அசத்திய ரஜினி உருவ ரோபோ



இந்திய சினிமா வாய் பிளக்க விருக்கும், ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘எந்திரன்’ ரிலீசுக்கான கடைசிக்கட்ட வேலைகள் எந்திரகதியில் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தின் டி.ஐ பரபரப்புக்கிடையில் படம் பற்றியும், பட உருவாக்கத்தின் பின்புலத்தில் கொட்டிய உழைப்பு மற்றும் ரஜினி, ஐஸ்வர்யா ராய் பச்சன், இயக்குநர் ஷங்கர் பற்றியும் ஸ்பெஷலாகப் பேசுகிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. ‘‘இந்திய சினிமாவோட ஜிஷீஜீ ஙிக்ஷீணீவீஸீs னு சொல்லக்கூடிய டைரக்டர் ஷங்கர், ரஜினி சார், ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டின்னு முக்கியமானவங்க கைகோர்த்த படம் இது. அதோட இத்தனை பிரமாண்டமா இந்தப்படத்தை உருவாக்க சன் பிக்சர்ஸை விட்டா வேற எந்தக் கம்பெனியும் இல்லைன்னுதான் சொல்லணும். அது ஷூட்டிங்குக்கான கோஆர்டினேஷன்ல இருந்து, ஆடியோ லாஞ்ச் வரை தெளிவா தெரிஞ்சது.  

ஏற்கனவே ‘ஜீன்ஸ்’ல ஏழு உலக அதிசயங்களைக் காட்டிட்டதால, அடுத்து பிரமாண்ட லொகேஷன்களைக் காட்ட ரொம்பவே இன்ட்ரஸ்ட் எடுத்துக்கிட்டோம். அப்படி ஆஸ்திரியா, ஜெர்மனின்னு சுத்திப்பிடிச்ச லொகேஷன்தான் தென் அமெரிக்காவில் இருக்க ‘பெரு’. அங்கே ஆண்டீஸ் மலைத்தொடர்ல இன்காஸ் நாகரிகத்தைச் சேர்ந்தவங்க உருவாக்கிய அரசு இருந்தது. அந்த இடத்தை எட்டாவது உலக அதிசயமா சமீபத்திலதான் அறிவிச்சாங்க. அங்கேதான் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் எடுத்தோம். அந்த இடத்துக்குப் போய்ச்சேர 48 மணி நேரம் விமானங்கள், ரயில், கார்னு அமேசான் காடெல்லாம் தாண்டி பயணம் போகணும். அதோட அங்கே இருக்க பெரிய கொசுக்கள் கடிச்சா, கொடிய ‘யெல்லோ ஃபீவர்’ வரும்ங்கிறதால இங்கிருந்து போகும்போதே எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டுதான் போனோம். அப்படியும் அந்த பிரமாண்ட கொசுக்கள் கடிச்சு ஐஸ்வர்யாவுக்கு அங்கங்கே வட்டவட்டமா தடிச்சுப் போயிடுச்சு. எந்தப்பயணத்துக்கும் அசராம வந்த ரஜினி சார் கிரேட். ‘என் படங்கள்லயே அதிகமா உழைச்சது இந்தப் படத்துக்காகத்தான்’னு சொன்னார் அவர். அது உண்மைதான். ஷூட்டிங் இடைவேளைலயும், விமானப் பயணத்திலயும் சரிக்கு சரியா உக்காந்து சகல விஷயங்களையும் பகிர்ந்துக்குவார் ரஜினி. அந்த எளிமை வேற யார்கிட்டயும் நான் பார்க்காதது.

