அணுகுமுறை





‘‘போன மாசம் நாம இந்த வீட்டுக்குப் புதுசா குடிவந்தப்போ, நம்ம ஹவுஸ் ஓனர்ஸ் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாங்க. ராத்திரி 10 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடணும், அதுக்கு மேல கேட்டை திறக்கக் கூடாது, சொந்தக்காரங்கனு அடிக்கடி நிறைய பேர் வந்து போகக் கூடாதுனு என்னென்னவோ சொன்னாங்க. ஆனா, இப்ப நாம வீட்டுக்கு வர எவ்வளவு லேட்டானாலும், எத்தனை சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தாலும் அவங்க கண்டுக்கறதே இல்ல. என்ன காரணமா இருக்கும்..?’’- ஆச்சரியத்துடன் கேட்டான் பாலாஜி.

‘‘என்ன சொன்னாங்கன்னு பார்க்கறதை விட, அதை ஏன் சொன்னாங்கன்னு பார்க்கணும்ங்க. நம்ம வீட்டுக்காரங்க வயசான தம்பதிங்க. கிரீச் கிரீச்னு கேட்டை ராத்திரி தொறந்துக்கிட்டிருந்தா தூக்கம் டிஸ்டர்ப் ஆகும்னு சொல்லியிருப்பாங்க. நான் கேட்டுக்கு அடிக்கடி எண்ணெய் போட்டு கண்டிஷனா வச்சிருக்கேன். சத்தம் போடாம கேட்டை திறந்தா, அவங்க என்ன சொல்லப் போறாங்க..?
அதே மாதிரி அடிக்கடி நம்ம வீட்டுக்கு ஆளுங்க வர்றதைப் பார்த்து, தனிமையில கீழ் போர்ஷன்ல இருக்கற அவங்களுக்கு கஷ்டமாவும் ஏக்கமாவும்தான் இருக்கும். அதனால நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் நான் அவங்ககிட்ட கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதனாலதான் நம்ம சொந்தங்களையும் அவங்க அன்பா பார்க்குறாங்க’’ என்று விளக்கிய மனைவிக்கு திருஷ்டி சுற்றினான் பாலாஜி.