டிசைன் டிசைனா அம்பலமாகுது மோசடி!





ஈமு கோழி, நாட்டுக்கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய்... இந்த வரிசையில் போட்ட பணத்தை ஒரே வருடத்தில் ஆறு மடங்கு ஆக்கித் தருகிறேன் என்று சொன்ன ஒரு பாதிரியாரிடமும் கோடிகளை இழந்து நிற்கிறார்கள் தமிழக மக்கள்.

முன்பு நிதி நிறுவனங்கள் ஏமாற்றின; அடுத்த சீசனில் தங்கக்காசு, காந்தப் படுக்கை என செயின் ஸ்கீம் பார்ட்டிகள் ஏமாற்றினார்கள். இப்படி ஒவ்வொரு சீசனிலும் தினுசு தினுசாக ஏமாறுவதுதான் தமிழர்களின் தலையெழுத்தா? சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பை இழந்து தவிக்கும் இவர்களுக்கு என்ன கிடைக்கும்? உண்மையில் ஏமாற்றாத முதலீடு எது? நிபுணர்களிடம் கேட்டோம்...

‘‘‘எப்போ இந்தமாதிரி செய்திகள் வந்தாலும் ஏமாறுவது நடுத்தர, சாமானிய மக்களாத்தான் இருக்காங்க. முதல்ல ஒரு விஷயத்தை இவங்க தெரிஞ்சுக்கணும். பணத்தை பல மடங்கா ஆக்கித் தர்றேன்னு வர்றவங்க எல்லாருமே அவங்க பிழைப்புக்கு ஆதாரம் தேடித்தான் இந்த வேலையில இறங்குறாங்க. குறிப்பிட்ட அந்த ஸ்கீம்ல அவங்களோட அனுபவம், திறமை எதுவுமே அவங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியறதில்ல. ஒருவேளை ஏதாச்சும் வில்லங்கம், குளறுபடியாயிடுச்சுன்னா தப்பிக்கற வழியையும் முன்னாடியே பிளான் பண்ணியிருப்பாங்க.

இவங்களோட கவர்ச்சி விளம்பரங்களுக்கு மயங்கறதும் இதே நடுத்தர, சாமானிய மக்கள்தான். மயக்கத்தோடயே சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் அவங்ககிட்ட போய்ச் சேருது. சேமிப்பா கையில இருக்கற பணத்தை பெருக்கறதுக்காக முதலீடு செய்றது தப்பில்ல. ஆனா சாமானிய மக்கள்ல சிலர் பண்றதுதான் கொடுமை. கடன் வாங்கி இந்த மாதிரி விஷயங்கள்ல நுழையறாங்க. பிழைப்புக்கு வழியா ஏதாச்சும் தொழில் பண்ணணும்னா, அதிகளவு முதலீடு தேவைப்படாத தொழிலா எடுத்து பண்ணலாம். அப்படி எத்தனையோ இருக்கு. அதைவிட்டுட்டு கடன் வாங்கி இதுல இறங்கினா, போட்ட பணமும் போய் அதுக்கு வட்டியும் கட்ட வேண்டிய நிலைமை வந்துடுது.

இருக்கற பணத்தைப் பெருக்கணும்னு நினைக்கறவங்க தெரிஞ்சுக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கு. அபரிமிதமான லாபம் வாங்கித் தரமுடியும்னு ஏதாவதொரு நிறுவனம் சொல்லுதுன்னா அதை மறந்தும் நம்பிட வேண்டாம். எத்தனை பெரிய திறமைசாலி நிறுவனமா இருந்தாலும், லாபத்தோட வளர்ச்சி விகிதம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல உயர சாத்தியமே இல்லை’’ என்கிற நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன், ‘‘உதாரணத்துக்கு ‘ஸ்கூட்டர் வச்சிருக்கிறவங்கெல்லாம் வாங்குவாங்கன்னுதான் நானோ கொண்டு வந்தாங்க. ஆனா வாங்குனது அவங்க இல்ல. ஏற்கனவே கார் வச்சிருக்கிறவங்கதான் வாங்கி நிறுத்துனாங்க. டாடா பெரிய நிறுவனம்தான். ஆனா அவங்க எதிர்பார்த்த லாபம் இதுல கிடைக்கல. எங்கயுமே லாபம்ங்கிறதுக்கு ஒரு லிமிட் இருக்கு’’ என்கிறார்.



