நிழல்கள் நடந்த பாதைமருத்துவக் கொலைகள்சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையில் சிலர் ஒரு பயிற்சி மருத்துவரைத் தாக்கியதை ஒட்டி, பயிற்சி டாக்டர்கள் தமிழ்நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தார்கள். தமிழகம் முழுக்க பல ஆயிரம் நோயாளிகள் ஐந்து நாட்கள் தவிக்க விடப்பட்டார்கள். கடைசியில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவ மனைகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களில் ஒருவர் மட்டுமே நோயாளியுடன் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப் போகிறார்களாம்.

கண்காணிப்பு கேமராக்கள் ஒழுங்காக வேலை செய்தால்... அலட்சியம், அவமரியாதை, லஞ்சம் போன்ற காரணங்களுக்காக எத்தனை அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜெயிலுக்குப் போகவேண்டியிருக்குமென்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. டாக்டர்கள் மீது வளர்ந்து வரும் அதிருப்தியைக் கவனித்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் மருத்துவமனைகளில் மெட்டல் டிடெக்டர் பொருத்தவும், மருத்துவர்கள் கோட்டுக்குப் பதில் குண்டு துளைக்காத ஆடைகளை அணியவும் அவசியம் வரலாம். கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழகத்தில்தான் மருத்துவமனையிலேயே மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல வருடங்களுக்கு முன்பு லக்ஷ்மிநாராயணன் என்ற ஒரு டாக்டர் இருந்தார். ‘காந்தி டாக்டர்’ என்றுதான் மக்கள் அவரை அழைப்பார்கள். எங்கள் கிராமத்துக்கு மட்டுமல்ல, சுற்றியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் அவர்தான் கடவுள். எவ்வளவோ வருடங்களாக ஃபீஸ் இரண்டு ரூபாய்தான். ஏழைகளுக்கு அதுவும் கிடையாது. ஊசி போட மாட்டார். கண்டபடி டெஸ்ட்டுகளுக்கு அனுப்ப மாட்டார். அவ்வளவு மலிவான மருந்துகளை ஒரு மருத்துவர் எழுத முடியுமா என்று அந்தக் காலத்திலேயே மக்களிடம் பெரு வியப்பு இருந்தது. பலருக்கும் தன் கையில் இருக்கும் சாம்பிள் மருந்துகளையே இலவசமாகக் கொடுத்து விடுவார். 90க்கும் மேற்பட்ட வயது வாழ்ந்து பல்லாயிரம் மக்களைக் குணப்படுத்தினார். புனிதரின் கைபட்டு சொஸ்தமாகும் அற்புதம் போல மக்கள் அவரைத் தேடி அலை அலையாகச் சென்றனர். அவர் இறந்தபோது கதறி அழுதனர். அவருக்குச் சிலை வைத்தனர். ஒரு மருத்துவருக்கு மக்களே சிலை வைத்த சம்பவம் எத்தனை இடங்களில் நடந்திருக்கிறது?


என் சொந்த வாழ்க்கையில் இரண்டு மருத்துவக் கொலைகளை நான் பார்த்தேன். என் அம்மா கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தவறான முறையில் ரத்தம் செலுத்தப்பட்டதால், மூளையில் ரத்தம் உறைந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இரண்டே நாளில் இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 44. என் அம்மா இன்று கனவில் வரும்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஒரு காட்சிதான் வருகிறது. இது வாழ்நாள் முழுக்க நான் கடக்க முடியாத கொடுங்கனவு.

என் பாட்டி 80 வயதில் குளியலறையில் தவறி விழுந்துவிட்டார். இடுப்பில் அடிபட்டதற்காக மதுரையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் சேர்த்தோம். மருத்துவமனையில் சேர்த்த பிறகு தவறான சிகிச்சையினால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் இறந்துபோனார். இரண்டரை லட்சம் ரூபாய் பில் கட்டினோம். குளியலறையில் ஒருவர் தவறி விழுவது இவ்வளவு பெரிய ஆபத்து என்று யாராவது நம்ப முடியுமா?

