விஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள்!





புத்தகத்தின் பக்கங்களில் மயிலிறகை வைத்து, அது குட்டி போட்டதாகக் குதூகலித்த பால்யத்தைக் கடந்திருப்போம். இன்று பரிணாம வளர்ச்சியில் புத்தகமும் சுருங்கி விட்டது; குழந்தைகளுக்கு மயிலிறகும் மறந்து விட்டது. அடுத்த தலைமுறை, மயிலிறகை மட்டுமல்ல... மயிலையே புத்தகத்தில் படமாகத்தான் பார்க்க முடியும் போல! ‘தேசியப் பறவையான மயில்களை வேட்டையாடியும் விஷம் வைத்தும் கொல்கிறார்கள். அவற்றைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது’ என்றொரு சுளீர் குற்றச்சாட்டை வீசியிருக்கிறது மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை. தமிழ்க் கடவுளின் வாகனமாகக் கருதப்படும் மயில்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா?

‘‘தமிழ்நாட்டுல எவ்வளவு மயில்கள் இருக்குன்னு தோராயமாக்கூட சொல்ல முடியாத நிலையிலதான் இருக்கோம். தமிழக வனத்துறைகிட்ட அப்படியொரு புள்ளி விவரமே இல்லை. இங்க மயில்கள் குறித்த மாநிலம் தழுவிய கணக்கெடுப்பு நடந்த ஞாபகமே இல்ல. எவ்வளவு இருக்குங்கிற விவரம் தெரியறப்பதானே, குறைஞ்சா காப்பாத்தணும்னு தோணும்? தேசியப் பறவையான மயிலுக்கு தமிழ்நாட்டுல ஒரு சரணாலயம்கூட இல்லைங்கிறது வருத்தப்பட வேண்டிய விஷயம். விராலிமலையில மயில்கள் கூட்டம் கூட்டமா இருக்குன்னு, அங்க சரணாலயம் அமைக்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கோம். அரசு காது கொடுக்கற மாதிரியே தெரியல. அதுங்க வாழற ஏரியாவுல பாதுகாப்பு கொடுத்தாலே போதும். அதைக்கூட செய்ய முன்வரல வனத்துறை. அதனாலதான் மக்கள் வாழற பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் வந்து உயிரை பலி கொடுக்கின்றன அந்த ஜீவன்கள்’’ என்கிறார் பறவைகள் நல ஆர்வலரும், ‘நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் நிறுவனருமான
திருநாரணன்.

‘மயில்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே வருகிறது’ என்கிற ஆய்வறிக்கையைத் தந்திருப்பது மத்திய வனத்துறையின் கீழ் இயங்கும் ‘வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’. நாடு தழுவிய கணக்கெடுப்பு நிகழ்த்தி அதன்படி இப்படிச் சொல்லியிருக்கிறது டேராடூனில் இருக்கும் இந்த அமைப்பு. ‘வேட்டையும் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும்தான் மயில்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம்’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘தமிழ்நாட்டுல கணக்கெடுப்பு நடக்கறப்ப, அதுங்களோட வாழிடங்கள், எண்ணிக்கை பத்தின தகவலோட, அதுங்க குறைஞ்சிட்டு வர்ற தகவலும் சேர்ந்தே கிடைச்சது. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகள்ல மயில்கள் கொத்துக் கொத்தா கொல்லப்படுகிற சம்பவங்கள் இப்பவும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு’’ என்கிறார் ஆய்வில் பங்குகொண்ட இன்ஸ்டிடியூட்டின் சீனியர் சயின்டிஸ்ட் சத்யகுமார்.

தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை கன்சர்வேட்டர் ராஜா முத்தையா இதற்கு என்ன சொல்கிறார்?
‘‘1972-ம் ஆண்டு வைல்டு லைஃப் சட்டம் வந்தபிறகு வேட்டையெல்லாம் சுத்தமா இல்லங்க. அதுலயும் மயில் தேசியப் பறவைங்கிறதால, அதுக்கு கூடுதல் முக்கியத்துவமே தந்திருக்காங்க. ஒருகாலத்துல மயிலைக் கொன்னு நெய் எடுத்திருக்காங்க. இப்ப அதைத் துன்புறுத்தினாலே குற்றம். எங்காச்சும் ஒண்ணு ரெண்டு நரிக்குறவங்க வேணும்னா மயிலைச் சுடலாம். அதைக்கூட கண்காணிச்சுட்டுத்தான் இருக்கோம். விவசாயிகள் விஷம் வச்சுக் கொல்றதை செய்தித்தாள்கள் மூலமாத்தான் நாங்களே தெரிஞ்சுக்க முடியுது. யார் பண்றதுன்னு நிரூபிக்க முடியாத சம்பவங்கள் அவை. விவசாயத்துக்கு தொந்தரவாயிடுதுன்னு இப்படிப் பண்றாங்கன்னு கேள்விப்பட்டோம். மத்தபடி ‘முருகனோட வாகனம்’ங்கிற சென்டிமென்ட் மக்கள் மத்தியில இன்னிக்கும் இருக்கு. மயில்களோட இருப்பைப் பொறுத்தவரை, மாவட்ட அளவுல புள்ளிவிபரம் இருக்கு. நாலு வருஷத்துக்கு ஒருமுறை எடுக்கப்படும் அந்தக் கணக்குப்படி பார்த்தா இன்னிக்கு தேதியில தமிழகத்துல சுமாரா 35 ஆயிரம் மயில்கள் இருக்கலாம். 


பறவைகள் தொடர்ந்து தங்கற இடத்துலதான் சரணாலயம் அமைக்க முடியும். மயில்களைப் பொறுத்தவரை தொடர்ந்து ஒரே இடத்துல தங்கறது கிடையாது. அதனாலதான் விராலிமலையில சரணாலயம் அமைக்க சாத்தியப்படலை. தேசியப் பறவைங்கிறப்ப மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசுக்குத்தான் அதிக அக்கறை இருக்கணும். மாநில அரசுகளை ஏன் குற்றம் சொல்றாங்கன்னு தெரியலை’’ என்கிறார் முத்தையா.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக தனிப்பொறுப்பு வகிப்பது தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். அவரிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘‘நாடு முழுக்க மயில்களோட இருப்பு விவரத்தைப் பதிவு பண்ணியிருக்கு அறிக்கை. இதுல மாநிலங்கள் பண்ண வேண்டிய சில நடவடிக்கைகளையும் சொல்லியிருக்கலாம். வைல்ட் லைஃப் இன்ஸ்டி டிட்யூட் அறிக்கை மேல மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ, அது உடனடியா எடுக்கப்படும்’’ என்றார். தேசிய விலங்கான புலிகளை வேட்டையாடிக் கொன்றொழித்தபிறகு ‘புராஜெக்ட் டைகர்’ ஆரம்பித்து, இருக்கும் சிலநூறு புலிகளைக் காக்கப் போராடுகிறோம். தேசியப் பறவை மயில் விஷயத்திலாவது விழித்துக் கொள்வோமா?

வேண்டும்
சரணாலயம்!
சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் கரும்பு தோட்டங்களுக்குள்ளும், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் கண்மாய் கரையை ஒட்டிய கருவேலங்காடுகளிலும் வசிக்கின்றன மயில்கள். விராலிமலை போலவே தூத்துக்குடி மாவட்டத்தின் காட்டுநாயக்கன்பட்டி, நெல்லை மாவட்டத்தின் தாழையூத்து பகுதிகளிலும் மயில்கள் சரணாலயம் அமைக்க வலியுறுத்தி வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.

- அய்யனார் ராஜன்
படம்: பாஸ்கர்