‘‘முதலீடும் அதன்மூலம் பணத்தைப் பெருக்குவதென்பதும் எப்படி இருக்க வேண்டும்?’’
‘‘இன்னிக்கு சூழல்ல ‘ஈ.டி.எஃப்’ எனப்படுகிற தங்கம் மீதான முதலீட்டைத்தான் நான் பரிந்துரைக்கிறேன். அதுபோக வங்கிகள் தருகிற வட்டி விகிதத்தை ஏத்துக்கிட்டு அதுல ஃபிக்சட் டெபாசிட் பண்ணலாம். மூணாவதா டாக்குமென்ட் பக்காவா இருக்கற நிலங்கள்ல பணத்தைப் போடலாம். மத்தபடி எதுவுமே - பங்குச் சந்தை உட்பட - சரிப்பட்டு வராது. ஆடு வளர்க்கிறேன், கோழி வளர்க்கிறேன்னு இறங்கறதெல்லாம் கடைசியில முதலுக்கே மோசடியாத்தான் முடியும்’’ என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான பாபி ஸ்ரீனிவாசன்.

சினிமா பாணியில் ஒரே பாட்டில் அல்லது ஓவர் நைட்டில் பணக்காரனாகிவிட வேண்டும் என்கிற மக்களின் பேராசைதான் இந்த ஏமாற்றங்களுக்குக் காரணமா? உளவியல் நிபுணர் யாமினி கண்ணப்பனிடம் கேட்டோம்.

‘‘வாழ்க்கைச் சூழல் மாறிட்டே இருக்கு. சம்பாதிக்கிறது பத்த மாட்டேங்குது. சில பேருக்கு சம்பாத்தியம் போதுமானதா இருந்தாலும், ஆசை அடுத்த லெவலுக்குத் தாவுது. கட்டுப்படுத்த முடியாத இந்த ஆசைதான் பின்விளைவுகள் பத்தி யோசிக்க விடறதில்லை. வாழ்க்கையோட சகல வசதிகளையும் அனுபவிக்கணும்ங்கிற ஒரே விஷயம்தான் அவங்க கண் முன்னால இருக்கும். அக்கம்பக்கத்துல, சொந்தபந்தத்துல நல்லா இருக்கறவங்களைப் பார்த்து இவங்களாகவே தூண்டப்படுவாங்க. அதுக்காக அவங்களைத் தப்புச் சொல்ல முடியாது. கட்டுப்படுத்த முடியாத இந்த ஒரே மனப்பான்மை தீவிரமா வலுவாகறப்ப ரொம்ப ஈசியா ஏமாந்துடுறாங்க.

இதுக்குத் தீர்வுன்னு பார்த்தா ‘கைநிறையச் சம்பாதிக்கணும்’னு சொல்லிச் சொல்லி வெறியேத்தி விடறதை நிறுத்தணும். தேவைக்கு சம்பாதிக்கணும்ங்கிறதே சரியான வார்த்தை. தேவைகள்லயும் அவசிய, அநாவசியத் தேவைன்னு இருக்கு. அதுல அநாவசியத்தை இனங்கண்டு ஒதுக்குனாலே சம்பாத்தியத்துல நிச்சயமா ஒரு பகுதி சேமிப்பா கிடைக்கும். உதாரணமா, அவசரத்துக்கு ஒரு கார் வச்சிக்கிடறது தப்பில்ல. ஆனா கப்பல் மாதிரி கார் வாசல்ல இருக்கணும்னு நினைக்கிறது அநாவசியம். இந்த ரெண்டுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிஞ்சுக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் யாமினி கண்ணப்பன்.
- அய்யனார் ராஜன்