இதைப் படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது ஒரு கதை இருக்கும். ‘மருந்து மாஃபியா’ இந்தியாவை வேட்டையாடி வருகிறது. இது காலனி ஆட்சியைவிட பயங்கரமானது. டாக்டர்கள், மருந்துக் கம்பெனிகள், மருத்துவப் பரிசோதனை மையங்களின் மோசடிக் கூட்டணியில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தையும் உயிரையும் பறிகொடுக்கின்றனர். பல அறுவைசிகிச்சைகள் பணத்திற்காகச் செய்யப்படுபவை என்று தெரிந்தும் நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். பல மருந்துகள் அனாவசியமானவை, ஆபத்தானவை என்று தெரிந்தேதான் அவற்றை உட்கொள்கிறோம். காரணம், மரண பயம். இந்த மரண பயத்தைத்தான் மருத்துவர்கள் விற்கிறார்கள். நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவப் பரிசோதனை மையங்கள், மருந்துக் கம்பெனிகள் எல்லாமே அதற்காக டாக்டர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர்.

5 ரூபாய் விலையுள்ள ஒரு மருந்தை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? உலகில் எந்தப் பொருளின்மீதும் இப்படி ஒரு மோசடி கிடையாது. மருந்துக் கம்பெனிகளின் பிராண்ட் பெயர் இல்லாமல், அந்த மருந்தின் மூல மருத்துவப் பெயரில் 20ல் ஒரு பங்கு விலைக்கு அரசாங்கம் நினைத்தால் கொடுக்க முடியும். இதை generic medicine என்கிறார்கள். 


பல மருத்துவர்கள் ஒரு மக்கள் விரோத, தேச விரோத யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்களை ஒரு சாமான்ய மனிதன் ஏன் கை நீட்டி அடிக்கிறான் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அடி வாங்கிய பஸ் கண்டக்டரைப் போல ஸ்டிரைக் செய்து பிரச்னையை சமாளிக்க முடியாது.

பார்க்க ஒரு நல்ல படம்
பொதுவாக எனது நண்பர்கள் யாரும் படம் எடுத்தால், எனக்கும் அவருக்குமான உறவு ப்ரிவியூ ஷோவுடன் முடிந்துவிடும். கனத்த மௌனத்துடன் பிரிந்து விடுவோம். ஆனால், எனது நண்பர் தனபால் பத்மநாபன் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆத்மார்த்தமாக அவரது கைகளைப் பற்றிக் குலுக்கினேன். ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’, மில் தொழிலாளர் பிரச்னையின் பின்புலத்தில் சொல்லப்பட்ட ஒரு அழகான காதல் கதை.

முதலாளி - தொழிலாளி பிரச்னையை ஒரு குரூரமான எதிர் நிலையாகக் காட்டும் வழக்கமான படங்களுக்குப் பதில் அதற்குள்ளும் இருக்கும் சில மனித உறவுகளை தனபால் தொட முயல்கிறார். நவீன கால மாற்றத்தால் பழைய மில்கள் அடையும் வீழ்ச்சி, நமது தொழிற்சங்க இயக்கங்களின் பலவீனங்கள், ஆலைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை என பல தளங்களில் படம் சஞ்சரிக்கிறது. நமது ஜாதிய அமைப்பின் குரூர முகத்தை இந்தப் படம் அளவிற்குத் தமிழில் இன்னொரு படம் சொன்னதில்லை. ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் செய்த மகளை, சொந்தத் தாயே விஷம் வைத்துக் கொல்லும்போது நமது ரத்தம் சில்லிடுகிறது. கதை அமைப்பு, காட்சிப்படுத்தல்களில் உள்ள பல குறைகளைத் தாண்டி ஒரு அசலான இயக்குனரின் வருகையை இந்தப் படம் அறிவிக்கிறது. நந்தனா மிகச் சிறப்பான ஒரு நடிகையாக வருவார். அப்போது அவர், ‘தனது முதல் படத்தின் முதல் ஷோவை தமிழின் முக்கியமான கவிஞருடன் சேர்ந்து பார்த்தோம்’ என்பதை நினைவில் வைத்திருப்பாரா... தெரியாது!

பொறுக்கிகளின் போராட்டமா அது?


தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள கேலிச் சித்திரம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தித் திணிப்பை எதிர்க்கும் மாணவர்கள், கார்ட்டூனில் பொறுக்கிகள் போல சித்தரிக்கப்படுகின்றனர். ஆங்கிலம் நீடிக்கும் என்ற உறுதிமொழியையும் மீறி வன்முறையில் ஈடுபடுகின்றனர். ராஜாஜியும் எம்.பக்தவத்சலமும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்களாம். ‘இவர்கள் இந்தியை மட்டுமல்ல, ஆங்கிலமும் அறிய மாட்டார்கள்’ என தமிழக மாணவர்கள் தற்குறிகள் என விளக்கும் கமென்ட் வேறு.

