
தஞ்சை
பெரிய கோயில்... கட்டி முடித்து 1000 ஆண்டுகளை நிறைத்து இம்மாதம் 25, 26
தேதிகளில் விழா கொண்டாடும் இந்தக் கோயில், தமிழ் இனத்தின் பெருமை.
இயற்கையும் எதிரிகளும் நிகழ்த்திய தாக்குதல்களைத் தாங்கி, கட்டிடக்கலையின்
உச்சமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் இக்கோயில், மாமன்னன் ராஜராஜ சோழனின்
வாழ்நாள் கனவு. நெறிபிறழாத ஆகம விதிகளையும், வலுவான கட்டுமான
நுட்பங்களையும் கொண்ட இந்த பெரிய கோயில், தமிழ் இனத்தின் சரித்திரத்தையும்,
அளவுக்கடங்கா அற்புதங்களையும் தனக்குள்ளே நிறைத்து வைத்திருக்கிறது.
ஒவ்வொரு
கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். இந்தக்
கோயிலின் அழகியலை அங்குலம் அங்குலமாக வர்ணித்து, பக்கம் பக்கமாக எழுதலாம்.
பக்தி தழைத்து நின்ற ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக,
நிர்வாக மையமாக விளங்கிய பெரிய கோயிலை ‘ராஜராஜேஸ்வரம்’ என்று
குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள். கல்லணை நீர் தழுவிச்செல்லும்
திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே
விளங்கும் விமானம், பிரபஞ்சத்தின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச்
சுமந்து கொண்டிருக்கும் சிற்பங்கள் என தஞ்சை பெரிய கோயில் தத்துவ
வெளிப்பாடாகவே நிற்கிறது.
காஞ்சி மாநகரில், கலைமகன் ராஜசிம்ம
பல்லவன் கட்டிய கைலாசநாதர் கோயில்தான் பெரியகோயில் எழுவதற்கான ஆதாரம்.
அக்கோயிலின் அழகிலும் கட்டுமானக்கலையிலும் உள்ளத்தைப் பறிகொடுத்த ராஜராஜன்,
தன் தலை நகரிலும் அப்படியான ஒரு கலைக்கோயிலை வார்க்க விரும்பினான். அந்த
மன எழுச்சியின் வெளிப்பாடுதான் பெரிய கோயில். இக்கோயிலின் ஒவ்வொரு
கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. இப்பெருமையை நிலைநாட்டிய
கர்த்தாக்கள் ஏராளம் பேர் என்றாலும், குறிப்பாக 12 பேர்
குறிப்பிடத்தகுந்தவர்கள். முதலாமவன் ராஜராஜன். அடுத்தவன், ‘வீரசோழன்
குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்’. இவன்தான் பெரிய கோயிலை வடிவமைத்த
தலைமை தச்சன். இவனது கலையைப் போற்றி, தன் பெயரையே பட்டமாக அணிவித்து அழகு
பார்த்தான் ராஜராஜன். அடுத்து, மதுராந்தகனான நித்த வினோத பெருந்தச்சன்,
இலத்தி சடையயான கண்டராதித்த பெருந்தச்சன். இந்த இருவரும் குஞ்சரமல்லனின்
உதவியாளர்கள்.
இக்கோயிலுக்கு
கணக்கற்ற நகைகளையும் செப்புத்திருமேனிகளையும் கொடையாக அளித்த ராஜராஜனின்
சகோதரி குந்தவை. திருச்சுற்று மாளிகையைக் கட்டிய ராஜராஜனின் சேனாபதி,
கிருஷ்ணன் ராமன் எனப்படும் மும்முடிச்சோழ பிரம்மராயன். பெரிய கோயிலின்
நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன்
சூரியனான தென்னவன் மூவேந்த வேளாண். ராஜகுரு ஈசான சிவபண்டிதர். ராஜராஜனின்
புதல்வன் ராஜேந்திர சோழன். இவனது ராஜகுரு சர்வசிவ பண்டிதர். கோயிலின்
தலைமைக்குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவனப்பிடாரன். கற்களில் எழுத்து
வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாருளுடையான்.
இவர்கள்
அனைவருக்கும் பெரிய கோயிலின் வனப்பிலும் வார்ப்பிலும் மிகுந்த பங்குண்டு.
ஏறத்தாழ கி.பி.850&ல் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று விஜயாலய சோழன்
ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தஞ்சையில் சோழர் சரித்திரம்
தொடங்குகிறது. சுமார் 176 ஆண்டுகள் தஞ்சை, சோழர்களின் தலைநகரமாகவும்
கலைநகராகவும் விளங்கியது. சோழ மன்னர்களில் மூன்றாமவரான கண்டராதித்தர்
பெரும் சிவபக்தர். அவர் நாடாள விருப்பம் இன்றி ஆட்சியுரிமையை தனது தம்பி
அரிஞ்சய சோழனிடம் வழங்க, அதுமுதல் தம்பியின் வாரிசுகளே ஆட்சிக்கட்டிலில்
அமர்கிறார்கள். அவ்வழி வந்தவனே ராஜராஜன். சுந்தர சோழனுக்குப் பிறகு, மகன்
ராஜராஜனை அரியணையில் ஏற்ற விரும்புகிறார்கள் மக்கள்.
