பெயின்ட் டப்பா : துடுப்பதி ரகுநாதன்





மூன்று பேர் உட்காரும் அந்த பஸ் இருக்கையில் பாஸ்கரனுக்கு கிடைத்தது மூன்று இன்ச் இடம்தான்! ஏற்கனவே உட்கார்ந்திருந்த இருவரும் காலை அகட்டி ஆளுக்கொரு லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு, ஏதோ வேலை செய்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். இவனும் நகர்த்தி நகர்த்தி உட்கார இடம் உண்டாக்கப் பார்த்தான். பக்கத்து லேப்டாப் ஆசாமி முறைத்துப் பார்த்து, ‘‘சும்மா உக்கார மாட்டே?’’ என்று கோபமாகச் சொன்னார். பாஸ்கரன் பயந்து வாய் மூடிக் கொண்டான்.
வழியில் ஒரு முரட்டு ஆள், பெயின்ட் டப்பாவோடு ஏறினான்.
‘‘அண்ணே! ஏன் டப்பாவை வச்சுக்கிட்டு சிரமப்படுறீங்க? இங்க உக்காருங்க’’ என்று இடம் கொடுத்து எழுந்தான் பாஸ்கரன்.
பெயின்டருக்கும் அங்கே 3 இன்ச் இடம்தான் கிடைத்தது. பெயின்ட் டப்பாவை காலுக்கு அடியில் கூட வைக்க முடியாமல் மடியில் வைத்துக் கொண்டு வந்தான் அவன். திடீரென்று ஒரு லாரி பஸ்ஸுக்கு குறுக்கே வர, டிரைவர் ஸடன் பிரேக் போட்டார். பெயின்ட் சிதறி பக்கத்திலிருந்த நபரின் லேப்டாப்பை அபிஷேகம் செய்து விட்டது!

பெயின்டருக்கும் அந்த இருவருக்கும் வாய்த்தகராறு முற்றிவிட்டது.

பாஸ்கரன் முன்னால் அமர்ந்தபடி, தான் எதிர்பார்த்த இந்தக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தான்.