
‘சந்திரயான் 1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நாளிலிருந்து அநேகமாக அனைத்து ஊடகங்களிலும் எனது பேட்டிகள் பல கட்டங்களில் பதிவாகி இருந்தன. அந்த சமயத்தில், எனது கடந்த கால அனுபவங்களைச் சேர்த்து இளைஞர்களுக்கான ஒரு நம்பிக்கைத் தொடர் எழுதலாமே என்று யோசனை எழுந்தது. ஆரம்பித்தேன். குங்குமத்தில் ‘கையருகே நிலா’ தொடர் முளைத்தது. விளையாட்டாக முப்பது வாரங்கள் ஓடி விட்டன. எனது குழந்தைப் பருவம் முதல் பள்ளி, கல்லூரி நாட்கள் என விரிந்தது. ‘சந்திரயான்’ திட்டம் தொடங்கி வளர்ந்த முறை, அதற்குப் பின் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எனப் பலவற்றையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எனது மாணவப் பருவத்தில் பங்கெடுத்த அனைத்து இலக்கிய மன்றப் போட்டிகளிலும் வென்றிருக்கிறேன். ஆனாலும் ‘தமிழரசு’ இதழ் நடத்திய ஒரு வெண்பா போட்டியில் இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துவுடன் போட்டியிட்டுத் தோற்றுவிட்டேன். எனது பாதை மாறியது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், நான் படித்த பொள்ளாச்சி கல்லூரி விழாவில் எனது பேச்சு ஆங்கிலத்தில் அமைந்தது. மாணவர்களிடம் அது சரியாகப் போய்ச் சேரவில்லை. அருட்செல்வர் மகாலிங்கமும், திரு.கிருஷ்ணராஜ் வானவராயரும், ‘தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள்.
அன்று மாலையே & கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் ஒரு மேடையில் - தமிழில் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது. அதுவும் திரு.சாலமன் பாப்பையா தலைமையில் பல தமிழ் அறிஞர்களும் கூடியிருந்த ஒரு அவையில். அப்போது, ‘‘எனது தமிழ், நீண்ட பெங்களூர் வாழ்க்கையிலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகவும் காயப்பட்டு விட்டது.
எனவே தமிழில் அதிகம் என்னால் பேச முடியவில்லை’’ என்று சொல்லி எனது பேச்சை சுருக்கமாக முடித்து அமர்ந்தேன். பின் ஒருநாளில், இதை நண்பர் வைரமுத்துவிடம் சொன்னபோது பட்டென்று வந்த பதில், ‘காயம்தானே பட்டது, எலும்பும் சதையும் உங்களைத் தூக்கி நிறுத்தும்தானே!’ கவிஞனின் வார்த்தை என்றும் பொய்ப்பதில்லை; பொய்க்கவும் கூடாது. கொஞ்சம் முயன்றேன், இப்போது திரும்பவும் என்னால் பேசவும், எழுதவும் முடிந்திருக்கிறது. எனது மனதில் பட்டவைகளை அப்படியே கணினியில் நேராகப் பதித்தேன். ‘குங்குமம்’ அப்படியே அதை அச்சில் பதித்தது. அதிலும் ஒரு தமிழ் நடை தெரிந்ததாகப் பலரும் சொன்னார்கள். எனது கையருகே இருந்த தமிழ், ‘கையருகே நிலா’வில் என்னுடன் கைகோர்த்தது. அதை முழுதாய்க் கைக்கொள்ள இன்னும் பயிற்சிகள் வேண்டும். பயிற்சிகளே பண்படுத்தும்; பயிற்சிப்பேன்.
எந்த ஒரு செயலுக்கும் அதற்கான ஒரு சரியான நேரம் உண்டு. அதே போல், எந்த ஒரு நேரத்திற்கும் ஒரு சரியான செயல் உண்டு. அப்படியே, எந்த ஒரு இடத்திற்கும் அதற்கென்ற சரியான பொருளும் செயலும் உண்டு. அதே மாதிரி எந்த ஒரு செயலுக்கும் எண்ணத்திற்கும் ஒரு சரியான இடமுண்டு. ஆனால் அந்த நேரத்தையும் இடத்தையும் சரியாகப் பயன்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. அந்த வகையில் எனக்கு ‘குங்குமம்’ நல்ல இடத்தையும் நேரத்தையும் கொடுத்தது. அதை முடிந்தவரை பயன் படுத்தி, கடந்த முப்பது வாரங்களில் எனது மனதில் பட்ட சில எண்ணங்களையும், எனது செயல்களையும் உங்களிடம் பங்கிட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் எனது எண்ண ஓட்டங்களை வித்தியாச வித்தைகளாய் ஒரு பக்க ஓவியத்தில் வடித்தார் ஓவியர் ராஜா. அவற்றையும் நண்பர்கள் எதிர்பார்த்தும், பார்த்தும் பாராட்டிப் பேசி மகிழ்ந்தனர்.
