ஆட்டோ கட்டணத்துக்கு அதிரடி வழக்கு!





‘சரியான பப்ளிக் நியூசென்ஸ்!’
- ‘நான் ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்...’ என ‘பாட்ஷா’வில் சூப்பர்ஸ்டார் ரஜினி புகழ்பாடுவாரே, அந்த ஆட்டோக்காரர்களைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது பொதுநலன் கோரும் சமீபத்திய மனு ஒன்று. சென்னை உயர் நீதிமன்றமும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கைத் தொடுத்தது சில வழக்கறிஞர்கள்.

‘‘பிரசவத்துக்கு இலவசம் என்று அறிவிப்பு காட்டும் ஆட்டோக்கள் அவசரத்துக்கு மட்டும் அடித்துப் பிடுங்குகின்றன’’ என்கிறார்கள் பயணிப்பவர்கள். ‘‘அவர்கள் ஒருநாள் எங்கள் இடத்தில் உட்கார்ந்து பார்த்தால் நிலைமை தெரியும்’’ என்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். எது உண்மை?

‘‘வர்ற வருமானம் குடும்பம் நடத்தறதுக்கே போதாம இருக்கறப்ப, சொந்தமா குறைஞ்சபட்சம் ஒரு டூவீலர்கூட வாங்கறதுக்கு யோசிச்சுப் பார்க்க முடியாதவங்களோட பிரச்னை இது. அப்படிப்பட்டவங்கதான் இங்க மெஜாரிட்டியா இருக்காங்க. மாசத்துக்கு ரெண்டு முறை பெட்ரோல் விலை ஏறுனா, பைக் வாங்கற ஆசைதான் எப்படி வரும்? அதனால அந்த மக்களோட வாழ்க்கையில ‘ஆட்டோ’ங்கிறது தவிர்க்க முடியாததாகிப் போச்சு. நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்குப் போக அவங்களுக்கு அதுதான் ஒரே வழி. ஆட்டோ அறிமுகமானப்ப கட்டணம் வசூலிக்க கூடவே மீட்டரும் பொருத்தியிருந்தாங்க. மீட்டர் என்ன காட்டுதோ, அந்தப் பணத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்கலாம். ஆனா, ‘மீட்டருக்கு மேல போட்டுக் கொடுங்க’ன்னு அன்னிக்கே ஆரம்பிச்சாங்க. அன்னிக்காச்சும் கோரிக்கையா கேட்டாங்க. இன்னிக்கு ஆர்டர் போட்டு அதட்டிக் கேக்கறாங்க. மீட்டர் போடாம ஓட்டறவங்கதான் நிறையப் பேர். வாய்க்கு வந்த தொகையைக் கட்டணமா கேக்கறாங்க.

ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ, புதுசா வந்திருக்கிற டாடா மேஜிக்கோ... தமிழ்நாடு முழுக்க இன்னிக்கு இதுல பயணிக்கறவங்க, கட்டணமா கேக்கற காசைக் கொடுத்தாகணும். அரசு, தனியார் பேருந்துகளைப் போலவே இதுகளுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணம்னு ஒண்ணு இருக்கு. அரசாங்கம் நினைச்சா, அதைத்தான் வசூலிக்கணும்னு உத்தரவு போட்டு ஸ்ட்ரிக்டா நடைமுறைப்படுத்தலாம். இதை ஏன் செய்யறதில்லை?

‘3 சக்கரத்தோட 6 பேரோட பயணிக்கறதுதான் ஷேர் ஆட்டோ’ன்னு சட்டம் சொல்லுது. ஆனா சென்னையில ஷேர் ஆட்டோக்கள்ல 12 பேர் வரை ஏத்துறாங்க. நாலு சக்கரமுள்ள டாடா மேஜிக்கை டூரிஸ்ட் பர்மிட் வாங்கிட்டு ஓட்டுறாங்க. ஆட்டோக்கள் விஷயத்துல இதேமாதிரி இன்னும் ஏகப்பட்ட கோல்மால்கள். இதனால பாதிக்கப்படற சராசரி மனுஷங்கள்ல நாங்களும் இருக்கோம்ங்கிறதாலதான் இந்த விவகாரத்தைக் கையில எடுத்தோம். கட்டண விவகாரத்தை மட்டுமாச்சும் உடனடியா ஒழுங்குபடுத்தணும்னு கேட்டிருக்கோம்’’ என்கிறார்கள் வழக்குத் தொடர்ந்த முருகேசன் மற்றும் சத்தீஷ்.

