நயம்படபேசு

சென்ற வாரம் பல பொருளாதார மேதைகள் கவனிக்கத் தவறிய ஒரு செய்தி உண்டு. உலகில் மொத்தமே வாழும் 1 லட்சத்து 10ஆயிரம் பார்சிகளுக்கான ‘பாம்பே பார்சிகள் பஞ்சாயத்’ அமைப்பு, ‘மாதம் ரூ.90 ஆயிரத்துக்குக் கீழ் சம்பாதிக்கும் பார்சிகள் ஏழை’ என அறிவித்து இருக்கிறது. அப்படி வாழும் ஏழை (?) பார்சிகளுக்கு சலுகை திட்டத்தில் மும்பையில் வீடு தருகிறார்களாம்.
நமது தேசத்தின் திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியாவோ, ‘நகர்ப்புறத்தில் தினம் 28 ரூபாய் 65 பைசாவுக்கு மேல் சம்பாதிப்பவன், வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் பணக்காரன்’ என்கிறார். ஆக, வறுமைக்கோடு என்பது தொப்பையின் மடிப்பிலும் இருக்கலாம்; பசியால் வயிறு சிறுத்தவனின் சுருக்கங்களிலும் இருக்கலாம்.
இப்போ தினம் ரூ.28.65க்கு மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களை எப்படிக் கண்டறிவது... அவர்களிடம் இருக்கும் ‘அளவுக்கு’ அதிகமான பணத்தை என்ன செய்வது என்று பார்க்கலாம்!

*  மாதா, பிதா, குரு, பெட்ரோல், டீசல், தங்கம் என்றாகிவிட்ட சூழ்நிலையில் 400 மி.லி.க்கு மேல் பெட்ரோல் போடும் மர்ம நபர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினரை விட்டு சோதனை செய்யலாம்.

*  துணி துவைக்கவும், தேய்த்துக் குளிக்கவும் இரு வேறு சோப்புகளைப் பயன்படுத்துவோரை தேசத் துரோக வழக்கில் பிடித்து சிறையில் அடைக்கலாம்.

*  ஹோட்டல்களில் 15 ரூபாய் மதிப்புள்ள ரெண்டு தோசை சாப்பிடும் உல்லாச மனிதர்களை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யலாம்.

*  வருடம் ஒரு குவார்ட்டருக்கு மேல் குடிக்கும் குடிமகன்களை சாய்த்து, அவர்களின் கறுப்புப் பணம் எங்குள்ளதென டார்ச்சர் செய்யலாம்.

*  பொண்டாட்டிக்கு 50 கிராமுக்கு மேல் அல்வா வாங்கிப் போகும் கணவர்களை ஹவாலாவில் கைது செய்து திவாலாக்கலாம்.

*  கோயில் வாசல், சிக்னல் பிச்சைக்காரர்களிடம் தினம் வரும் வருமானத்தை கணக்கீடு போடலாம். ரூ.28.65க்கு மேல் வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கலாம்.

*  தினம் ஒரு வேளைக்கு மேல் சாப்பிடும் ஆசாமிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.

*  காதலிகளுக்கு கர்ச்சீப், கைக்குட்டை தவிர வேறு பரிசு தர முயற்சிப்பவர்களை கைது செய்து, ‘வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததா’ எனக் கண்டறியலாம்.

*  லிட்டர் ரூ.32க்கு விற்கும் பாலை, தினம் இரண்டு இருமல் மருந்து பாட்டில் மூடிக்கு மேல் குடிப்பவர்களை நாடு கடத்தலாம்.

*  வருடம் ஒரு பனியன், ஒரு ஜட்டிக்கு மேல் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து, தேவையற்ற பனியன் ஜட்டிகளை பறிமுதல் செய்யலாம்.

இதை விட முக்கியமானது... அளவுக்கு அதிகமாக வாக்காளர்கள் கவனிக்கப்படும் இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையமே புறக்கணித்து பணப் புழக்கத்தை தடுக்கலாம்.


சில இந்தியர்களுக்கு இருப்பது வயிறா, வெட் கிரைண்டரான்னே தெரியல... எப்போதும் எதையாவது அரைச்சுக்கிட்டே இருக்காங்க. இந்தியாவில் சாப்பாடு கிடைக்காம செத்தவங்களை விட, கண்டதை சாப்பிட்டு நோய் வந்து செத்தவங்கதான் அதிகம்.