எல்லாரும் வியக்கக்கூடிய இன்னொரு லொகேஷன், பிரேஸில்ல ‘லென்காயிஸ்’ங்கிற இடம். போட்ல ரெண்டரை மணிநேரம் காடெல்லாம் தாண்டி பயணம் போய், பிறகு பாலைவனத்தில கார் பயணம் போகணும். பாலைவனத்துக்கு நடுவில ஓயாஸிஸ்னு சொல்ற வட்டவட்டமான 50, 60 குளங்கள் இருக்கு. அந்த வறண்ட பாலைவனத்துக்குள்ள இப்படி நீல நிறக்குளங்கள் இருக்கும்னு யாருமே எதிர்பார்க்க முடியாது. அமெரிக்கர்களே இப்படி ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சு எட்டு வருஷம்தான் ஆகுதுன்னாங்க. அங்கே ரஜினியும், ஐஸும் ஆடற ‘காதல் அணுக்கள்’ பாடலை எடுத்தோம். இதெல்லாம் இந்திய சினிமா பார்க்காத அதிசயங்களா இருக்கும். டெக்னிக்கலா சொல்லணும்னாலும் இந்தியப் படங்கள்லயே முதல்முறையா அனிமேட்ரானிக்ஸ் பண்ணியிருக்கோம். அதுக்காக ‘ஜுராஸிக் பார்க்’, ‘டெர்மினேட்டர்’ படங்களுக்கு அனிமேட்ரானிக்ஸ் செய்த ‘ஸ்டான் வின்ஸ்டன்’ ஸ்டூடியோஸ்ல ரஜினியோட ரோபோவை உருவாக்கினோம். இதுக்காக ரஜினி சாரை பாடி ஸ்கேன் செய்து, அவரைப் போலவே இயந்திர உருவத்தை உருவாக்கினாங்க.

என்னதான் ரோபோவுக்காக ‘கிராபிக்ஸ்’ செய்தாலும், அது ரெண்டு மூணு நிமிஷத்தில போரடிச்சுடும். அதுக்காகத்தான் இந்த எந்திர உருவத்தை உருவாக்கி அதுக்கான அசைவுகளை துல்லியமா எடுத்தோம். 32 சீன்கள்ல வரும் இந்த அசத்தலான ரோபோ. நிஜ ரஜினிக்குப் பக்கத்தில ரோபோ ரஜினியும் இருந்தா அவர் கலரையும், மெட்டாலிக் ரோபோ கலரையும் மேட்ச் பண்ற லைட்டிங் எனக்கு சவாலா இருந்தது. அதேபோல ஹீரோவும் ரஜினி, வில்லனும் ரஜினின்னு வர்ற சீன்களுக்காக... எடுத்த காட்சிகளையே மீண்டும் மாறாம எடுத்ததும் கடினமான சவாலா இருந்தது. இதுக்கான கேமரா ரிப்போர்ட்டை நான் தயாரிச்சு வச்சுக்கிட்டேன். அது மட்டும் ஆயிரத்து 200 பக்கங்களுக்கு இருந்தது. அதேபோல கிளைமாக்ஸ்ல வர்ற ‘அரிமா’ பாடலுக்காக உருவாக்கிய சாஃப்ட்வேர் பார்க் செட்டும் பிரமிக்க வைக்கும். அந்தக்காட்சிகளை 2008ல எடுத்தோம். ஆனா படம் ரிலீசாக 2010 ஆயிடும்ங்கிறதால மேக்கப்லேர்ந்து எல்லாத்தையுமே ஃப்யூச்சரிஸ்டிக்கா செஞ்சோம். அது இப்ப பாராட்டப்படும்போது பெருமையா இருக்கு.
 
கதை நல்லா எழுதற டைரக்டர்கள் ஷூட்டிங் ப்ளானிங்ல சொதப்பிடுவாங்க. ஆனா ஷங்கரோட டெடிகேஷனும், ப்ளானிங்கும் அதிசயிக்க வச்சது. எங்கும் குழப்பமில்லாம இருந்த அவர்கூட வேலை பார்த்தது எனக்கு நல்ல அனுபவம். ‘என் வேலையை நீங்க பாதியா குறைச்சிட்டீங்க...’ன்னு என் சுறுசுறுப்பை அவர் பாராட்டியதும், ‘ரத்னவேலு இல்லைன்னா இந்தப்படத்தை எடுக்க நாலு வருஷத்துக்கு மேல ஆகியிருக்கும்...’னு ரஜினி சார் பாராட்டியதும் எனக்கான பெருமைகள். ஐஸ்வர்யா பத்தி ஒரே ஒரு விஷயம்... பத்து வருஷத்துக்கு முந்தியே ‘ஜீன்ஸ்’ல உலக அழகியா பார்த்து வியந்தோம். இன்னைக்குப் பார்க்கும்போதும் அவரை மிஞ்சிய அழகி என் கேமராவுக்குள்ள வரலைங்கிறது தெளிவா தெரியுது..!’’

- வேணுஜி