பம்பர் லாபம் தரும் அலங்கார தொம்பை!





பெரிய பெரிய கலைக்கூடங்களிலும், கோயில்களிலும் தொம்பையைப் பார்த்திருப்பீர்கள். வாசல் நிலையையோ, பூஜைப் பகுதியையோ அலங்கரித்துக் கொண்டு அழகாகத் தொங்கும் கூம்பு வடிவ அலங்காரங்களுக்குத்தான் ‘தொம்பை’ என்று பெயர். ஒரு காலத்தில் வெல்வெட்டில், பிரமாண்ட அளவுகளில் செய்யப்பட்டு, பெரிய இடங்களை மட்டுமே அழகுபடுத்திக் கொண்டிருந்த தொம்பை, இன்று நம் வீட்டு வரவேற்பறையில் கூட சாத்தியம்!

கையைக் கடிக்காத பட்ஜெட்டில், எளிமையாக அலங்கார தொம்பைகள் செய்வதில் எக்ஸ்பர்ட் சென்னையைச் சேர்ந்த உஷா. ஆர்வமுள்ளோருக்குக் கற்றுக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார் அவர்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘சணல் ஃபேப்ரிக் (விருப்பமான கலர்களில்), லெதர் கம் (செருப்பு தைப்பவர்கள் உபயோகிக்கிற பசை), மைக்கா கண்ணாடி, அலங்கார மணிகள், குட்டிக்குட்டி வெண்கல மணிகள்...

சணல் ஃபேப்ரிக் ஒரு மீட்டர் 65 ரூபாய்க்குக் கிடைக்கும். ஒவ்வொரு கலரிலும் கால் மீட்டர் வாங்கிக் கொள்ளலாம். மற்ற பொருள்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடு 200 ரூபாய்.’’

என்ன சிறப்பு?
‘‘வெல்வெட்டிலும், வேறு மெட்டீரியல்களிலும் தயாரித்த இதை, இன்று சணல் மெட்டீரியலில் செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது சணல். மற்ற மெட்டீரியல்களை விட விலை குறைவானது. தையல் மெஷின் தேவையில்லை. கைகளால் வெட்டி, ஒட்ட வேண்டியதுதான்.

எந்த அளவில் வேண்டுமானாலும் செய்ய முடியும். பூஜையறையில் அலங்காரமாக வைப்பது முதல், நிலைப்படியில் அலங்காரமாகத் தொங்க விடுவது, தடுப்புக்கு உபயோகிப்பது என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொலுப்
படியில் வைத்தால் அழகாக
அசத்தும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கலைப் பொருள்கள் விற்பனையாகும் கடைகளிலும், கண்காட்சிகளிலும் பரபரப்பாக விற்பனையாகும். நவராத்திரி மாதிரியான பண்டிகை நாட்களில் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க மொத்த ஆர்டர் எடுக்கலாம். கிரகப்பிரவேசம், கல்யாணங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். ஒரு ஜோடி தொம்பையை 150 ரூபாய்க்கு விற்கலாம். 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சிக்குத் தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 350 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி