நிழல்கள் நடந்த பாதை



இறந்த காலத்தின் முகங்கள்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முந்தைய சிநேகிதி ஒருத்தி சமீபத்தில் எங்கேயோ என் எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்திருந்தாள். எனக்கு பெயர் நினைவில் இல்லை. நான் பெயரை சற்று உரக்கச் சொல்லி இழுத்தபடி நினைவின் ஆழத்தில் மூழ்கத் தொடங்கினேன். அது அவளை ஆழமாகக் காயப்படுத்தியிருக்க வேண்டும். ‘‘என்ன... தெரியலையா?’’ என்றாள் அதட்டலாக. நான் தடுமாற்றத்துடன், ‘‘ஓ... ஆமா... சாரி... எப்படியிருக்கே?’’ என்றேன். ‘‘இந்த ஊர்லதான் நீ இருக்கேன்னு தெரியும். வர்றப்ப பார்க்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். நேத்து வீட்ல எல்லோரும் ஒரு வேலையா வந்தோம். நைட் ட்ரெயின்... சாயங்காலம் நாலு மணிக்கு உன்னை பார்க்க முடியுமா?’’ என்றாள்.

ஒரு கணம் அமைதியாக இருந்தேன். அவள் கேட்ட நேரம் எனக்குக் குறிப்பிடும்படியாக எந்த வேலையும் இல்லை. ‘‘ஓ... ஸாரி... நாளைக்கு இருப்பியா? இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். என்ன பண்றதுன்னே தெரியலை...’’ என்றேன். ‘‘ரொம்ப ஃபீல் பண்ணாதே... திரும்ப எப்பவாவது பார்க்கலாம். அல்லது பார்க்காட்டிதான் என்ன?’’ என்றபடி போனை வைத்துவிட்டாள். அதில் கோபமோ வருத்தமோ இல்லை. ஒரு காகிதம் போல சட்டென அந்தக் குரல் உலர்ந்து போயிருந்தது.

நான் ஏன் அந்த சந்திப்பைத் தவிர்த்தேன் என்று அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். நீண்ட காலம் உறைந்த அன்பின் தருணமோ, குற்ற உணர்வின் தருணமோ அந்த சந்திப்பில் இருக்கப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். இருந்தும் ஏதோ ஒன்று என்னைத் தடுத்துவிட்டது.

ஆதவனின் ‘காகித மலர்கள்’ நாவலில் ஒரு இடம் இருக்கிறது. நீண்ட நாளைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் தன் சகோதரனை வரவேற்க விமான நிலையத்திற்குச் செல்லும் ஒருவன், இப்போது தன்னைப் பார்க்கும் சகோதரனுக்கு என்ன தோன்றும் என்று நினைத்துக்கொண்டே போகிறான். அப்போது அவன் தனக்குத் தானே சொல்லிக்கொள்வான்... ‘இப்போது நடக்கப் போவது ஒரு பிம்பக் கொலை’ என்று!

நம்மைப் பற்றிய பிம்பங்கள் பிறரிடம் அழிவதும், பிறரது பிம்பங்கள் நம்மிடம் அழிவதும் உண்மையில் ஒரு கொலைதான். கத்தியின்றி ரத்தமின்றி நிகழும் கொலை. நான் ஒரு கொலைக்கு ஆயத்தமில்லாததால்தான் அந்த சந்திப்பைத் தவிர்த்தேனா? ஒருவேளை சந்தித்திருந்தால் இப்போது ஏற்பட்டதைவிட அதிகமான வருத்தம்கூட அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.



இன்று வாழும் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் திடீரென கசந்துபோகும் நாட்களில் எனக்கும் தோன்றியதுண்டு... ‘நான் வாழ்ந்து, கடந்து வந்த ஊர்களில் இருந்த எனது நண்பர்களை, உறவுகளைத் தெருத்தெருவாகத் தேடிப் போய் ஒருமுறை பார்க்க வேண்டும்’ என்று. ஆனால் நான் அதை ஒருநாளும் செய்யமாட்டேன் என்று எனக்குத் தெரியும். அவர்களை அவர்களாகவே சந்திக்க முடியாது என்பதுதான் முக்கியமான காரணம்.

ஒரு பழைய காதலியைத் தேடிப்போன நண்பன் ஒருவன், ‘‘அவள் இப்போது எப்படியிருந்தாலும் என் அன்பில் எந்த வித்தியாசமும் இருக்காது’’ என்றான். ‘‘போடா முட்டாள்’’ என்றேன்.