1938ல் ராஜாஜியின் அரசுதான் முதலில் இந்தித் திணிப்பைக் கடுமையாகக் கொண்டுவந்தது. பின்னர் அரசியல் காரணங்களுக்காக ராஜாஜி இந்தித் திணிப்பை ஆதரிக்க மறுத் தார். 1965ல் எம்.பக்தவத்சலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க விரும்பும் வரலாறு வேறு! தமிழக வரலாற்றிலேயே மாணவர்கள் பங்கேற்ற மிகப்பெரிய கிளர்ச்சி இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். அதை மாணவர்களிடமே கொச்சைப்படுத்துவது, அவர்களை அரசியலற்றவர்களாக்கும் ஒரு தந்திரம் என்பதைத் தவிர வேறில்லை.
(இன்னும் நடக்கலாம்...)

என்ன வருத்தம் உனக்கு என்று எனக்குத் தெரியவில்லை
யாருக்கும் தெரியாமல் இந்த ரயிலடியில்
கண்களைத் துடைத்துக்கொள்கிறாய்
உன் உதடுகள் மிகக் கஷ்டமாகத் துடிக்கின்றன
தலைசீவக்கூட உனக்கு நாட்டமில்லாமல் போய்விட்டது
உடை மாற்றவும்
பொட்டு இட்டுக்கொள்வதற்கும்கூட
என்ன ஆயிற்று?
நான் கவனிப்பதைக் கண்டு மிரளாதே
நான் உன் கஷ்டங்களின் மறுபக்கம்
கண்ணீரின் நீர்மை
புத்தி மோசத்தால்
ஏதேதோ பேசி
ஏதேதோ படித்து
ஏதேதோ எழுதிவிட்டேன்
கரகோஷம் கேட்டு விரியும் சிறகுகளைக்
கோதிக்கொண்டிருந்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடு
இனி உனக்காக உன்னைப் புரிந்துகொள்ள
எழுதுகிறேன்

- சுந்தர ராமசாமி

இந்த வார புத்தகம்
இந்திய இலக்கியம் என்பது பெரும் காட்டாறு. எத்தனையோ சிறு சிறு கிளைநதிகள் இணைந்து அந்தக் காட்டாறு உருவாகிறது. பல சமயங்களில் பிராந்திய மொழிகளின் முக்கியமான படைப்புகள் இந்தியாவின் பிறபகுதியினருக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. இந்தச் சூழலில், அதிகம் அறியப்படாத பழங்குடி இனமொன்றின் நவீன இலக்கிய முயற்சிகள் தமிழில் வந்திருக்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் போடோ பழங்குடியினர் எழுதிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழங்குடிகளின் காதல், அன்பு, நம்பிக்கைகள், பயங்கள் இந்தக் கதைகளில் பதிவாகின்றன. நாகரிக உலகின் அழிவிலிருந்து இலக்கியத்தின் வழியே தங்கள் நினைவுகளைப் பழங்குடிகள் பாதுகாத்துக்கொள்வதன் ஒரு அடையாளமே இந்தக் கதைகள். இராம.குருநாதன் சரளமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார். (விலை ரூ.70/- வெளியீடு: சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018.)
போடோ சிறுகதைகள்
மூலம்: ஜெய்காந்த சர்மா
தமிழில்: இராம.குருநாதன்

ஃபேஸ்புக்
காருக்குள்ள இருக்கறவன் யார்னு தெரியணும்ங்கிறதுக்காக கறுப்பு ஸ்டிக்கர் எல்லாத்தையும் கிழிக்கிறாங்க... ஓகே! பைக்ல போறவங்க முகத்தையெல்லாம் மறைச்சு ஹெல்மெட் போட்டுக்கிட்டு போறாங்க... பின்னாடி உட்கார்ந்திருக்க பொண்ணுங்களும் துப்பட்டாவால முகத்தை மூடிக்கிட்டு யார்கிட்டயோ செல்போன்ல பேசிக்கிட்டே போகுதுங்க... இவங்கல்லாம் ரொம்ப நல்லவங்களா?