திருப்புமுனை : வனிதா மோகன்





“ஒரு கிராமத்தில் இருந்த கிணறுகளில் பாசி படிந்திருப்பதைப் பார்த்த ஒரு கவிஞர், ‘இந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஆரோக்கியமாக இல்லையா’ என்று கேட்டாராம். ‘நீச்சல் அடித்து நீரில் விளையாடி மகிழ்கின்ற இளைஞர்கள் இருக்கிற ஊரில் குளம், ஏரி, கிணறு எங்கும் பாசி படராதே’ என்று அவர் கவிதை எழுதியதா படிச்சிருக்கேன். பாசி படர்ந்தால், அந்த ஊரில் இளைஞர்கள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஓர் ஆறு மாசுபடும்போது, ஒரு குளம் தூர்ந்து போகும்போது, ஒரு ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்போது கைகட்டி வேடிக்கை பார்த்தால், அந்த நாடே ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

ஒரு மரத்தையே தும்பிக்கையால வேரோட பிடுங்கி எறியுற பலம் யானைக்கு இருக்கு. அப்படிப்பட்ட யானையை, கோயில் வாசல்ல ஒரு சின்ன கயிறுல கட்டி வச்சிருப்பாங்க. அவ்ளோ பலசாலியான யானையால், இந்தக் கயிறை அறுத்துட முடியாதான்னு தோணும். குட்டியா இருக்கும்போது, எங்கேயும் ஓடிடக்கூடாதுன்னு கயிற்றுல கட்டிப் போட்டிருப்பாங்க. அப்போ அதுக்கு பலம் இருந்திருக்காது. ‘என்னால இந்தக் கயிறை அறுத்துக்கிட்டு எங்கேயும் போக முடியாது’ன்னு மனசுல அப்ப நம்ப ஆரம்பிச்சிருக்கும். வளர்ந்தபிறகும் அதன் மனசுல அந்த எண்ணம் மாறாது.

ஒரு முறை முடியாம போயிட்டா, ஜென்மத்துக்கும் அது நம்மால முடியாதுன்னு நினைச்சு, நிறைய வாய்ப்புகளைத் தவற விடுறோம். நினைச்ச ஒரு இடத்தை இன்னைக்கு போய்ச் சேரமுடியாம இருக்கலாம். ஆனா என்னைக்குமே போக முடியாதுன்னு நினைக்காம பயணத்தைத் தொடரணும். ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கணும்; வாழறதுக்கு ஓர் அர்த்தம் இருக்கணும். ‘சிறுதுளி’ என் வாழ்நாளின் அர்த்தமுள்ள குறிக்கோள்!’’
- எளிமையான உதாரணங்கள் மூலம் உயர்ந்த நோக்கங்களை விளக்குகிறார் வனிதா மோகன். ‘எண்ணங்களை செயலாக மாற்றுகிற’ அவரின் பங்களிப்பு, ‘சிறுதுளி’யில் முக்கியமான துளி.

‘‘நம்ம முன்னோர்கள் தண்ணீருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தந்திருக்காங்கன்னு தெரிஞ்சிக்க, நீர் நிலைகளுக்கு தமிழ் மொழியில் இருக்கிற பெயர்களே போதும். அறுத்துக்கொண்டே தன்னுடைய வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதால் ஆறு என்று பேர் வெச்சாங்க. பெரிய நீர்வழியில் இருந்து கிளை பிரிந்து ஓடுவதால் ஓடை. ஆழமானது என்பதால், கடலுக்கு ஆழி என்று பேர். குளிக்கப் பயன்படுவது குளம். ஏர் பாசனத்திற்குப் பயன்படுவது ஏரி. ஊர் மக்கள் குடிப்பதற்காக கிணற்றில் ஊறும் நீர், ஊருணி.

நீரின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தவர்களின் வாரிசுகள், அதன் மதிப்பு அறியாமல் நீர்நிலைகள் தூர்ந்து போகும்போதும், தூய்மை கெடும்போதும் வேடிக்கை பார்ப்பது வேதனையானது. அந்தக் காலத்தில் ஏரிகள், குளங்கள் தூர்ந்து போகாமல் தடுக்க, ஊர் மக்கள் வரி வசூலித்து தூர்வாரினர். அந்த அக்கறையைத் தொலைத்ததுதான், ஈடு செய்ய முடியாத இழப்பு.
கோவை வட்டாரத்தில் விவசாயமும் பஞ்சாலையும்தான் மக்களின் வாழ்வாதாரம். ‘ப்ரிகால்’ நிறுவனத்தின் சார்பில் ஒரு சின்ன நீர்நிலையைத் தூர் எடுத்த முயற்சிதான், எனக்கு முதல்படி. ‘குடிக்கவே தண்ணீர் இல்ல. குளத்துல எங்கிருந்து தண்ணீர் வரும்’ என்று பேசியவர்கள் உண்டு. பாரம்பரியம் மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து ஒரு செயலில் இறங்கும் என்னைப் போன்றவர்களுக்கு பெரிய சிக்கல் உண்டு. செயலைத் தொடங்கும்போது கிடைக்கிற ஆதரவைவிட, செயல் தோற்கும்போது பல மடங்கு ஏளனம் இருக்கும். ‘எதுக்கு இந்த வீண் வேலை’ன்னு வார்த்தையால கேட்கணும்னு அவசியம் இல்லை; பார்வையில் சொல்லிட்டுப் போயிடுவாங்க. ஏரி, குளங்களில் தூர் எடுப்பதைவிட, விழிப்புணர்வைத் தொலைத்து தூர்ந்து போயிருக்கும் மனித மனங்களைத் தூர் எடுப்பதுதான் பெரிய வேலையாக இருக்கப்போகிறது என்பது எனக்கு அப்போது தெரியாது.



