எந்தப் படிப்புக்கு எதிர்கால வேல்யூ இருக்கு?





பள்ளி, கல்லூரிகளில் அப்ளிகேஷன் மேளா கன ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் வாழ்க்கைப்பயணம் எந்த ரூட்டில் என்பதை முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் பலரும் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சபட்ச வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்த ஐ.டி. துறை இன்று பெரும் தேக்கத்தில் இருக்கிறது. இப்போது சிறந்தது எனக் கருதப்படும் படிப்புகளுக்கு வருங்காலத்திலும் அதே ‘வேல்யூ’ இருக்குமா என்று சிந்தித்து முடிவெடுப்பது முக்கியம். இந்த சிந்தனைக்கு வழி காட்டத்தான் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ‘போதி’யை நாடினோம்.
இன்றைய நிலையில் நம் இளைஞர்களுக்காகக் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் என்னென்ன?

தமிழக மாணவர்கள் எந்தத் துறையில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்?
விளக்குகிறார் ‘போதி’ இயக்குனர் ராஜ்மோகன்...
‘‘இன்றைக்கு ‘வேலை இல்லை’ என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஆனால் ‘வேலைக்கு தகுதியானவர்களாக நம்மைத் தயார்படுத்தி வைத்திருக்கிறோமா’ என்று மாணவர்கள் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், ‘வரும் 2020ம் ஆண்டில் ஐந்து கோடி இளைஞர்களை இந்தியா வேலைக்குத் தயார்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது’ என்று அண்மையில் கருத்து சொல்லியிருக்கிறார். இதற்கு அர்த்தம்... ‘அரசாங்கத்தில் ஐந்து கோடி பேருக்கான வேலை இருக்கிறது’ என்பதுதான்.

மத்திய அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்த கூட்டு அமைப்பாக ‘நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனம் உள்ளது. வேலைவாய்ப்புகளுக்குப் பொருந்தும் அளவுக்கு இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்த நிறுவனம் உலக வங்கியிடம் பல கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளது. இதை வைத்து இந்திய இளைஞர்களின் கைத்தொழில் திறமைகளை மேம்படுத்த இருக்கிறார்கள். ஆக, ‘ஸ்கில்’ எனப்படும் தனித்திறமைகளை வளர்ப்பதுதான் எதிர்கால இந்தியாவின் இலக்கு. இந்தத் திறமைகளை வளர்த்தெடுக்கும் தொழிற் பயிற்சி நிறுவனங்களான தனியார் மற்றும் அரசு ஐடிஐகள் தமிழகத்தில் ஐந்நூறுக்கும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், இங்கே அந்த ஐடிஐகளுக்கோ, அவர்கள் தரும் பட்டயத்துக்கோ, அங்கு கற்றுக்கொள்ளும் கைத்தொழிலுக்கோ மரியாதை இல்லை!

இதற்கு ஐடிஐயின் கல்வி அமைப்பும் ஒரு காரணம். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அந்தப் பாடத்திட்டம் மாற்றம் பெறவில்லை. இதெல்லாம் மாறும்போது கைத்தொழில் கற்றுக்கொண்டவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உருவாகும். ஐடிஐ படிப்பு என்பது வெறும் ஃபேன் ரிப்பேர் செய்வதோ, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் செய்வதோ அல்ல. அந்தப் படிப்பு மேலும் அந்தத் துறையில் ஆர்வத்தைத் தூண்டி, புதிய மாற்றங்களைச் செய்வதற்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும். இதுவே கைத்தொழிலுக்கு மதிப்பை உருவாக்கும்.

கைத்தொழில் வேலைவாய்ப்புக்கான இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன்... அடுத்த பத்து ஆண்டுகளில் நமது விவசாயம் எல்லாம் கார்ப்பரேட்மயமாகப் போகிறது. மிகப்பெரும் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் விவசாயத்தில் முதலீடு செய்ய இருக்கின்றன. இந்த கார்ப்பரேட் முயற்சிகளின்போது, விவசாயம் குறித்த சகல பரிமாணங்களையும் படித்துத் தெரிந்தவர்களுக்குத்தான் தேவை ஏற்படும். ஆகவே, விவசாயத் துறை தொடர்பான படிப்புகள் இன்னும் சில வருடங்களில் பெரும் வாய்ப்பைக் கொடுக்கும்.

