சுட்ட கதை சுடாத நீதி

ஒரே குழந்தை என்பதால் தங்கள் ஐந்து வயது மகளை ஆசையும் செல்லமுமாக
வளர்த்தார்கள் அவர்கள். ஒருநாள் வெளியில் விளையாடப் போன அவள், அழகான
பூனைக்குட்டியைத் தூக்கி வந்தாள். ‘‘இனிமேல் இது நம்ம வீட்டில்தான்
வளரும்’’ என்று அடம் பிடித்தாள்.
அந்தப் பூனைக்குட்டி சுதந்திரமாக ஹாலில் வலம் வந்தது. தாவி ஏறி சோபாவில்
அமர்ந்தது. மென்மையாக இருந்த அதன் பரப்பில் இங்கும் அங்கும் நடந்தது.
கால்களால் அதைப் பிறாண்டியது. இழை இழையாக சோபாவில் நூல் பிரிந்தது.
அம்மாவுக்கு பகீரென்றது. ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து செய்த சோபா.
கிழிந்தால் அசிங்கமாக ஒட்டுப் போட முடியாது. பதறி கணவரைப் பார்த்தாள். அவர்
உடனே களத்தில் இறங்கினார். ‘‘இது நம்ம வீட்லயே இருக்கட்டும். ஆனா இது இந்த
சோபாவை வீணாக்கிடாம இருக்க, நான் டிரெய்னிங் கொடுக்கறேன்’’ என்றார்.
பூனை முகத்துக்கு நேரே விரலை நீட்டி, ‘‘நீ இப்படிச் செய்தா, உன்னை வெளியில
கொண்டுபோய் விடுவேன்’’ என்றார். பூனை அவர் விரலை நக்கிப் பார்த்துவிட்டு,
பழையபடி சோபாவை பிறாண்டியது. அவர் அதைத் தூக்கிச் சென்று வாசலில் விட்டார்.
‘‘சமர்த்தா இருந்தாதான் வீட்டுக்குள்ள விடுவேன்’’ என்று சொல்லி கதவைத்
தாழிட்டார்.
அரை மணி நேரம் கழித்து அதை உள்ளே விட்டார்கள். கொஞ்ச நேரம் அமைதியாக
இருந்துவிட்டு, சோபாவைப் பிறாண்டியது. அப்பா அதட்டி வாசலில் விட்டார்.
இப்படியே நான்கைந்து முறை அது தண்டிக்கப்பட்டது.
இரவு சாப்பிடும்போது அப்பா மகளிடம் சொன்னார்... ‘‘அந்தப் பூனைக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. இனிமே பிரச்னை இருக்காது!’’
பூனை வீட்டுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. அதற்குத் தந்த பயிற்சி
கொஞ்சம் தப்பாகிவிட்டது. பூனைக்கு வெளியே போக வேண்டும் என தோன்றினால், உடனே
அது சோபாவைப் பிறாண்டுகிறது. கதவைத் திறந்துவிடுகிறார்கள். அது போகிறது.
சோபா நார் நாராகக் கிழிந்துபோய் ஹாலின் ஒரு மூலையில் கிடக்கிறது.
|