
உங்கள் ராசியின் சின்னமே போர்க்கருவியான வில்லைக் குறிப்பதால் எதையுமே போராடிப் பெறுவதில் தனித்த சுகம் காண்பீர்கள். போராட்டம் இல்லையெனில் போரடிக்கும் என்பீர்கள். சவாலான விஷயங்களெல்லாம் உங்களுக்கு அவல் சாப்பிடுகிற மாதிரி இருக்கும். அதனால் தனுசுக்கு அதிபதியான குருவையே போராட்ட குரு என்று தனித்து அடையாளப்படுத்தலாம்.
குறைகள், ஏமாற்றம், விரக்தி என்று வாடுவோரை தேடிப் பிடித்து தேற்றுவீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிப்போரை விலக்குவீர்கள். தேர்ந்த வேடன் சரியான இலக்குகளைத் தேடிச் செல்வதுபோல, பெரிய விஷயங்களைத்தான் குறிபார்த்து நகருவீர்கள். அதேபோல ஒரு விஷயத்தைத் தொடர்ந்து சென்று கையகப்படுத்திக் கொள்வதில் உங்களுக்கு இணை நீங்கள்தான். ''ரெண்டு வருஷமா தொடர்ந்து வந்துட்டுப் போறாரு’’ என்று உங்களின் வைராக்கியத்தை பலரும் பாராட்டுவார்கள்.
விஞ்ஞானியைப்போல எடுத்துக்கொண்ட விஷயங்களை மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். ஆனால், எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து போராடி இறுதியில் ஜெயிப்பீர்கள். வில் லேசில் வளையாது. ஆனால், நீங்கள் வளைந்துவிட்டால் வணங்கி நிற்பீர்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கும். தனுசுக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்பார்கள். சொந்த ஜாதகத்தில் தனுசுக்குள் ஏதேனும் ஒரு நல்ல கிரகம் இருப்பது நல்லது. உலக நடப்புகளை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள். ‘‘நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்தா சீக்கிரமே உலகம் அழிஞ்சுடும் போலிருக்கு’’ என்று சொல்வீர்கள்.
தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்கு பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். ‘‘பணம் என்னங்க பெரிய பணம்’’ என்று நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். குபேரனாக இருந்தாலும், சிறியதாக அவமானப்படுத்தினாலும் ஒதுக்குவீர்கள். ‘‘அவன் கிடக்கிறான்’’ என்று உதறுவீர்கள். அதேநேரம் குசேலனாக இருந்தாலும் உண்மையான பாசம் இருப்பின் நெகிழ்ந்து போவீர்கள். இரண்டாம் இடத்திற்கு மகரச் சனி வருவதால் பேச்சில் எப்போதும் தீர்மானம் இருக்கும். சட்டென்று எல்லா விஷயத்திலும் உள்ள எதிர்மறைதான் கண்ணுக்கு தெரியும். அதனாலேயே வீட்டில் இருப்பவர்கள், ‘‘உன் வாயால எதுவும் சொல்லாதே’’ என்பார்கள்.
மூன்றாம் இடத்திற்கு அதிபதியாகவும் கும்பச்சனி வருகிறது. எப்போதுமே ஒரு குழுவினரோடு இணைந்து செயல் படக்கூடிய நீங்கள், திடீரென்று தனிமையை விரும்புவீர்கள். சட்டென்று குழுவைக் கலைப்பீர்கள். முயற்சி வெகுநாட்களாக சிந்தனை மட்டத்தில் இருக்கும். தீர்மானமாக யோசித்த பிறகுதான் காரியத்தில் இறங்குவீர்கள். சட்டென்று ஒரு காரியத்தை எடுத்தெல்லாம் முடிக்க மாட்டீர்கள். இளைய சகோதரர் மீது பாசமழை பொழிவீர்கள். ‘‘கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டி அப்படியே தம்பிக்குக் கொடுத்துட்டான்’’ என்பார்கள்.
உங்களின் ராசிநாதனான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் அம்மாதான் எல்லாமும் என்றிருப்பீர்கள். ‘‘முதல்ல அம்மாவுக்கு; அப்புறம்தான் எனக்கே’’ என்று பிரதானமான இடம் கொடுப்பீர்கள். இப்படி அதீத பாசமாக இருப்பதால், ‘தாயா... தாரமா...’ என்கிற போராட்டம் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் குரு கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால் மாற்றாந்தாய் வளர்ப்பில் நீங்கள் வளர வேண்டியிருக்கும். சிலருடைய தாய் இரண்டாம் தாரமாக இருப்பார்கள். வீட்டை பார்த்துப் பார்த்து கட்டுவீர்கள். இயற்கை சிதையாமல் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் வீடு கட்டும் இடத்தில் அழகான மரங்கள் இருந்தால் வெட்டுவதற்கு யோசிப்பீர்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றாலும் வேர்க்கடலை சுண்டல் இருக்கிறதா என்று தேடுவீர்கள். எப்போதுமே ஜீப் மாதிரி வாகனங்களைத்தான் மிகவும் விரும்புவீர்கள்.