கொங்கு மண்டலம் பயன்பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து ‘சிறுதுளி’ அமைப்பைத் தொடங்கியது முதல் துளி. ஒரு நல்ல செயலில் இறங்கும்போது வெற்றி, தோல்வி குறித்து சிந்திக்கக்கூடாதுன்னு மனசுக்குள்ள திரும்பத் திரும்ப சொல்லிக்குவேன். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்கிற கீதோபதேசம், பொதுக் காரியத்தில் ஈடுபடுகிறவர்களுக்காக சொன்னது போலவே தோன்றும். முதல் குளத்தைத் தூர்வாரியபோது, எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இறங்கினோம். வீட்டுக் குழாயில் தண்ணீர் வரும் நேரத்தில், பாத்திரங்கள் காலியாக இருந்தால்தான் தண்ணீரை நிரப்பி வைக்கமுடியும். மழை வரும்போது ஏரிகளும் குளங்களும்தான் நீரைத் தேக்கி வைக்கும் பாத்திரங்கள். மழை வரும்போது அவை காலியா இருக்கணும்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் இறங்கினோம். தூர் வாரி முடித்த கொஞ்ச நாளில் மழை வந்தது. சிறுதுளி அமைப்பின் சார்பில் தூர் எடுக்கப்பட்ட ‘கிருஷ்ணம்பதி’ குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. எல்லோரும் எங்களைத் திரும்பிப் பார்த்த நேரம் அது. 1000 அடி ஆழத்தில் போர்வெல் போட்டாலும் நீர் கிடைக்காத இடத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தது. தூர் வாரப்பட்ட குளத்தருகே இருந்த வற்றிப்போன கிணறுகளில் நீர் ஊற்று வர ஆரம்பித்தது. ஒரு குளத்தைப் பராமரிக்கும் முயற்சிக்கு இயற்கை பெரிய பலனைத் தந்தது. இயற்கை அன்னையின் பெருங்கருணையை அனுபவபூர்வமாக உணர்ந்த தருணம் அது.

கோவையை செழிப்பான பூமியாக்கிய நொய்யல் ஆற்றில் தண்ணீர் இருந்தால், ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிந்தன. ஆறு வற்றினால் அனைத்தும் வற்றின. இந்த உண்மை புரிய ஆரம்பித்ததும், ‘நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர வேண்டுமென்றால் ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்’ என்கிற யதார்த்தம் புரிந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி, காவிரியில் இணைகிற நொய்யல் ஆறு, எந்தெந்த ஏரி, குளங்களை நிரப்புகிறது என்கிற வரைபடத்தைத் தேடி எடுத்தோம். என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. கோவையைச் சுற்றி ஒரு நெக்லஸ் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி நொய்யல் ஆறும், அதை நம்பி இருந்த நீர்நிலைகளும் இருந்தன. 160 கி.மீ. தூரம் மலை, காடு, நாடு, வயல் என தான் பயணம் செய்கிற அத்தனை இடங்களையும் செழிப்பாக்குகிறது நொய்யல். ‘ஜங்கிள் ஸ்ட்ரீம்’ என்று வர்ணிக்கப்பட்ட ஒரு நதி, நம்முடைய அலட்சியத்தால் இறந்துபோனதை நினைக்கும்போது குற்றவுணர்ச்சியாக இருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ‘அர்வாரி’ என்கிற இறந்துபோன நதியை, மக்கள் ஒன்று சேர்ந்து மீட்டு எடுத்ததை அறிந்து அதைப் போய்ப் பார்த்தோம். ராஜேந்திர சிங் என்கிற மனிதரின் ஆர்வமும் அக்கறையும் மக்களை ஒன்றிணைத்திருந்தது. அவரை அழைத்து வந்தோம். இறந்துபோன நொய்யல் நதியை மீட்க முடியும் என்று நம்பிக்கை அளித்தார். ‘சிறுதுளி’ ஒரு மக்கள் இயக்கமாக மாறினால் அது சாத்தியம் என்று தோன்றியது.

