கிருஷ்ணவேணி பஞ்சாலை : சினிமா விமர்சனம்

சினிமாவுக்குள் அதிகம் வராத பஞ்சாலைத் தொழிலின் ஏற்ற இறக்கங்களை வாழ்வியலாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன். ஐம்பதுகளிலிருந்து எண்பது வரை கொடிகட்டிப் பறந்த ஆலைத்தொழில், பக்குவப்படாத முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் அணுகுமுறையால் எப்படி இறங்குமுகத்தை அடைந்தது என்பதையும், எப்போதுமிருக்கும் சாதீயக் கொடுமைகள் அப்போதும் உச்சத்தில் இருந்ததையும் இரு இழைகளாக்கி, ஒரு காதல் கதையையும் தொட்டுச் சொல்லியிருக்கிறார் அவர்.

ஐம்பதுகளில் கறுப்பு வெள்ளையில் ஆரம்பிக்கும் படத்தில், நம்பியவர்களே கேள்வி கேட்கும் நிலையில் வெளிநாட்டில் தங்கிவிட்ட வாரிசை வரவழைத்து தன் பஞ்சாலையை நிர்வகிக்க நிர்ப்பந்திக்கும் பொருட்டு கிருஷ்ணவேணி பஞ்சாலையின் அதிபர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

பெண்களுக்கு கவர்மென்ட் மாப்பிள்ளைகளை நாடும் காலகட்டத்தில், கொங்கு மண்டலத்தில் மட்டும், ‘‘நமக்கு கவர்மென்ட் மாப்பிள்ளையெல்லாம் வேண்டாம். ஊர் ஊரா மாத்தலாகிப் போய்க்கிட்டேயிருப்பாங்க. ஏதாவது ஆலையில வேலை செய்யற பையனா இருந்தா பாருங்க...’’ என்று பெண்ணைப் பெற்றவர் தரகரிடம் வேண்டுவது ரசனையான காட்சி.

ஆலைத் தொழிலே ஹீரோவாகிப் போக, படத்துக்குள் ஹீரோவாகியிருக்கும் ஹேமசந்திரனுக்கு காதலையும், காதலைச் சேர்த்துவைக்கும் வேலைகளையும் தாண்டி வேறு எதுவுமில்லை. கிடைத்ததை நிறைவாகச் செய்து நல்ல பெயரெடுத்துக்கொள்கிறார். ஆலை முதலாளியாக வரும் ராஜீவ்கிருஷ்ணா அற்புதத் தேர்வு. இளமையிலும், முதுமையிலும் இயல்பாக நடித்து மனதில் பதிகிறார் அவர்.
அழகிய முகம் கொண்ட நந்தனா சில கோணங்களில் காலஞ்சென்ற நடிகை சுஜாதாவை நினைவுபடுத்துகிறார். காதல் பார்வையிலும், அக்கா இறந்ததன் பின்னணியிலிருக்கும் உண்மையை ஹேமசந்திரனிடம் கூறி உடையும்போதும் மிளிர்கிறார்.


நந்தனாவின் அம்மாவாக வரும் ரேணுகாவுக்கு அழுத்தமான பாத்திரம். பால் ஊற்றுபவரிடம் ‘‘நீங்க என்ன ஆளு..?’’ என்று கேட்பது யதார்த்தமாக இருந்தாலும், அவரது ரத்தத்தில் உறைந்திருக்கும் சாதி வெறி, வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கும் மகளுக்கே விஷம் வைப்பது வரை நீளும்போது பகீரென்கிறது. அந்த சாதீய நெருப்புக்கு நெய் வார்க்கும் பாத்திரத்தில் தென்னவனும் பொருந்தியிருக்கிறார். பார்க்கிற பெண்களிடமெல்லாம் சாக்லெட் கொடுத்து வசியம் செய்ய நினைக்கும் சண்முகராஜனும், எம்.ஜி.ஆர். கெட்டப்பில் மைனராக அலையும் பாலா சிங்கும் சிரிக்க, ரசிக்க வைக்கிறார்கள்.

திடீர் தொழிற்சங்கத் தலைவராகி வேலைநிறுத்தத்தை அறிவிக்கும் வேடத்துக்கு அஜயன்பாலா பொருந்துகிறார். கடைசியில் பிழைப்புக்காக அவர் சோதிடம் பார்க்குமிடத்தில் தியேட்டரே ரசித்துச் சிரிக்கிறது. கேன்டீன் முதலாளி வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ரசிக்க வைக்கிறார்.

கால ஓட்டத்தைக் காட்சிகளாக்க தினசரியில் என்.எஸ்.கே மரணம், வானொலியில் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட செய்தி, தி.மு.க தேர்தல் விளம்பரத்தில் வேட்பாளராக சாதிக் பாட்சாவின் பெயர் என்று பின்னணியில் வைத்து ரசிக்கச் செய்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். இருந்தும் மெதுவே நகரும் காட்சிகள் செய்திப் படம் போல் உணர வைக்கின்றன. 26 வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பத்து வயதுக்கு மிகாதவர்களாக இருப்பது நெருடல்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் வைரமுத்துவின் ‘ஆலைக்காரி...’ பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தாமரையின் ‘உன் கண்களும்’ இதம் தருகிறது. அதிசயராஜ், சுரேஷ் பார்கவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களைக் கவர்கின்றன.
- குங்குமம்
விமர்சனக்குழு