ஐந்தாம் இடமான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. பிள்ளைகள் மீது பாசத்தோடு இருப்பீர்கள். அவர்களுக்கு எந்த விஷயத்திலும் பிரஷர் கொடுக்க மாட்டீர்கள். ‘‘ரேங்க் கார்டுல கையெழுத்து போடமாட்டேன்’’ என்று பிடிவாதம் பிடிக்க மாட்டீர்கள். ‘‘கட்டிக் கொடுக்கற சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளுக்கு’’ எனும் பழமொழியை முழுமையாக நம்புவீர்கள். ‘அவங்க அனுபவத்துல புரிஞ்சுப்பாங்க’ என்று விட்டு விடுவீர்கள். ‘‘என்ன ஸார், பையன் ப்ளஸ் 2 முடிச்சிட்டான். அடுத்து என்ன பண்ணப் போறான்’’ என்றால், ‘‘நாம என்னங்க முடிவு பண்றது. அதை அவனே பார்த்துப்பான்’’ என்பீர்கள். தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் என்று பூர்வீக சொத்துக்கள் எதையும் விற்காமல் வைத்திருப்பீர்கள். புரட்சிகரமான சிந்தனை உண்டு. அதேபோல மனிதநேயத்தை பாதிக்கும் பக்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பீர்கள்.
ஆறாமிடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் மர்ம ஸ்தானத்தில் நோய் வந்தால் முன்கூட்டியே மருத்துவம் பார்த்துவிடுங்கள். இல்லையெனில் பிரச்னை பெரிதாகும். கடன்கள் வாங்கினால் சட்டென்று அடையாது. வழக்குகள் நீண்டுகொண்டே செல்லும். அதனால், சொத்துகளுக்காக கடன்களை வாங்குங்கள். இல்லையெனில் வேறு எதற்காகவாவது செலவழிந்து கொண்டிருக்கும்.

ஏழாமிடமான வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் இடத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். அதனால் வாழ்க்கைத் துணைவர் புத்திக் கூர்மை நிறைந்தவராக இருப்பார். வேறு மாநிலத்தவராகக் கூட அமைவதுண்டு. அவர் எத்தனை திறமையாளராக இருந்தாலும், முடிவெடுப்பது மட்டும் உங்கள் கைகளில்தான் இருக்கும். எட்டாமிடத்திற்கு உரியவராக சந்திரன் வருவதால், பயணிப்பது என்பது பிடித்தமான ஒன்றாகும். திட்டமிடாத திடீர் பயணங்கள் அதிகமிருக்கும். உங்களில் பலர் அறுபது கிலோமீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் வேலைக்கு வருவீர்கள். எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானமாக இருக்கிறது. படுத்த படுக்கையாகக் கிடக்க மாட்டீர்கள்.
தந்தை மற்றும் பிதுர்காரகன் எனும் ஸ்தானத்திற்கு அதிபதியாக ஆத்ம காரகனான சூரியன் வருகிறார். தந்தையின் வழியில் தவறாது செல்வீர்கள். பணம் மட்டுமல்லாமல் உங்களுக்காக புண்ணியத்தையும் சேர்த்து வைத்திருப்பார் தந்தை. அவரின் புகழையும், பெயரையும் காப்பாற்றுவீர்கள். தந்தையாருக்கு சம்பாதிப்பது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், சேர்த்து வைக்கத்தான் தெரியாது. கையில் நாலு காசு இருக்கும்போதே சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். பத்தாமிடத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் எந்த அலுவலகத்திலும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமர்வீர்கள். அதேபோல கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வீர்கள்.
வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகளை வைத்துக் கொண்டு முதியோர் இல்லம் அமைப்பீர்கள். நிதி நிறுவனங்களை ஏற்று நடத்துவீர்கள். ஷேர் மார்க்கெட் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறது. இது முக்தி ஸ்தானத்தையும் குறிக்கும். எனவே, மகான்களின் ஜீவ சமாதிகள், சித்தர் வழிபாடு என்று ஈடுபடுவீர்கள்.
‘‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையிலே’’ எனும் தத்துவத்தை ஒட்டியே உங்கள் ஆன்மிகப் பாதை அமையும். ஐந்தாம் இடத்திற்கும், பன்னிரெண்டாம் இடத்திற்கும் அதிபதியாக செவ்வாயே வருவதால் குழந்தைகளுக்காக எல்லா தியாகத்தையும் செய்வீர்கள். அவர்கள் சந்தோஷம்தான் முக்கியம் என்றிருப்பீர்கள்.
தனுசு ராசிக்கு அதிபதியாக குரு வருகிறார். அதேசமயம் இவரை கோதண்ட குரு என்று அழைப்பர். போராட்டம் என்பது பழகிவிடுவதால் வாழ்வில் பல சமயங்களில் சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு நிற்பீர்கள். ‘என்ன சம்பாதிச்சி என்ன... இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கா வாழறோம்...’ என்றெல்லாம் புலம்பும்படியாக இருக்கும். எல்லாம் இருந்தும் ஒரு வெற்றிடம் இருக்கும். ஜெயித்ததற்கான அர்த்தத்தை உணராது இருப்பீர்கள். எப்போதும் மனம் ரணமாக இருப்பதைப் போன்று உணர்வீர்கள்.
அதனால் இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்றானது. இத்தலம் ஜடாயு எனும் கழுகுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தோடு விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார். நிம்மதியைத் தருவார்.
திருப்புட்குழி திருத்தலம் சென்னையிலிருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.
அடுத்த வாரம் மூலம் நட்சத்திர அன்பர்களுக்காக...
- முனைவர் கே.பி.வித்யாதரன்