ஆனால்,
ஆட்சியை தன் தம்பிக்கு விட்டுக்கொடுத்த கண்டராதித்தரின் மகன் மதுராந்தக
உத்தம சோழனுக்கு அரசாளும் விருப்பம் இருப்பதைத் தெரிந்து கொண்ட ராஜராஜன்,
அவரையே அரியணையில் அமரச்செய்தான். ரத்தபந்தங்களையே கொன்றொழித்து ஆட்சியைப்
பிடித்த எத்தனையோ மன்னர்களை சரித்திரத்தில் படித்த நமக்கு,
சித்தப்பாவுக்காக ஆட்சியை விட்டுக்கொடுத்த ராஜராஜனின் தன்மை வியப்பை
ஏற்படுத்துகிறது.
சோழப்பெருமன்னன் சுந்தர சோழனுக்கும், திருக்கோவலூர்
மலையமான் குலத்தில் உதித்த வானவன்மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவனே
ராஜராஜன். இயற்பெயர் அருண்மொழி. இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்த
ராஜராஜனை, பெரிய பாட்டி செம்பியன்மாதேவியும், அக்கா குந்தவையும் அன்பூட்டி
வளர்த்தனர். ராஜராஜன் இளவயதிலேயே சிவத்திலும் சைவத்திலும் மிகுந்த ஆர்வம்
கொண்டிருந்தான். இவனது பட்டத்து அரசி லோகமாதேவி.

இவளுக்கு
குழந்தைகள் இல்லை. மற்றொரு மனைவியான வானவன்மாதேவிக்கு மூன்று பிள்ளைகள்.
மூத்தவன் ராஜேந்திரன். அப்பனுக்குத் தப்பாத பெருவீரன். இரு பெண்பிள்ளைகளில்
மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை.
ராஜராஜன் பல
சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக இருந்தவன். நாட்டை அங்குலம் அங்குலமாக
அளவெடுத்தான். நானறிந்த உலக சரித்திரத்தில் ‘சர்வே சிஸ்டத்தை’ தொடங்கிவைத்த
முதல் அரசு ராஜராஜனுடையதுதான். நாட்டை, கூற்றமாகவும் வளநாடுகளாகவும்
பிரித்து நிர்வாக வகைப்படுத்தினான். 50 கிராமங்கள் சேர்ந்தது ஒரு கூற்றம்.
பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. இந்த சர்வே பணிக்கு பயன்படுத்திய சில
அளவீடுகள்.
1-ஒன்று, 1/2-அரை, 1/4-கால், 1/5 -மா,
3/16-மும்முக்காணி, 3/20-மூன்று வீசம், 1/1 லட்சத்து 72,200-இம்மி, 1/18
லட்சத்து 38,400-அதிசாரம்
பெரியகோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்த நுணுக்கமான அளவீடுகளைப் பார்க்கிறபோது பெரும் வியப்பு ஏற்படுகிறது.
சோழநாட்டை
சோறுடைத்தாக்கியது ராஜராஜனின் மற்றொரு மேன்மைப்பணி. மேட்டுப்பாங்கான
பகுதிகளுக்கும் வாய்க்கால்கள் வெட்டி காவிரியை கொண்டு சென்றான்.
ஆயிரக்கணக்கான ஏரிகளை வெட்டி, வயற்காடுகளை வளப்படுத்தினான். மக்களுக்கு
நிலக்கொடை கொடுத்து, அதன் வருமானத்தில் தொடர்ந்து ஏரிகளைப் பராமரிக்கச்
செய்தான். புதுக்கோட்டையை ஒட்டியுள்ள திருக்கோகர்ணம் சிவன் கோயிலில் உள்ள
ஒரு கல்வெட்டைப் படிக்கிறபோது ராஜராஜனின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள
முடிகிறது.
‘இப்போதும், எதிர்காலத்திலும் இந்த ஏரிக்கு எந்த அழிவும் நேராமல் பாதுகாப்பவர்களின் பாதத்துளியை என் தலைமேல் தாங்குவேன்...’
இவ்விதம்,
குடிமக்கள் மேல் நேசமும் அக்கறையும் கொண்டு பேராட்சி செய்த மாமன்னன்
ராஜராஜன், அங்குலம் அங்குலமாக அழகு செய்து, கற்கள் கற்களாக வடிவம் வார்த்து
உருவாக்கிய பெரிய கோயிலில் புதைந்து கிடக்கும் அற்புதங்களையும், இக்கோயில்
பற்றிய தவறான கருத்துகளையும் வரும் வாரங்களில் அலசுவோம்...
-குடவாயில் பாலசுப்பிரமணியன்