ஆற்றில் மணல் எடுப்பவர்கள் முதல், ஏரி, குளங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் வரை எதிர்கொண்டு இதைச் செய்ய வேண்டும். சிலரின் தனிப்பட்ட முயற்சிகள் ஆபத்தில் முடிந்துவிடும். தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் விவசாயிகளையும், குடிநீர்கூட இல்லாமல் அல்லாடும் பொது மக்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சி, ‘சிறுதுளி’ மக்கள் இயக்கமாக மாறியது. முகம் தெரியாத ஒரு கிராமத்து அம்மாவிடமிருந்து வந்த கடிதம், எங்கள் முயற்சிக்கான மக்கள் ஆதரவைப் பறைசாற்றியது. ‘என்னால் பணம் காசு கொடுத்து உதவ முடியாது. எனக்கு இரண்டு பிள்ளைகள். நீங்கள் தூர்வாரும்போது, மண் சுமக்க அந்த இருவரையும் அனுப்பி வைக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றிருந்த அந்தக் கடிதத்தைப் படித்த கணத்தில் என் கண்ணில் நீர் ததும்பியது.

விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கு அலை அலையாக வந்து மக்கள் ஆதரவு அளித்தனர். நொய்யல் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து குடத்தில் நீர் எடுத்து 33 கி.மீ. தூரத்துக்கு ஒரு விழிப்புணர்வு யாத்திரை தொடங்கினோம். பத்தாயிரம் பேர் கலந்துகொண்டால் கௌரவமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்க, வழியெங்கும் லட்சத்திற்கும் மேலான மக்கள் திரண்டு ஆச்சர்யப்படுத்தினர். அரசாங்கத்தின் ஆதரவும், மக்களின் ஆதரவும் இருந்தால் எந்தக் காரியத்தையும் சாதித்துவிட முடியும். ‘சிறுதுளி’யின் முயற்சிகளுக்கு அரசும் மக்களும் தோள் கொடுத்து பலமாக நின்றனர். வறண்டு போன நதியில் நீர் வந்தது. வறட்சியில் தவித்த மக்களின் வாழ்வில் வளம் சேர்ந்தது.

‘நீங்க செய்யுற முயற்சிகள் எல்லாமே பெரியவங்களுக்கானதாவே இருக்கு. அடுத்த தலைமுறைக்கு உங்கள் நோக்கங்களைச் சொல்லாமல் போனால், இன்னும் பத்தாண்டுகளில் மீண்டும் இதே பிரச்னை வரும்’ என்று எச்சரிக்கை செய்தார் என் அப்பா. அப்படி எடுக்கிற முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளை ‘எல்.ஜி குழுமம்’ சார்பாக செய்ய அவரே முன்வந்தார். ‘சிட்டுக்களுடன் சிறுதுளி’ என்கிற அமைப்பை உருவாக்கி, குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தினோம். நம்மைச் சுற்றி இருக்கும் நீர்நிலைகள் சுத்தமாக இருந்தால், பாதி நோய்கள் வராது என்கிற அடிப்படை பாடத்திலிருந்து ஆரம்பிக்கிறது குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் பயிற்சி. பள்ளிகளில் படித்தவர்கள் இன்று கல்லூரிகளுக்கு சென்ற பிறகும், சுற்றுச்சூழல் ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.
பத்தாண்டுகளைத் தாண்டிய பிறகும், இன்னும் எங்கள் பிரசாரம் முழுமை பெறவில்லை. இன்னும் ஆற்றை மாசுபடுத்துகிற செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆக்கிரமிப்புகள் முழுமையாக விலகிவிடவில்லை. ஆனால் இதற்கு முன்பு, ‘இதையெல்லாம் யார் கேட்பார்கள்’ என்கிற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது. இன்று ‘சிறுதுளி’ அமைப்பின் வளர்ப்புகளாக இருக்கிற இளைஞர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. ஆறு, ஏரி, குளங்களில் நீர் வந்ததைவிட, மக்களிடம் நம்பிக்கை வந்ததைத்தான் ‘சிறுதுளி’ அமைப்பின் முக்கிய பங்களிப்பாகச் சொல்லவேண்டும். இப்போதும் பணிகள் தொடர்கின்றன’’ என்று கம்பீரமாகப் பேசுகிறார் வனிதா மோகன்.

‘குடும்பம், பிசினஸ், பொதுக் காரியம் என எல்லாவற்றிலும் எப்படி சிறந்து விளங்க முடிகிறது?’ என்று வனிதா மோகனிடம் இறுதியாகக் கேட்க, ஒரு கேள்வி இருந்தது. ‘‘குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்த முடிந்த ஒரு பெண்ணால், எதை வேண்டுமானாலும் வெற்றிகரமாக செய்யமுடியும்’’ என்று சிரிக்கிற வனிதாவிடம் உள்ள ஆளுமைத் திறன், அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு!
படங்கள்: புதூர் சரவணன்