இதுயாரையும் அடிக்காத சாட்டை





‘‘தினம் தினம் நாளிதழ்களைத் திறந்தா ஸ்கூல் மாணவர்களைப் பற்றிய செய்திகள் தவறாம ஏதாவது ரூபத்துல வந்துக்கிட்டே இருக்கு. இன்னைக்கு தனி மனிதனுக்கு மட்டுமில்லாம சமூகத்துக்கே இருக்கிற பெரிய சவால், மாணவர்களைக் கையாளும் பிரச்னைதான். அதைத்தான் என் படம் சொல்லுது...’’ என்று ஆரம்பித்தார் ‘சாட்டை’ இயக்குநர் எம்.அன்பழகன்.

‘‘இதுவரை வந்த பள்ளிக்கூடக் கதைகள்லயே இது வித்தியாசமா இருக்கும். அதுக்காகவே, இதுவரை வந்த பள்ளிக்கூடக் கதைகள் கொண்ட படங்களை எல்லாம் ஒண்ணு
விடாம பார்த்து, அதுல வந்திருக்க காட்சிகள் எதுவும் மீண்டும் வந்துடக் கூடாதுன்னு கவனமா ஸ்கிரிப்ட் எழுதினேன்...’’ என்கிற அன்பழகன், இயக்குநர் பிரபு சாலமனின் இணை இயக்குநராக இருந்தவர்.

படம் பற்றியும், சாட்டையில் சமுத்திரக்கனியை வாத்தியாராக்கியது பற்றியும் தொடர்ந்தார் அவர்...
‘‘இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தோழமையை வலியுறுத்தும் படம். மாணவர்களை மதிப்பெண் வங்கியாக்கி ஆசிரியர்கள் தர்ற சுமை ஒரு பக்கமும், அந்த மதிப்பெண்ணுக்காகவே பெரிய விலை கொடுத்து பள்ளியில சீட் வாங்கி, பணத்துக்கு ஈடுகட்ட பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் கொடுக்கும் நெருக்கடி இன்னொரு பக்கமுமா நின்னு மாணவனை அழுத்துது. அதுல அவனோட சுய விருப்பம் காணாம போகுது. இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்ப வசதிகளால, ஆசிரியர்களுக்கு மேல அறிவாளிகளா மாணவர்கள் இருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கு. அதை ஆசிரியர்களுக்கு உணர்த்தற படமாவும் இது இருக்கு.



தோழமையான ஆசிரியர் வேடத்துல வேற எந்த நடிகர் நடிச்சாலும், அவங்க முன்னே வந்து கேரக்டர் பின்னால போயிடும்னு நினைச்சேன். சமுத்திரகனிக்கு ஒரு தோழமைக்குரிய தோற்றம் இருக்கு. கதை கேட்டு நடிக்க ஒத்துக்கிட்ட நிமிஷத்துல இருந்து, ஷூட்டிங் முடியற வரை அவரோட ஒத்துழைப்பு அதிகமாகிட்டே போனதே தவிர குறையலை. ‘அன்பு... நான் டைரக்ட் பண்ற படத்துல, நான் சொல்றதைக் கேட்டு நடிகர்கள் நடிக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதேபோல உங்க படத்துல நீங்க சொல்றபடிதான் நடிப்பேன்...’னு ஆரம்பத்துலயே சொல்லிட்டார். அவரோட ஜோடியா சுவாசிகா நடிச்சிருக்காங்க.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மதிப்பெண் மிகவும் குறைஞ்ச பள்ளிக்கு அரசாங்கத்திலேர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் போகும். அப்படி ஒரு அரசுப் பள்ளியைத்தான் கதைக்களமா எடுத்துக்கிட்டேன். இதுல நடிச்சிருக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள்ல கதைக்கு முக்கியமான மாணவனா யுவன் நடிச்சிருக்கான். வயதுக்கு மீறிய மெச்சூரிட்டில அந்தப் பாத்திரமாவே மாறி நடிச்சிருக்க யுவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. யுவனோட தோழியா, கேரளாவிலிருந்து வந்திருக்க மகிமாங்கிற பெண் நடிச்சிருக்கு. அந்த வயதுலேயே வர்ற மென்மையான காதல் அடையாளங்களும் கதையோட செய்திக்கு உறுத்தாம இருக்கும். தலைமை ஆசிரியரா நடிச்சிருக்க ஜூனியர் பாலையாவும், ஏ.எச்.எம்மா நடிச்சிருக்க தம்பி ராமையாவும் முக்கியப் பாத்திரங்களா வர்றாங்க. நெய்வேலிக்கு அருகில இருக்கிற ஒரு பள்ளியில மொத்த படப்பிடிப்பும் நடந்தது.



‘நல்ல ஸ்கிரிப்ட் இருந்தா ரெடி பண்ணி வையுங்க...’ ன்னு ‘மைனா’ படத்தின்போதே பிரபுசாலமன் சொன்னார். அவருக்கு இந்த லைனை சொன்னேன். ‘இதுபோல தரமான கதைகளைத் தான் என்னோட கம்பெனியில எடுக்கிறதா இருக்கேன். நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணுங்க...’ன்னு உறுதி சொன்னார். ஷூட்டிங் கிளம்பியபோது, ‘நான் கூடவே இருக்கிறதா நினைச்சு சுதந்திரமா படத்தை எடுங்க. எங்கேயாவது உங்க கிரியேட்டி விட்டிக்கு புரொடக்ஷன் தரப்பிலேர்ந்து பிரச்னை வந்தா, அப்படியே ஷூட்டிங்கை நிறுத்திட்டு வந்துடுங்க. நான் பார்த்துக்கிறேன்...’னு முழு சுதந்திரம் கொடுத்தார். ஆனா அப்படி ஏதும் நேராம இன்னொரு தயாரிப்பாளரான ஜான் மேக்ஸ் பார்த்துக்கிட்டதுல படம் அருமையா வந்திருக்கு.
படத்தைப் பார்த்து ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி... கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்கன்னா அது எங்க வெற்றி. அதனாலதான் யாரையும் குற்றம் சாட்டாம தோள்மேல கை போட்டு பிரச்னைகளை அணுகியிருக்கோம்...’’
‘‘எல்லாம் சரி... ஆனா தோழமையோட சொல்ல வர்ற படத்துக்கு ஏன் ‘சாட்டை’ன்னு டைட்டில்
வச்சிருக்கீங்க..?’’
‘‘அடிக்கிற சாட்டை இல்லை இது. பம்பரம் சீரா சுற்ற உதவற சாட்டை. அப்படி பார்த்தா சரிதானே..?’’
- வேணுஜி