர்வு தேடி வைத்திருப்பார்களே... அதைக் கண்டுபிடிக்கிறார். அந்த மேதையை அதுவரை ஊர் கேலி செய்திருக்கும். அனில் குப்தா அவரைப் பெருமைப்படுத்துகிறார். அந்த ஊருக்கு ஏதாவது தேவை இருப்பின், பக்கத்து கிராமங்களில் கண்டறிந்த தீர்வை அவர்களுக்குக் கற்றுத் தருகிறார்.

நம்புங்கள்... இப்போது குப்தாவிடம் இப்படி 25 ஆயிரம் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. எல்லாம் அதிகம் படிக்காத நமது கிராமத்து சயின்டிஸ்ட்டுகள் உருவாக்கியவை. இந்த சயின்டிஸ்ட்டுகளுக்கு பண ஆசை இல்லை. இதற்கு காப்புரிமை வாங்கிவிட்டு கோடிகளில் புரள வேண்டும் என்ற விபரீதக் கனவு இல்லை. மக்கள் சிரமப்படாமல் இருந்தால் போதும் என்கிறார்கள். குப்தா இவர்களின் கண்டுபிடிப்புகளை மற்ற இடங்களுக்குப் பரப்புகிறார். நல்ல கண்டுபிடிப்பு பணமில்லாமல் பாதியில் நிற்பது தெரிந் தால், நிதியுதவி ஏற்பாடு செய்கிறார். பரவலாக விலைபோகக்கூடிய கண்டுபிடிப்பு என்று புரிந்தால், அதை இணைந்து உருவாக்க தொழில் நிறுவனங்களை ஏற்பாடு செய்து தருகிறார். இவரோடு ஒரு எஞ்சினியர் பட்டாளமே போகிறது. தொழில்நுட்ப ரீதியாக அந்தக் கண்டுபிடிப்பு மேன்மை பெற இவர்கள் உதவுகிறார்கள்.
‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?’ என இவர் முயற்சி செய்ததால், ‘நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் தெரிந்து வைத்திருக்கும் நம் இளைஞர்களுக்கு அனில் குப்தாவின் பெயரும் உழைப்பும் தெரியாமல் போவது இயல்புதான்!
- அகஸ்டஸ்