அன்பு, காதல், பாசம், நட்பு... இதைப் பற்றியெல்லாம் நமக்கு இருக்கும் தூய கற்பனைகள்தான் நம்மை மீளமுடியாத இக்கட்டுகளிலும் மன முறிவிலும் தள்ளிவிட்டு விடுகின்றன. இந்த ஒவ்வொரு தூய உணர்ச்சிக்குப் பிறகும் வெயிலடித்தால் காய்ந்து போகிற, மழை பெய்தால் கரைந்து போகிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து போகிறோம். உறவுகளைப் பற்றிய நமது கற்பனைகளுக்குள்ளும் கற்பிதங்களுக்குள்ளும் மனிதர்களைப் பொருத்த முயற்சிக்கும்போதுதான் நமது தோல்வி ஆரம்பமாகிறது.. அந்த தோல்வியைதுரோகம் என்றோ, ஏமாற்றம் என்றோ அழைக்க விரும்புகிறோம்.

ஒரு பழைய நண்பனிடம் இன்றைய வாழ்க்கையிலிருந்து பகிர்ந்துகொள்ள ஒரு காபிக்கு மேல் ஏதாவது இருக்கிறதா? இறந்த காலத்தின் புகைப்படங்களை எவ்வளவு நேரம்தான் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது? அழகான மனைவியுள்ள ஒரு நண்பனைப் பார்த்தால் அழகற்ற மனைவியுள்ள ஒருவன் மனம் கசங்கிப் போகத்தான் செய்கிறான். இழிவான மனிதனைக் கணவனாகக் கொண்ட ஒரு பெண், ஒரு நல்ல மனிதனை கணவனாகக் கொண்ட தனது நீண்டகாலத் தோழியைச் சந்திக்கும்போது எங்கோ மனமுடைந்து போகிறாள். படிப்பு, வேலை, அந்தஸ்து, குழந்தைகள், பணம் என எத்தனையோ விஷயங்களில் பழைய நண்பர்களுக்கும் நமக்கும் இடையே சமன் செய்யமுடியாத தராசு ஒன்று ஊசலாடிக்கொண்டே இருக்கிறது.

பொறாமையும் பகைமையும் தாழ்வுணர்ச்சியும் நமக்கு அன்னியமான ஒருவரிடம் அவ்வளவு எளிதாக வருவதில்லை. அப்படி வந்தாலும் அது ஒரு கணநேர நிழலாகப் படிந்து மறைந்துவிடுகிறது. ஆனால் ஒரு காலத்தில் நம்முடன் நமக்கு இணையாக இருந்தவர்களிடம் உணரும் ஏற்றத் தாழ்வுகள் நம்முள் ஒரு ஆழமான ரணமாக மாறுகிறது. நமது நிகழ்காலத்தின் மறுபக்கமாக நமது பழைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

நாம் கண்ணாடியில் இருக்கும் ஒரு பிம்பத்தைத் தீண்ட முயல்வதுபோல அவர்களைத் தீண்ட முயற்சிக்கிறோம். அந்த பிம்பம் நமக்கு எவ்வளவு அருகில் இருந்தாலும், அது ஒரு பிரதி
பலிப்பு மட்டுமே என்பதை உணரும்போது நாம் அடையும் ஏமாற்றத்திற்கு எல்லையே இல்லை. கடந்த காலம் என்பது ஒரு கனவு. அதைக் கனவாகவே விட்டுவிடுவதுதான் நல்லது. நிகழ்காலத்தின் வெம்மையில் அதைப் பொசுக்கக்கூடாது.

சிறிது காலத்திற்கு முன்பு என் பள்ளித் தோழன் ஒருவனைச் சந்தித்தேன். உடம்பில் சட்டையில்லாமல் ஒரு பெரிய சுமையை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தான். அடையாளம் கண்டு புன்னகைத்தேன். யாரென்று தெரிந்த மறுகணம் சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து போய்விட்டான். நான் அன்று அவனை அப்படித்தான் எனது பிம்பத்தால் கொலை செய்தேன்.

நிலவில் விழுந்த முதல் நிழல் எனது குழந்தைப் பருவத்தில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஒரு படத்தை எவ்வளவோ நாட்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். கறுப்பு வெள்ளை கோட்டுச் சித்திரமாக தலைக்கவசம் அணிந்த ஒரு மனிதன் நிலவில் காலடி எடுத்து வைக்கும் காட்சி. அந்தப் படம் ஏற்படுத்திய கற்பனைக்கும் வியப்பிற்கும் எல்லையே இல்லை எனலாம். அந்த மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங், கடந்த வாரம் தனது 82வது வயதில் இறந்துபோனார். ஒருகணம் என் மனதில் இருந்த அந்த சித்திரம் கலைந்து ஒன்று சேர்ந்தது.

