6 முகமே ஆறு...





இங்கே பிச்சைக்காரர் வேடத்தில் இருப்பவரின் தோற்றத்தை வைத்து, அதை ஏற்றிருப்பவர் எந்த ஹீரோ என்று கேட்டு ஒரு கோடி ரூபாய் கூட பந்தயம் கட்டலாம். சத்தியமாக எவராலும் கண்டுபிடிக்க முடியாது. அடுத்தடுத்த புகைப்படங்களை வைத்து மட்டுமே அது ஷாம்தான் என்கிற முடிவுக்கு வர முடியும். இத்தனை பகீரத முயற்சி செய்து ‘ஆறு’முகங்கள் காட்டி ஷாம் நடித்திருப்பது மீடியா இன்ஃபினிட் தயாரிக்கும் ‘6’ படத்துக்காக.

‘‘தலைப்பை நியாயப்படுத்தத்தான் இப்படி ‘ஆறுமுகம்’ ஆனீங்களா..?’’ என்றால் அவசரமாக மறுக்கும் ஷாம், அவரே தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்த இந்தப் படம் பற்றி விவரித்தார்.
‘‘நல்ல படங்களைப் பார்க்கும்போதெல்லாம், ‘அடடா... இந்தப் படத்துல நாம நடிக்காம போனோமே?’ன்னு ஒரு வருத்தம் வரும். ஆனா அப்படிப்பட்ட வாய்ப்பு நமக்கு அமையணுமே! தொடக்கத்துல ஜீவா நல்ல அறிமுகம் தந்தார். அப்படியே லவ்வர் பாயா வளர்ந்துக்கிட்டிருந்த எனக்கு தெலுங்கு ‘கிக்’, இன்னொரு முரட்டு முகத்தைத் தந்து, ‘ஷாமால இப்படியும் நடிக்கமுடியும்’ங்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. இதை இவன் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்தா நல்ல கேரக்டர்கள் நம்மைத் தேடி வரும்ங்கிற சூட்சுமம் அதுல புரிந்தது.

அந்த நேரத்துல என் திறமை மேல நம்பிக்கை வச்சு வி.இசட்.துரை இந்தப் படக் கதையைச் சொன்னார். அவர் சொன்னதை சொன்னது போலவே எடுக்க ஒரு நல்ல தயாரிப்பாளரோட அவசியம் புரிஞ்சு, நானே அதைக் கையில எடுத்தேன். துணிஞ்சவனுக்கு துக்கமில்லையே..? படம் ஆரம்பிச்சது தெரியலை... இப்ப முடிவுக் கட்டத்துக்கு வந்து நிக்குது. படம் முடியற வரை யாரும் படம் பற்றியோ, இந்த கெட்டப்புகள் பற்றியோ மூச்சுக் காட்டக்கூடாதுன்னு முடிவுல இருந்தோம். இது உங்களுக்கு மட்டுமேயான எக்ஸ்க்ளூசிவ் படங்கள்...’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘ரொமான்டிக் த்ரில்லர் வித் ஆக்ஷனான படத்துல நான் ஒரு விஷயத்தைப் படம் முழுதும் தேடிக்கிட்டிருப்பேன். அது என்னங்கிறதுதான் படத்தோட உயிர் நாடியே. ஒரு மனிதனோட மூணு நிலைகள்ல பயணப்படற கதையானதால முதல்ல மூணு கெட்டப்கள் மட்டுமே முடிவு பண்ணியிருந்தோம். ஆனா 6 வருஷம், 6 மாதம், 6 நகரங்கள் கதைல முக்கியத்துவம் பெறும். அதுக்காகத்தான் தலைப்பை ‘6’ன்னு வச்சோம். ஆனா ஸ்கிரிப்ட் முழுமையா உருவானப்போ கெட்டப்களும் எதிர்பாராம ஆறு விதமா அமைஞ்சு போச்சு. இதுவும் ஒரு பொருத்தமா இருக்கட்டும்னு அதையும் ‘ஆறு’ லிஸ்ட்ல சேர்த்தோம்.

மும்பை, கோவா, அகமதாபாத், கான்பூர், லக்னோ, கொல்கத்தாங்கிற ஆறு நகரங்களோட நகரி, போபால்லயும் ஷூட் நடந்தது. துரையோட கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்க ஸ்கிரிப்ட்ல, எனக்கு அர்ச்சனா, பூனம் கவுர்னு ரெண்டு ஹீரோயின்கள். மலையாள அனில் முரளி முக்கிய வில்லனாக, பெரம்பூர் மாட்டிறைச்சிக் கூடத்துல ரத்த வாடையோட எடுத்த காட்சிகள் மறக்கவே முடியாதது.

இதுவரை பார்த்த அத்தனை டெக்னீஷியன்களும் பாராட்டிய அம்சம், அந்தப் பிச்சைக்காரர் கெட்டப்தான். அது வித்தியாசப்பட்ட முக்கிய காரணம் கண்களுக்குக் கீழே ரெண்டு பையைப் போல தொங்கிக்கிட்டிருக்கிற சதைதான். ‘மேக்கப் பிரமாதம்’னோ, ‘இதை எப்படிச் செய்தீங்க..?’ன்னோதான் பார்த்த ஒவ்வொருத்தரும் கேட்டாங்க. எல்லோருக்கும் சொன்ன ஒரே விஷயம், ‘அது மேக்கப் இல்லை’ங் கிறதுதான். ஒரு சமயம் நான் தொடர்ச்சியா மூணு, நாலு நாள் தூங்காம இருந்தப்ப இப்படி கண்களுக்குக் கீழே தொங்கலா வந்து நின்னது. ‘எல்லோருக்கும் இப்படி ஆகாது. இது உங்களுக்கேயான ஸ்பெஷல்’னு இதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் சொன்னார். அதை இந்த கெட்டப்புக்காக முயற்சி செய்து, ஒரு வாரம் தூக்கமில்லாம இருந்து உருவாக்கினேன்.
இந்த ஆறு முகங்கள் எனக்கு இன்னும் வித்தியாசமான நூறு முகங்கள்ல வெளிப்படும் சாத்தியத்தைத் தரும்னு உறுதியா நம்பறேன்..!’’
- வேணுஜி