வந்தாச்சுகாவ்யா தமிழ்

மண்சார்ந்த நூல்களை வெளியிட்டு பதிப்புலகில் தனக்கென ஓர் இடம் பிடித்த காவ்யா பதிப்பகத்திலிருந்து வெளிவரும் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான காலாண்டிதழ். இதழின் கட்டமைப்பு மட்டுமின்றி, உள்ளடக்கமும் கனமாகவே இருக்கிறது. கண்ணகி வழிபாடு பற்றிய முனைவர் சண்முகசுந்தரத்தின் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடத் தகுந்தது. கூத்துப்பட்டறை முத்துச்சாமியின் ‘பிரஹன்னளை’ நாடகத்தின் முழுவடிவமும் 30 பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. முனைவர் ரெஜித்குமார் தொகுத்துள்ள பூப்படைந்த பெண்களுக்கான நாட்டுப்புற மருத்துவங்கள் கட்டுரையும் ரசனை. கருப்புச்சாமி வழிபாடு, தெருக்கூத்து, கைச்சிலம்பாட்டம் என கலை சார்ந்த ஆய்வுகள், மண் மணக்கும் பதிவுகள் நிறைந்துள்ள இந்த இதழில் ஆழமான திரைப்பட விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன.

(ஆசிரியர்: பேராசிரியர் சண்முகசுந்தரம், தனி இதழ்: ரூ.100/-, ஆண்டு சந்தா: ரூ.400/-, முகவரி: காவ்யா, 16, 2வது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600024. பேச: 9840480232.)

புத்தகம்
எம்.ஜி.ஆரைப் பற்றி பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், செய்திகள், துணுக்குகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் மேஜர்தாசன். அட்டையில் இடம்பெற்றுள்ள மணியம் செல்வத்தின் ஓவியம் எம்.ஜி.ஆரை நேராக தரிசிக்கும் உணர்வைத் தருகிறது. அண்ணா தொடங்கி, எம்.ஜிஆரின் தீவிர ரசிகரான முத்து வரை பலர் எம்.ஜி.ஆருடனான தங்கள் அனுபவங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதுவரை அறியாத செய்திகள், அவர் நடித்த படங்களின் பட்டியல், நடித்து வெளிவராத படங்கள், அவரின் மேடைப்பேச்சுகள், அபூர்வமான புகைப்படங்கள் என எம்.ஜி.ஆரைப் பற்றிய முக்கிய ஆவணமாக கருதத்தக்க நூல்.
(பக்கங்கள்: 280, விலை: ரூ.250/-, வெளியீடு: சங்கம் பதிப்பகம், 43, மலையபெருமாள் தெரு, சென்னை-1, பேச: 044 25393692.)

வலை
பழங்காலக் கோயில்களை தேடித் தேடி விசிட் அடிக்கும் ஆர்வலர் நீங்கள் என்றால், உங்களை ‘வாவ்’ சொல்ல வைக்கும் வலைத்தளம் www.shivatemples.com. பழங்கால சைவத் தலங்களில் பாடல் பெற்ற தலங்கள் என்ற பெருமைக்குரியவை மொத்தம் 274. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ளவை 264. இந்த 264 கோயில்களைப் பற்றிய முழுவிவரங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது இந்தத் தளம். ஒரு குறிப்பிட்ட கோயிலைக் கிளிக் செய்தால், அங்குள்ள இறைவன், இறைவி பெயர், எப்படிப் போவது, கோயில் முகவரி என்ன என எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது.

தொண்டை நாடு, நடுநாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு, காவிரி வடகரை நாடு, காவிரி தென்கரை நாடு என்று தமிழ்நாட்டை பழைய முறைப்படி பிரித்து, கோயில்களையும் அதற்கேற்ப பட்டியலிட்டிருப்பது கூடுதல் சிறப்பு!

டிவிடி
கணக்கென்றாலே கொட்டாவி விடும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக வெளிவந்துள்ள டிவிடி. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடம் நடத்துகிறார்கள். காஸ்தீட்டா, சைன் தீட்டா என்றெல்லாம் தொடங்கி மிரட்டாமல், பத்தாம் வகுப்பு கணிதத்துக்கான அடிப்படைகளிலிருந்து ஆரம்பித்து, மெல்ல மெல்ல பாடத்துக்கு அழைத்துச் செல்வது சிறப்பு. நிதானமான மொழி, தெளிவான உச்சரிப்பு... ஆசிரியரே நேரடியாகப் பாடம் நடத்தும் உணர்வு. மூன்று டிவிடிகளில் மொத்தம் 19 மணி நேரப் பாடம். பொதுவாக கணக்கில் ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக்கி அதற்கும் விடை தருகிறா£¢கள். பத்தாம் வகுப்பு தேர்வில் கணக்கில் சென்டம் அடிக்க உதவும்.

(விலை: ரூ.400, வெளியீடு: ஸ்டார் பப்ளிகேஷன்ஸ், 87, விவேகானந்தா காலனி, நூறடி ரோடு, வடபழனி, சென்னை-26,
பேச: 9841633386.)