தில்லு முல்லு சூப்பர் ஸ்டாருக்கான படம் இல்லை





சென்ற தலைமுறை ரசிகர்கள் புல்லரித்துப் பார்த்த படங்களை இந்த தலைமுறைக்குக் கொடுக்கும் நவீன டிரெண்டில் அடுத்து இடம் பிடித்திருப்பது கே.பாலசந்தர் இயக்கி சூப்பர்ஸ்டார் நடித்த ‘தில்லுமுல்லு’. இதில் இப்போது ரஜினியின் இடத்தில் ‘தமிழ்ப்படம்’ ஷிவா நடிக்க, கே.பியின் இடத்தில் நின்று படத்தை இயக்குகிறார் பத்ரி.

‘‘1980ல வந்து சூப்பர்ஹிட்டான இந்தப் படம் எனக்கு பெரிய சவால்தான். ஹீரோ சூப்பர் ஸ்டார், டைரக்டர் கே.பி., ஒரு கெஸ்ட் ரோல்ல கமல், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, இசைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்னு அத்தனை ஜாம்பவான்களும் இணைஞ்சு வேலை செய்த படம்னும்போது அந்தப் பொறுப்பு மலைக்க வைக்குது...’’ என்று ஆரம்பித்தார் பத்ரி.


‘‘சூப்பர்ஸ்டார் ரோல்ல ஷிவா... தாங்குவாரா..?’’ என்றதற்கு சிரித்தபடி தொடர்ந்தார் அவர்.

‘‘இந்த ‘தில்லு முல்லு’ படத்தைப் பொறுத்தவரை அதுக்கு சரியான ஹீரோ ஷிவாதான்னு சொல்வேன். ஏன்னா, அந்த ஸ்கிரிப்ட் ஒரு சூப்பர்ஸ்டாருக்கானது இல்லை. அதோட மூலமான இந்தி ‘கோல்மால்’ல அமோல் பலேகர்தான் ஹீரோ. ஆனா அதை தமிழ்ல கே.பி. சார் இயக்கும்போது, அவருக்கே உரிய தனித்தன்மை வேண்டி அதுல ரஜினியை யோசிச்சார். அந்த தைரியத்தாலதான் காமெடி ட்ரீட்மென்ட்டுள்ள ஒரு கதை தனித்துவம் பெற்றதோட, ரஜினி சாருக்குள் இருந்த காமெடி நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தது. அதனால அந்த ஸ்கிரிப்ட்டுக்கும் ஒரு சூப்பர்ஸ்டார் வேல்யூ கிடைச்சது.



இங்கே நேரா அமோல் பலேகர் நடிச்ச ஸ்கிரிப்ட்டுல ஷிவா நடிக்கிறார்னா ஒத்துப்பீங்க இல்லையா..? ஷிவாவைப் பொறுத்தவரை காமெடியில தனக்குன்னு ஒரு தனித்தன்மையைக் காட்டி ஜெயிச்சவர். அவருக்கு இந்த ரோல் மிகப் பொருத்தமானதுதான். ‘கலகலப்பு’ படத்துக்கு வசனம் எழுதியப்போ, அதுல ஏற்பட்ட நட்புல என்னை இந்தப் படத்துக்குள்ள கொண்டு வந்ததும் ஷிவாதான். அதுக்கு ஷிவாவுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். அதுக்கடுத்த பொறுப்புகள்னு பார்த்தா, தேங்காய் சீனிவாசன் இடத்துல பிரகாஷ்ராஜையும், சௌகார் ஜானகி நடிச்ச வேடத்துல 800 படங்கள் முடிச்ச கோவை சரளாவையும் நடிக்க வச்சிருக்கிறதும், அந்த ‘தில்லு முல்லு’வுக்கு இசையமைச்ச அதே எம்.எஸ்.வி இந்தத் தலைமுறை இசையமைப்பாளர் யுவனோட சேர்ந்து இதுக்கு இசைக்கிறதும் பொருத்தம்தானே..? பாடல்களை எழுத வாலி சார் இருக்கார்.

அதுல மாதவி நடிச்ச வேடத்துக்கு இப்ப கேரளாவைக் கலக்கிட்டிருக்க காதல் படமான ‘தட்டத்தின் மறையத்து...’ ஹீரோயின் இஷா தல்வாரை மும்பைலேர்ந்து கூட்டி வந்திருக்கோம். பெண்ணோட அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் படத்துல இஷாவைப் பார்க்க தியேட்டருக்குப் போனா, படம் பார்க்க வந்த அத்தனை ஆடியன்ஸும் அதுக்குத்தான் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சது. ‘கண்டேன் ஹீரோயினை...’ன்னு உடனே பேசிக் கூட்டிட்டு வந்துட்டேன்.



படம் உறுதியானப்ப இது சம்பந்தப்பட்டவங்ககிட்ட ஆசி வாங்கிடலாம்னு நானும் ஷிவாவும் கிளம்பினோம். விஷயம் கேள்விப்பட்ட கே.பி. சார் சந்தோஷப்பட்டார். இதுல ரஜினி நடிக்கத் தயங்கியப்ப தைரியம் சொல்லி அவரை நடிக்க வச்ச கதையைச் சொன்னதோட, நடிகர்கள்கிட்ட காமெடி நடிப்பை எப்படி வாங்கணும்னு டிப்ஸும் கொடுத்தார். ‘இந்தப்படம் கண்டிப்பா பெரிய ஹிட்டாகும்...’னு ரஜினியும், ‘இந்தப்படத்தை என்னோட ராஜ்கமல்ல முதல்ல தயாரிக்க நினைச்சோம். ஆனா கே.பி சார் முந்திக்கிட்டு தன்னோட கவிதாலயாவுக்கு வாங்கிட்டார்...’னு ஒரு தகவலை கமல் சாரும் சொல்லி வாழ்த்தினாங்க. அந்த பலத்தோட ஷூட் போறோம்...’’ என்ற பத்ரியிடம், ‘‘எல்லாம் சொல்லிட்டீங்க, நாகேஷ் கேரக்டர்ல நடிக்கப்போறது யார்..?’’ என்று கேட்டால், ‘‘அதை மட்டும் சஸ்பென்ஸா வச்சிருக்கோம். பிறகு சொல்றேன்...’’ என்றார்.
காமெடிப்படத்துல சஸ்பென்ஸுமா..?
- வேணுஜி