சித்திரை, சுவாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?





சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், 3 மற்றும் 4ம் பாதங்கள் துலாம் ராசியிலும் இடம்பெறுகின்றன. கன்னி ராசியிலேயே சித்திரை 1, 2 பாதங்களில் பிறந்தவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கொஞ்சம் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். அறிவு ஜீவியாக இருந்தாலும், எளிதில் அங்கீகாரம் கிடைக்காமல் திணறுவார்கள்.

சித்திரையின் முதல் பாதத்தை சூரியன் ஆள்கிறார். எதிர்காலம் பற்றிய கணிப்புகளும், கவலைகளும் ஏறக்குறைய 14 வயதிலிருந்தே தொடங்கி விடும். அதற்கு முன்பு பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வார்கள். ஆறு வயது வரையிலான செவ்வாய் தசையின்போது சாதாரணமாகத்தான் இருக்கும். 7 வயதிலிருந்து 24 வரை ராகு தசை நடக்கும்போது பெற்றோருக்கு பண நெருக்கடி ஏற்படும். அதனால் தந்தை அங்கும் இங்கும் என்று பல்வேறு தொழில்கள் மாறும்போதெல்லாம், கல்வியும் அலைக்கழிப்பாகும். பிள்ளைகளின் 13 வயதில் தாய் - தந்தை சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்புறம் பிள்ளைகள் வீட்டில் ஒட்டாமல் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வார்கள். இந்த வயதுகளில் ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ தொடங்கினால் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்ப்பது நல்லது. 24 வயதுக்குள் நல்லது, கெட்டதுகளை புரிந்துகொள்ளும் பக்குவம் பெறுவார்கள். பகை வீட்டில் ராகு இருந்தால், ராகுவை குரு பார்த்தால், கெடுபலன்கள் குறையும். 25 முதல் 40 வயது வரை குரு தசை. நட்சத்திர நாயகனான செவ்வாய்க்கு குரு நட்பாக இருப்பதால் முன்னேறுவார்கள். பள்ளியைவிட கல்லூரி வாழ்வு சிறப்பாக இருக்கும். கல்லூரியில் எந்தப் பாடத்தை எடுக்கிறார்களோ, அதில் டாக்டரேட் செய்து முடிப்பார்கள். பொலிட்டிகல் சயின்ஸ், எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., அஸ்ட்ரானமி போன்றவை நல்ல எதிர்காலம் தரும். மருத்துவத்தில் நரம்பு, மயக்க நிபுணர் படிப்புகளில் சிறப்பான எதிர்காலம் உண்டு. 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை புதன் ஆட்சி செய்கிறார். இரட்டை புதனின் சக்தி சேர்வதால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ‘‘இவ்ளோ சின்ன வயசுல இப்படியொரு அறிவா’’ என்று வியப்பார்கள். நாலு வயது வரையிலான செவ்வாய் தசையின்போது இ.என்.டி. டாக்டரிடம் போக வேண்டியிருக்கும். வீசிங், காதில் சீழ் வடிதல் இருக்கும். 5 வயதிலிருந்து 22 வரை ராகு தசை நடைபெறுவதால் வகுப்பறையில் தனித்துவம் மிக்க மாணவராக சுடர்விடும் அறிவோடு விளங்குவார்கள். ஆசிரியரின் அறிவுரையும், ஊக்கமும் இருந்தால் அந்த சப்ஜெக்ட்டில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். எட்டாம் வகுப்பில் படிப்பு கொஞ்சம் தடைபடும். ஆனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். அக்கவுன்டன்சி, விஸ்காம், பேங்கிங் சம்பந்தமான படிப்புகள் நல்லது. மருத்துவத்தில் நரம்பு, வயிறு, கண் சம்பந்தமாக படித்தால் பெரிய அளவில் புகழ் பெறலாம். எலக்ட்ரானிக்ஸை விட எலக்ட்ரிகல் நல்லது. 23 வயதிலிருந்து 38 வரை குரு தசை நடைபெறும்போது வாழ்க்கை இன்னும் சிறப்பாகும். 