அப்போலோ விண்கலத்திலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் காலடி வைத்த 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய செய்தி எழுதப்பட்டது. மனிதனின் பயணத்திற்கு எல்லையே இல்லை என்பதுதான் அது. இன்றும் அந்த சம்பவம் அறிவியல் சாதனையின் குறியீடாக மட்டுமல்ல, ஒரு தனிமனிதனின் எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளமாகவும் இருக்கிறது. ‘‘நிலவில் ஒரு குழந்தையைப் போல தவழ்ந்து மிதந்தேன்’’ என்றார் ஆம்ஸ்ட்ராங். ஒரு மனிதன் ஒரு உலகத்திற்குள் அப்படித்தானே நுழைய முடியும?
‘ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குப் போகவே இல்லை, எல்லாம் அமெரிக்காவின் நாடகம்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால்கூட அதை நான் நம்ப மாட்டேன். அது உண்மை, பொய்களைத் தாண்டிய ஒரு ஆழமான மன எழுச்சி.
முதன்முதலாக பூமிக்கு வந்த மனிதனின் மரணம் பற்றி ஏதாவது ஒரு கிரகத்தில் ஏதாவது ஒரு எழுத்தாளன் இந்த நேரம் எழுதிக்கொண்டிருக்கக்கூடும்.

வி.வி.எஸ். என்னும் கலைஞன்
கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மணன் ஓய்வு பெற்றபோது இந்திய கிரிக்கெட் தனது கடைசி கிளாசிக்கல் ஆட்டக்காரர்களில் ஒருவரை இழக்கிறது என்ற வருத்தம் மேலிட்டது. அவரது ஆட்டத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும், தனித்துப் போராடும் சாமுராய் ஒருவனின் தோற்றம்தான் நினைவுக்கு வரும். கிரிக்கெட்டின் ஆரவாரங்கள், பகட்டுகள் ஏதுமின்றி நீண்ட காலத்து விருட்சம்போல அவர் வேரூன்றி நின்றார். இந்திய கிரிக்கெட் ஒரு சூதாட்ட கிளப்பாகவும் வீடியோ கேம்ஸாகவும் மாறிய ஒரு காலகட்டத்தில் அவர் அவமானத்தையும் புறக்கணிப்பையும் சந்தித்துக் கசந்து வெளியேறியதில் ஆச்சரியமில்லை.

வி.வி.எஸ். இந்தியாவிற்குத் தேடிக்கொடுத்த நம்பமுடியாத வெற்றிகள் வெறும் வெற்றிகள் அல்ல. ஒரு உண்மையான ஆட்டக்காரனின் ஆழமான தியானம் அது.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்




சென்னைக்கு வந்தேன் தொகுப்பாசிரியர்: பழ.அதியமான்
பெரும்பாலான சென்னைவாசிகள் சென்னைக்கு வந்தவர்கள்தான். வந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே இது அழிக்கமுடியாத வெவ்வேறு நினைவுகளைக் கொடுத்திருக்கிறது. 1950களின் இறுதியில் ‘சரஸ்வதி’ இதழ், சென்னைக்கு வந்த எழுத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பெற்று ஒரு தொடராக வெளியிட்டது. அதனோடு வேறுசில கட்டுரைகளும் சேர்க்கப்பட்டு இந்த நூல் உருவாகியுள்ளது. பல கட்டுரைகளைப் படிக்கும்போது சென்னைக்கு இன்று வந்தவர்கள் எழுதினாலும் இதற்கு சமமான அனுபவங்கள்தான் நிகழும் என்று தோன்றுகிறது. காலத்தால் நகரத்தின் தோற்றம் கலைகிறது. குணம் அப்படியேதான் இருக்கிறது. பெரும்பாலான கட்டுரைகள் இந்த நகரம் அவர்கள் சொந்த வாழ்வில் வகித்த பாத்திரத்தை வெளிப்படுத்தும்போது, சுந்தர ராமசாமியின் கட்டுரை இந்த நகரம் பற்றிய நுட்பமான சித்திரத்தைத் தருகிறது.
சென்னையைப் பற்றிய கு.அழகிரிசாமியின் மேற்கோள் ஒன்றைப் பதிப்பாசிரியர் தருகிறார். ‘சென்னையுடனான உறவு ஆணின் முறையற்ற பெண் தொடர்பு போல. பிடிக்கும்; ஆனால், வெளியே சொல்ல முடியாது.’
(விலை: ரூ.95/-, வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001.)

எனக்குப் பிடித்த கவிதை
கோணம்

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்;
ஒரு கோணத்தில் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.
- சி.மணி

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்
ஆறு லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதில், இரண்டாயிரத்து நானூற்றி நாற்பத்தெட்டு பேர் மட்டுமே தேர்ச்சி - செய்தி.
சாபம்யா சாபம்... ‘மார்க்’ங்கிற விஷயத்தைக் கையில் வச்சுக்கிட்டு என்னைப் போன்ற எவ்வளவு பேருக்கு மரண பயத்தைக் காட்டியிருப்பீங்க... தெய்வம் நின்னு கொல்லும்னு சும்மாவா சொன்னாங்க!