போன வாரம் கறிக்கடையில, ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டுள்ள சிறு வயசு தம்பி ஒருத்தரு ஆறு நாட்டுக் கோழி வெட்டச் சொன் னாரு. ‘அடப்பாவி... என்ன குடும்பம்டா இது’ன்னு ஆச்சரியப்படுற நேரத்தில், ‘‘ஏன் தம்பி இவ்வளவு கம்மியா வாங்குறீங்க’’ன்னு வெடிகுண்டு போட்டாரு கடைக்காரரு. அந்த தம்பி சொன்ன பதில்ல என் உடம்புக்கு மட்டும் 8.2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் வந்திடுச்சு! பதில் இதுதான்... ‘‘போதும்ணே, வீட்ல எல்லோரும் ஊருக்குப் போயிருக்காங்க. எனக்கு மட்டும்தான் வாங்கறேன்...’’
பணமில்லாதவன் வயிறு நிறைக்க ஓடுவதும், பணக்காரன் வயிறு குறைக்க ஓடுவதுமே தற்கால சமூக நிகழ்வு. சினிமாக்களில் டூயட் காட்சிகள் எப்படி தவிர்க்க முடியாதவையோ, அதே போலத்தான் வாழ்க்கையில் ‘டயட்’ காட்சிகளும்! ‘வாயற்ற வாழ்வே நோயற்ற செல்வம்’. வாயைக் கட்டுப்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பதால், இதோ சில டயட் டிப்ஸ்...
*  ‘வாழத்தான் சாப்பிடுகிறோமே தவிர, சாப்பிடுவதற்காக வாழவில்லை’ என வலது கையில் பச்சை குத்திக்கொள்ளலாம்.

*  வாயால் சாப்பிடுவதைக் குறைத்து கண்ணால் சாப்பிட்டு திருப்தி அடையலாம்.

*  மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாலும், ‘சாப்பாடு போடட்டுமா?’ ‘இன்னொரு தோசை?’ எனும்போது மட்டும் தலையை இடமும் வலமுமாக அசைக்க வேண்டும்.

*  பொரியை அரிசியாய் பாவித்து சாம்பார், ரசம், தயிர் ஊற்றி சாப்பிட்டால், சாப்பிடும் அளவு ஆட்டோமேட்டிக்காய் குறையும்.

*  டிவி பார்க்கும்போது, கண்ணும் காதும் மட்டுமே திறந்திருக்க வேண்டும். தப்பித் தவறியும் வாயைத் திறக்கக் கூடாது.

*  சாப்பிட்டுவிட்டு வாக்கிங், ஜாக்கிங் போவதை விட வாக்கிங், ஜாக்கிங் போய்க்கொண்டே சாப்பிடுவது நல்லது.

*  வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தில் முப்பது நாட்கள் மட்டும் உண்ணாவிரதம் இருக்கலாம்.

*  ஒரு இட்லி அல்லது ஒரு தோசை சாப்பிட்டுப் பழகவேண்டும். சாப்பாட்டுக்கு முன்போ, பின்போ அல்ல... சாப்பாடே அதுதான்.

*  வீட்டில் இருக்கும் பெரிய கரண்டிகளை பேரீச்சம்பழத்துக்கு போட்டுவிட்டு, ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளால் சாதம், குழம்பு பரிமாறலாம்.

*  உசிலைமணி உடம்பில் உங்கள் தலையை ஒட்டி கிராபிக்ஸ் போட்டோ எடுத்து, வீட்டில் ஆங்காங்கே ஃபிளெக்ஸ் போர்டுகளாக மாட்டி அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால், பீதியில் பசியே எடுக்காது. 

*  வீடு கட்டும்போதே, சமையலறையை ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளிக் கட்டிவிட வேண்டும்.

*  ப்ரிட்ஜின் மேலே ‘மாமியார் வீடு’ என்னும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், அதைத் திறக்கவே மனசு வராது.

மனிதர்களின் பிரச்னையே வாய்தான். அந்த வாயை தேவையில்லாதபோது சாப்பிடவும், பேசவும் திறக்காமல் இருந்தாலே போதும்; உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்.
(பேசுவோம்)

கிச்சு கீச்சு

சில கல்யாணங்கள் ‘மேட் இன் ஹெவன்’, நீடித்து இருக்கின்றன; சில கல்யாணங்கள் ‘மேட் இன் சைனா’, ரொம்ப நாள் இருப்பதில்லை!

கடவுள்கள் பெரியவர்கள் என்பது, அவர்கள் பெட்ரோல் செலவில்லாத வாகனங்களை தேர்ந்தெடுத்ததிலிருந்தே
புரியும்!

முன்பெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதலித்தார்கள்; இன்று தங்கள் வாழ்க்கைத்
துணைக்குத் தெரியாமல் காதலிக்கிறார்கள்.
# நிகழ்கால நிஜம்!