‘கையருகே நிலா’ இளைஞர்களுக்கான தொடர் என்றாலும், அறிவுரைகள் அதிகம் சொல்லவில்லை. எனது வாழ்க்கையின் வழியில் வந்தவைகளை, நான் அனுபவித்ததில் சிலவற்றை எடுத்துப் பந்தியில் வைத்துப் பரிமாறியிருக்கிறேன். பசியுள்ளவர்கள் பசியாறலாம் என்ற எண்ணத்தில் எழுதியிருந்தேன். இந்தச் சிறு தொடர், வாசக நண்பர்களிடம், வெவ்வேறு வகையான கருத்துகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. என்னுடன் பணியாற்றும் இளைஞர்களிடம் ஏற்பட்ட பாதிப்பு, ஒரு சிறு குழு முயற்சியாக முளைத்துள்ளது. பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பலர், பொறியியல் படிப்பில் அதிகம் சோபிப்பதில்லை. அதிலும் நான்காம் ஆண்டு புராஜெக்ட் ஒர்க் என வரும்போது மிகவும் திணறுகிறார்கள். மிகப் பலர் பணம் செலவழித்து வெளியில் செய்த வேலையை வாங்கி, தனதாகக் கொடுக்கும் வழக்கத்தையும் கைக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரு வருத்தமான செயலே. இந்த நிலைக்கு ஏதாவது செய்யலாம் என யோசித்தேன்.
கிருஷ்ணகிரி பள்ளி ஒன்றில் பரீட்சார்த்த முயற்சி தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தயார் செய்யும் முயற்சி. அதன்படி என்னுடன் வேலை செய்யும் இளைஞர் குழு மாதம் ஒருமுறை, ஒரு நாளை பள்ளியில் செலவழிக்கிறது. மாணவர்களுடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் தயார் செய்ய முயற்சிக்கிறோம். சமீபத்தில் எனது கைக்கு வந்த இராசேந்திரன் என்ற ஒரு இளைஞரின் ‘2020ல் வளர்ந்த இந்தியா’ என்ற புத்தகம் போன்ற முயற்சிகள், மருத்துவம் படிக்கும் எனது தம்பி மகன் செந்தில் தனது தோழர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து ஆரம்பித்திருக்கும் சீனா பாணி சைக்கிள் இயக்கம், எனது பெயரின் பின் ஒதுங்காமல் எனக்கும் மேல் தானே உயர முயலும் எனது மகன் என இன்றைய இளைஞர்களின் ஆக்கபூர்வ செயல் ஓட்டங்களைக் காண முடிந்தது. இளமை என்பது வயதைப் பொறுத்தது அல்ல என்பதை வயதில் மூத்தவர்களும் பலர் உணர்த்தினார்கள்.
திருமதி இராதாவின் ‘ஆழ்கடல் சிப்பி’ என்ற கவிதைப் புத்தகம் அதை விளக்கியது. ‘கையருகே நிலா’ தொடங்கிய பின் எனக்கு அவரது மகன் பேராசிரியர் இராம கிருஷ்ணன் மூலம் அந்தப் புத்தகம் கிடைத்தது. இதேபோல இந்தக் காலகட்டத்தில், பல்வேறு நிலைச் சந்திப்புகள், நிகழ்வுகள், நேர்காணல்கள், கருத்தாடல்கள். மிகச் சிலதை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு பகிர்வும் ஒரு காரணத்தால்! ‘கல்விப் புரவலர் வளை’, ‘தலைமைப் பண்பு’ என ஒரு சிலதை மட்டுமே கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தேன். மற்றவற்றை விரிவாக்கவில்லை. இருந்தாலும், அந்தக் காரண இழைகளை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அதுவே எனது எழுத்தின் வெற்றி. நான் எழுதியதற்கான நோக்கமும் அதுவே.
எங்கும் எதிலும் எப்பொழுதும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான். அந்த வகையில் இந்தத் தொடர் எழுதியதிலும் புதிதாகப் பலதும் கற்றேன். எனது வாழ்க்கையை நானே திரும்பிப் பார்த்துக் கற்றதும் ஒரு சுகமே. சில மனங்களைத் தொட்டதும், சிலரைக் கைபிடித்துத் தூக்கியதும், சிலரின் கைபிடித்து நடந்ததும்கூட நல்ல அனுபவங்கள்தான்.
‘கையருகே நிலா’ - எனது எழுத்தின் ஒரு முன்னோட்டம். ‘சந்திரயான் 2’&ன் வேலைப்பளு முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில், கொஞ்சம் நிறுத்தி நமது நிலவுப் பயணத்தைப் பின்னொரு சமயம் தொடர்வோமா? ‘சந்திரயான் 2’ஐ 2013ல் நிலவில் இறக்கியபின், வேறு ஒரு நாள் வேறு ஒரு களத்தில் திரும்ப முளைப்பேன். அதற்குள் ‘வளர்ந்த இந்தியா’வை நோக்கிய பாதையில், இந்தியா அதிகம் வளர்ந்திருக்கும். நமது பங்கும் அதில் இருக்கும்; இருக்க வேண்டும். அதுவரை, எனது பேச்சுக்கும் எழுத்திற்கும் கொஞ்சம் ஓய்வுகொடுத்து, முழுதாக எனது ‘சந்திரயான் 2’ பணிக்குப் போகிறேன்.
-சந்திரயான் மயில்சாமி அண்ணாதுரை