எஞ்சினியரிங்கைப் பொறுத்த அளவில் தமிழகத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. வருடத்தில் குறைந்தது மூன்று லட்சம் மாணவர்களாவது இவற்றில் படித்து வெளியேறுகிறார்கள். இதில் சுமார் முப்பது சதவீதத்தினரே சரியான வேலையில் அமர்கிறார்கள். இதற்குக் காரணம்... மெக்கானிக்கல், சிவில் என எது படித்திருந்தாலும் அவர்கள் ஐ.டி துறையில் மட்டும் முட்டி மோதுவதுதான்.

உற்பத்தி, உள் கட்டமைப்பு, ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிகல், எனர்ஜி தொடர்பான தொழில்களில் இன்றும் கூட வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமொபைலுக்கு சென்னை பிரபலம். இதில் சென்னைக்குள்ளேயே பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதிலெல்லாம் ஆரம்பச் சம்பளம் குறைவு என்பதால், எஞ்சினியரிங் பட்டதாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள். ஐ.டியை குறி வைத்து இலவு காத்த கிளியாகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பொறியியல் படிப்புகள் எல்லாம் வெறும் படிப்புகளாக மட்டுமே இருக்கின்றன. இதனால்தான் பல பொறியியல் பட்டதாரிகள் படிப்புக்கு சம்பந்தமில்லாத பி.பி.ஓ. போன்றவற்றில் வேலை செய்கிறார்கள். 


இன்று சில பிரபல கலைக் கல்லூரிகள் பி.காம். படிப்புக்கு கட் ஆஃப் மதிப்பெண் நூற்றுக்கு தொண்ணூற்று எட்டு என்று அறிவித்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கான கட் ஆஃப் அளவுக்கு பி.காம். கட் ஆஃப் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், வணிக படிப்புகளுக்கான மதிப்பு அதிகரித்துள்ளதே! பி.காம். படித்தால் அடுத்தது எம்.பி.ஏ. படிக்கலாம். பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ், சிஏ, காஸ்ட் அக்கவுன்ட்ஸ் என்று தொடர்ந்து படிப்பின் எல்லையை விரிவுபடுத்தலாம். இந்த உயர்கல்வி சிறப்பான வேலைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது.

அதேபோல பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தால் ஆங்கிலம் அவசியமாகத் தேவைப்படும் ஊடகம், சட்டம், வணிகத்துறை, ஆசிரியர் தொழில் என்று ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வரும் 2020ல் ஐம்பது லட்சம் ஆங்கில ஆசிரியர்கள் தேவைப் படலாம் என்றும் சொல்லப்படுகிறது!’’ என்கிற ராஜ்மோகன், ‘‘மொத்தத்தில், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், திறமையை சரியான முறையில் வளர்த்துக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உறுதி’’ என்கிறார்!

கை கொடுக்கிறது கிராம வங்கி!

இந்தியா முழுவதும் சுமார் 82 கிராம வங்கிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் சேலம் பல்லவன் கிராம வங்கியும், விருதுநகர் பாண்டியன் வங்கியும் இதில் அடக்கம். இதுவரை இந்த கிராம வங்கிகள் தங்களுக்கான பணியாளர்களை, தாங்களே தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்து வந்தன. ஆனால், இனி இந்திய அளவில் பொது வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பே இவற்றுக்கான பணியாளர்களையும் தேர்ந்தெடுக்க இருக்கிறது. இதற்காக அண்மையில் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐபிபிஎஸ்.

இதுபற்றி, சென்னை சக்தி ஐ.ஏ.எஸ். அகாடமியின் பாலாஜியிடம் கருத்து கேட்டோம்.

‘‘இதுவரை வங்கி எழுத்தர் பணிக்கு பிளஸ் 2 தகுதியே போதுமானதாக இருந்தது. ஆனால், இதில் எழுத்தர் மற்றும் ஆபீஸர் என இரண்டு வேலைகளுக்குமே டிகிரியை தகுதியாகக் கேட்டிருக்கிறார்கள். கிராம வங்கிகளில் திறமையானவர்களை அமர்த்துவதற்காக டிகிரியைக் கேட்டிருக்கலாம். ஆனால், இதுதான் பொதுவங்கித் தேர்வுக்கும் இனி பின்பற்றப்படுமா என்ற கேள்வியையும் குழப்பத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற வங்கிகளில் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. கிராம வங்கிகளில் கூட மற்ற மாநில வங்கிகளில் விண்ணப்பிக்க முடியாது. பொதுத் துறை வங்கிகளைவிட  சம்பளம் குறைவு என்றாலும், கிராம வங்கி வேலையும் சுகமானதுதான்’’ என்றார் அவர்.

இந்தத் தேர்வு நடைபெறவிருக்கும் தேதி, 2.9.2012. விண்ணப்பிக்க கடைசி தேதி, 25.6.2012. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு:  www.ibps.in.

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்