துலாம் ராசியில், சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களை சுக்கிரன் ஆள்கிறார். இரண்டரை வயது வரை செவ்வாய் தசை நடைபெறும். வயிற்றோட்டமும், செவ்வாயின் உஷ்ணத்தால் அடிக்கடி ஜுரமும் வந்து நீங்கும். 3 வயது முதல் 20 வரை ராகு தசை இருப்பதால் உயர்ந்த கல்வி நிறுவனத்தில் தந்தை சேர்த்து விடுவார். 8 வயதிலிருந்து 9 வரை தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராக படித்தவர்கள், பத்தாம் வகுப்பில் வெளுத்துக் கட்டுவார்கள். இதையடுத்து குரு தசை ஏறக்குறைய 21 வயதிலிருந்து 36 வரை நடைபெறும். குரு இவர்களுக்கு கெடுதல் செய்யக் கூடியவராக இருப்பதால், பளிச்சென்று வெற்றிகளும், முன்னேற்றமும் இருக்காது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், விஸ்காம், ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டெக்னாலஜி, சி.ஏ., எக்னாமிக்ஸ் போன்ற படிப்புகள் எளிதாக வெற்றி பெறச் செய்யும். மருத்துவத்தில் சர்க்கரை நோய் நிபுணராக வர வாய்ப்புள்ளது.  


நான்காம் பாதத்திற்கான பலன்களை பார்ப்போம். இவர்களின் நட்சத்திர அதிபதி செவ்வாய், ராசியாதிபதி சுக்கிரன், 4ம் பாதத்தின் அதிபதியும் செவ்வாய்தான். செவ்வாய் இரண்டு மடங்கு சக்தியோடு இருப்பார். ஏறக்குறைய ஒரு வயதுவரை செவ்வாய் தசை இருக்கும். 2 வயதிலிருந்து 19 வரை ராகு தசை இருக்கும். 4 வயதில் பாலாரிஷ்டம் என்று சொல்வது போல உடம்பு படுத்தும். பொதுவாக ராகு தசை கொஞ்சம் போராட்டமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் செல்வது நல்லது. தேர்வின்போது உடம்பு சரியில்லாமல் போவது, படித்த எதுவும் தேர்வில் வராது போவது என்று திணறுவார்கள். பள்ளிக்கு அருகிலேயே வீடு இருந்தால் இவர்களுக்கு நல்லது. 20 வயதிலிருந்து 35 வரை குரு தசை நடைபெறும். மூன்றாம் பாதத்து அன்பர்களை கொஞ்சம் ஏமாற்றிய குரு, இங்கு பலன்களை வாரி வழங்குவார். கல்லூரியில் கலக்குவார்கள். பொருளாதாரம், அக்கவுன்டன்சி போன்ற பட்டங்கள் நல்லது. மைக்ரோபயாலஜி, கெமிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவையும் சிறந்த எதிர்காலம் தரும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறக்க, காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாளை வணங்குங்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில், ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். எட்டு கைகள். வலப்புற நான்கு கரங்களும் சக்கரம், வாள், மலர், அம்பு என ஏந்தியிருக்க, இடப்புற நான்கு கரங்களும் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் என பற்றியிருக்கின்றன. அஷ்புஜப் பெருமாளை வணங்க புத்தியில் பிரகாசம் கூடும்.

துலாம் ராசியிலேயே அதிக ஒளிமிக்க இளமையான நட்சத்திரம் சுவாதி. இளம் வயதிலிருந்தே எதையும் சீக்கிரம் புரிந்து கொள்பவராகவும், கூர்மையாக ஆராய்ந்து கேள்விகளால் துளைத்தெடுப்பவராகவும் இருப்பார்கள்.


சுவாதி முதல் பாதத்தில் பிறந்தவர்களை, துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனும், நட்சத்திர ஆட்சியாளர் ராகுவும், முதல் பாதத்தின் அதிபதியான குருவும் சரிசமமாக வழிநடத்துவார்கள். ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். சிறுவயதிலிருந்தே இவர்களின் குறுக்குக் கேள்விகளுக்கு பதில் சொல்லி மீள முடியாது. மேஜிக், மாயாஜாலம் என்று ஆர்வம் காட்டுவார்கள். வெவ்வேறு யோசனைகள் குறுக்கிடுவதால், மதிப்பெண்கள் சற்று ஏற்றஇறக்கமாகத்தான் இருக்கும். 16 வயதிலிருந்து 31 வரை குரு தசை வரும்போது எல்லா விஷயங்களிலும் தீவிரமாக இருப்பார்கள். ராகு தசையில் நடந்த சிறுசிறு தவறுகள் இங்கு சரியாகும். மார்க் குறைந்து அசிங்கப்பட்டதெல்லாம் மாறும். குரு ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக இருப்பதால், கெட்ட நண்பர்களின் சகவாசம் வரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்லூரிப் பருவத்தில் சரியாகப் படித்து மேலே வருவார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும், இவர்களில் சிலர் வேலை வேண்டாம் என்று படிப்பைத் தொடர்வார்கள். வழக்கறிஞர், ஆசிரியர், ஆடிட்டர் என்று போனால் சிறப்பாக வருவார்கள். அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவையும் ஏற்றம் தரும்.

இரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்கிறார். ஏறக்குறைய 12 வயது வரை ராகு தசை நடைபெறும். 4 வயது வரை தோல் பாதிப்புகள் அவஸ்தைப்படுத்தும். பெரும்பாலும் விளையாட்டில்தான் ஆர்வம் காட்டுவார்கள். மகரச்சனி என்பதால் எதிலும் பரபரப்பு இருக்கும். எது செய்தாலும் நான்கு பேருக்கு உபயோகப்படும்படி செய்வார்கள். 13 வயதிலிருந்து 28 வரை குரு தசை நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ்கிராப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளங்கள், மண்ணியல், புவியியல் சம்பந்தமான படிப்புகள் சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, சரும நோய் துறைகளில் மிகச் சிறந்த நிபுணராக விளங்குவார்கள்.  

மூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். எனவே சமயோசித புத்தி அதிகமாக இருக்கும். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஓவியம், கீ போர்ட், இசை என்றுதான் பள்ளி வாழ்க்கையின்போது இறங்குவார்கள். படிப்பில் அவ்வளவு ஆவல் இருக்காது. 8 வயதிலிருந்து 23 வரை குரு தசை நடக்கும். ராசிநாதனுக்கு குரு பகைவராக இருந்தாலும், நல்லதுதான் செய்வார். ஏனெனில், கும்பச் சனிக்கு தனம், லாபாதிபதியாக குரு வருகிறார். இதனால் கல்லூரி வரை ஸ்காலர்ஷிப்பிலேயே படிப்பார்கள். பதக்கமும், பாராட்டும் பெறுவார்கள். சிறிய வயதிலேயே சட்டென்று பெரிய வேலை கிடைக்கும். ரயில்வே தேர்வு எழுதி செலக்ட் ஆவார்கள். 24 வயதிலிருந்து 42 வரை சனி தசை, யோக தசையாக மாறும். இந்தப் பாதத்தில் பிறந்த பலர் தொழிற்சாலை வைக்குமளவுக்கு பெரிய ஆளாவார்கள். இவர்களின் நட்பு வட்டத்தை மென்மையாக கண்காணித்தல் நல்லது. கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகள் சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது. சி.ஏ. தேர்வில் எளிதாக வெற்றி பெறுவார்கள்.   

ஒன்றாம் பாதத்திற்கும், 4ம் பாதத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். ஆனால் 4ம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். சுக்கிரன், ராகு, மீன குரு மூவரும் இணையும்போது வேகமும், விவேகமும் இருக்கும். 4 வயது வரை ராகு தசை நடக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். 5 வயதிலிருந்து 19 வரை குரு தசை வரும்போது கற்பூர புத்தியாக இருப்பார்கள். கவிதை, கட்டுரை என்று வகுப்பில் எல்லாவற்றுக்கும் கை தூக்குவார்கள். 20 வயதிலிருந்து 38 வரை சனி தசை நடக்கும்போது முதல் பாதி சறுக்கும்; அதாவது 30 வயது வரை தடுமாறுவார்கள். ‘‘கஷ்டப்பட்டு படிச்சோம். ஆனா, திருப்தியான வேலை கிடைக்கலையே’’ என மனம் வெதும்புவார்கள். மனதுக்குப் பிடித்த வேலையைத் தேடி அலைந்துவிட்டு கிடைத்த வேலையில் அமர்வார்கள். பத்தாம் வகுப்பு தாண்டும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி காதில் போட்டு வையுங்கள். நிர்வாகம் சார்ந்த படிப்புகள் சிறப்பு தரும். எஞ்சினியரிங்கில் ஐ.டி., கெமிக்கல் போன்றவை ஏற்றதாகும். மருத்துவத்தில் இரப்பை, சிறுநீரகம் தொடர்பான நிபுணராக விளங்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பூரண ஆதிக்கம் இருப்பதால் தத்துவம், உளவியல் படிக்கும்போது சமூகத்தில் நல்ல அடையாளம் கிடைக்கும். 
சுவாதியில் பிறந்தவர்கள் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள அம்மன்குடி அஷ்டபுஜ துர்க்கையை தரிசிக்க வேண்டும். மிகப்பழமையான ஆலயத்தில் தனி சந்நதியில் துர்க்கை அருள்பாலிக்கிறாள். சிம்ம வாகனத்தில் எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் இந்த தேவியின் பாதம் பணிந்தால் கல்வியில் சிறக்கலாம்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)