‘தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரிய’ உறுப்பினரும், ஏ.ஐ.டி.யூசி. ஆட்டோ ஓட்டுநர் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமான சேஷ சயனத்திடம் இந்த வழக்கு குறித்துப் பேசினோம்.

‘‘நல்ல விஷயம்தான். கட்டணம் ஒழுங்குபடுத்தப்படணும்ங்கிறதுல யாருக்கும் ஆட்சேபணை இல்ல. அஞ்சு வருசத்துக்கு முன்னால ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயிச்சது அரசு. அதுக்குப் பிறகு இன்னிக்கு வரை அந்தக் கட்டணம்தான். இந்த அஞ்சு வருஷத்துல பெட்ரோல் விலை இருபது தடவைக்கு மேல ஏறிடுச்சு. இதாச்சும் பரவாயில்ல. 2007க்கு முன்னால கிட்டத்தட்ட 11 வருஷமா ஒரே கட்டணத்தை வச்சிருந்தது அரசு. ஏன், எதுக்குன்னு யார் கேட்டாங்க? லட்சங்கள், கோடிகள்ல வியாபாரம் நடத்தற லாரி உரிமையாளர்கள், ரேட்டை அவங்களே நிர்ணயிச்சுக்கிடறாங்க. அம்பதுக்கும் நூத்துக்கும் சவாரி போற ஆட்டோ தொழிலாளியால அப்படிப் பண்ண முடியலை. வேற என்ன செய்யறது? மக்கள்கிட்டத்தான் கேட்டு கெட்ட பேர் வாங்க வேண்டியிருக்கு. பெட்ரோல் விலைக்கேத்தபடி கட்டணத்தை அரசு நிர்ணயிச்சா, ஆட்டோக்காரர்களும் அதைவிட அஞ்சு பைசா அதிகமா வாங்க மாட்டாங்க. ஆனா அப்படி நடக்கலையே? இங்க நடக்கற கணக்கு எல்லாமே பெரிய வித்தியாசத்துல இருக்கு. உதாரணத்துக்குச் சொல்லணும்னா, சுமாரா 50 ஆயிரம் ஆட்டோக்கள் இருக்குற சென்னை நகரத்துல போலீஸ் அனுமதிக்கற ஸ்டாண்டுகளோட எண்ணிக்கை 350. மீதி வண்டிக்காரங்க கிடைக்கற இடத்துலதான் நிறுத்த வேண்டியிருக்கு. கேஸ்ல ஓட்டலாம்னா, அது ஃபில் பண்ண காத்திருக்கற நேரத்துக்கு அஞ்சு சவாரி போயிட்டு வந்துடலாம். கேஸ் நிரப்புமிடங்களும் அங்கு கிடைக்கிற கேஸ் அளவும் ரொம்ப கம்மி. பட்டியலிட்டா, ஆட்டோக்காரங்க பிரச்னையும் நீண்டுக்கிட்டேதான் போகுது’’ என்கிறார் சேஷ சயனம்.

வக்கீல்கள் பூனைக்கு மணி கட்டியிருப்பதில் மக்களுடன் ஆட்டோக்காரர்களுக்கும் மகிழ்ச்சிதானாம். ‘‘வர்ற வாடிக்கையாளர்கள்தான் எங்களுக்கு சாப்பாடு போடற கடவுள். அவங்ககிட்ட தினம் தினம் மல்லுக் கட்டிட்டிருக்கணும்னு எங்களுக்கு ஆசையா? நல்லதொரு தீர்வு கோர்ட் மூலமாச்சும் கிடைக்குதுன்னா சந்தோஷம்தான்’’ என்கிறார் ஆட்டோ டிரைவர் ஆனந்த்.
- அய்யனார் ராஜன்