காதல் கடிதம்! காயத்ரி





வித்யா தவித்தாள்... அந்தக் காதல் கடிதத்தை தவிர்க்க
முடியாமல் படித்தாள்.

‘உயிரே, நீ வந்தால் வாழ்க்கை. வராவிடின் மரணம். காதல் காக்க வா. உனக்காக நாளை காலை 9 மணிக்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பேன். உனக்காய் தவமிருக்கும் - ராம்.’
படித்தவுடன் விசும்பினாள்.
எதேச்சையாக வித்யாவின் அப்பா பார்த்து விட்டார். வித்யா நடுங்கினாள். விருட்டென லெட்டரைப் பிடுங்கினார்; படித்தார்.
அம்மாவிடம் உடனே காண்பித்தார்.
ஆத்திரத்தில் இருவரும் வெடித்தனர்.
‘‘என்னம்மா இது?’’
வித்யா அழுதாள்.
‘‘ஆபீஸ் இன்னைக்கு லீவுன்னு பரணைக் கிளீன் பண்ணேன். பழைய ட்ரங் பெட்டியில இது கிடைச்சது. 25 வருஷம் முன்ன அம்மாவுக்கு இப்படி எழுதித்தான் காதல் கல்யாணம் பண்ணியிருக்கீங்க! அப்புறம் ஏம்பா நான் மனசுக்கு பிடிச்சவர்னு ஒருத்தரைக் காட்டினப்போ தடுத்தீங்க?’’
கோபம் மறைந்து அப்பா சிரித்தார்.

‘‘ஹும்..! உனக்குப் பிடிச்சவரை, அவரோட பெத்தவங்களோட பார்த்து பேசி முடிச்சுட்டு வந்துட்டேன்மா. இப்படி ஒரு லெட்டர் உனக்கு வந்துட நாங்க விட மாட்டோம்!’’
வித்யா வெட்கமானாள். அம்மாவும்தான்..!