பொறுப்பு

மனைவியை இழந்து தனிமரமாக வாழும் தொழிலதிபர் சுகவனத்துக்கு ஒரே மகள்தான். பல தொழிற்சாலைகளுக்கு அவர் சொந்தக்காரர்... கோடிக்கணக்கில் வருமானம்... வரப்போகும் மருமகன்தான் அத்தனையையும் நிர்வகிக்க வேண்டும்.
அதனால்தான் ஒரு பொறுப்புள்ள ஏழைப் பையனாக பார்க்கச் சொல்லியிருந்தார் தரகரிடம். அடுத்த நாளே நல்ல வரனோடு வந்தார் தரகர்.
‘‘சார், பையனுக்கு வேலை கிடைச்சு 4 மாசமாச்சு. அவன் திறமையைப் பார்த்து ஆரம்ப சம்பளமே 40 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க!’’ ‘‘கூடப்பிறந்தவங்க..?’’
‘‘ரெண்டு தங்கச்சிங்கதான். பாவம், சின்ன வயசுலயே அப்பாவை இழந்த குடும்பம். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வந்தீங்கன்னா, உங்களுக்கே புரியும்!’’ சொன்னது போலவே, மறுநாள் அந்த வீட்டுக்குச் சென்று திரும்பினார் சுகவனம். சம்மதம் பெற தரகரும் வந்தார்.
‘‘வேணாம் தரகரே... வேற வரன் பாருங்க!’’ என்றார் சுகவனம். ‘‘என்ன சார்... பையனுக்கு படிப்பு, அழகு, திறமை எல்லாம் இருக்கு?’’
‘‘எல்லாம் சரி தரகரே! வயசுக்கு வந்த ரெண்டு பெண் பிள்ளைகளும் கவரிங் போட்டுக்கிட்டு நிக்கிறாங்க. அந்த அம்மா இன்னும் கிழிஞ்ச சேலைதான் கட்டியிருக்காங்க. ஆனா, இவன் மட்டும் வேலைக்கு சேர்ந்த 4 மாசத்துலயே கழுத்துல செயின், கையில பிரேஸ்லெட், மோதிரம்னு ராஜா மாதிரி இருக்கான்... பொறுப்பில்லாதவன். இவனை நம்பி நான் சொத்துக்களைக் கொடுத்தா, அப்புறம் எனக்கே பாதுகாப்பு இருக்காது!’’ என்றார் சுகவனம்.
|