நானும் சோனாவும் மல்லுக்கட்டினோமா?



ஜாலி பிரேம்ஜி அமரன்

வோல்டேஜ் ஃப்ளக்சுவேஷனால் எங்கேனும் குண்டு பல்ப் விட்டு விட்டு எரிந்தால் கூட ‘மச்சி... ஓப்பன் தி பாட்டில்’ என்று பார்ட்டி மூடுக்கு வந்து விடுகிறாராம் பிரேம்ஜி. இரவெல்லாம் டிஸ்கொதே, பார்ட்டி என்று அலப்பறை பண்ணிவிட்டு, பால் பாக்கெட் போடும் நேரத்தில்தான் பார்ட்டி வீட்டுக்கு வந்து படுப்பதாகக் கேள்வி...

‘‘இன்ட்ரோவை கன்ட்ரோல் பண்ணுங்க பாஸ்! பொண்ணு பார்த்திட்டிருக்காங்க’’ என்று விஸ்கி போடாமல் ஹஸ்கி வாய்ஸில் கெஞ்சியவரிடம் துவங்கியது ஒரு மனம் திறந்த பேட்டி...

‘‘உண்மையைச் சொல்லுங்க... கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?’’
‘‘புதன், வெள்ளி, சனிக்கிழமைகள்ல டிஸ்கொதேவுலதான் இருப்பேன். நல்லா கேட்டுக்கோங்க, வீட்டுல சொல்லிட்டுத்தான் போறேன். வைபவ், விஜய் வசந்த், இன்னும் சில பார்ட்டி ஃபிரண்ட்ஸ் வருவாங்க. சென்னையில இருக்குற அழகழகான பொண்ணுங்கல்லாம் அட்டெண்டன்ஸ் கொடுப்பாங்க. கொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் பாட்டுன்னு போகும். பேச்சுலரா இருக்கற வரைக்கும்தான் இப்படி! அதுக்குப் பிறகு அந்தப் பக்கமே திரும்பக் கூடாதுன்னு வச்சிருக்கேன். இப்பவும் ஷூட்டிங் இல்லாத நாள்லதான் இந்த ஷெட்யூல். ஷூட்டிங் இருந்தா, ஐயா பங்ச்சுவாலிட்டியில இஞ்ச் மாறாதவன். ஃப்ரீ டைம் கிடைச்சா கூட,

இங்கிலீஷ் காமெடிப் படங்கள்தான் பார்ப்பேன். அதுல இருந்து ஏதாச்சும் சுடலாமில்லையா! அப்படியே கொஞ்ச நேரம் ப்ளே ஸ்டேஷன் விளையாட்டும் போகும். ஆனா, மறுநாள் ஷூட்டிங்னா பத்து மணிக்கெல்லாம் பாதி தூக்கத்துலயாச்சும் வந்து நின்னுடுவேன்.’’


‘‘யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட் பிரபுன்னு உங்க அண்ணன்கள் பிசியா இருக்காங்க... நீங்க விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கற மாதிரி தெரியுதே?’’
‘‘எப்பவும் நான் அப்படித்தான். அப்பாவை மாதிரியே எனக்கும் ஆரம்பத்துல மியூசிக்தான் பிடிச்சது. லண்டன் போய் ரெண்டு வருஷம் மியூசிக் படிச்சிட்டு வந்தேன். வந்ததுமே யுவன்கிட்ட கீ போர்டு வாசிக்க சேர்ந்துட்டேன். மியூசிஷியன்னா பல்லைக் கடிச்சுக்கிட்டு பாதி வார்த்தைதான் பேசணுமா என்ன? நான் செம்ம ஜாலி டைப். ‘மன்மதன்’ படத்துல வொர்க் பண்ணும்போது என்னோட இந்தக் கேரக்டரைப் பார்த்துட்டுதான் சிம்பு ‘உங்கிட்ட ஏதோ இருக்கு’ன்னார். என்னத்தைக் கண்டாரோ? அப்படியே மறந்துடாம ‘வல்லவன்’ல தலை காட்டவும் வச்சிட்டார். அப்புறம் ரெண்டு, மூணு படங்கள் பண்ணினேன். ஆனாலும் ‘சென்னை 28’தான் எனக்கு பிரேக். என்னை எப்படி ஸ்கிரீன்ல காமிச்சா மக்கள் ஏத்துப்பாங்கனு எங்க அண்ணன்தான் கரெக்டா கணிச்சிருக்கார். விளையாட்டுப் பிள்ளையாவே நடிச்சு பேர் வாங்கிட்டேன். திடீர்னு மாத்திக்க முடியுமா?’’

‘‘அண்ணன் படத்துல மட்டுமே நடிச்சிட்டிருந்தா எப்படி?’’
‘‘இதே டயலாக்கை சொல்லித்தான் இப்ப ‘சேட்டை’ நடிக்கச் சொன்னார் அண்ணன். எனக்கும் அவர் படத்துல மட்டும்தான் நடிக்கணும்ங்கிற அஜெண்டால்லாம் இல்ல. என்ன பண்றது? வேற டைரக்டர்கள் படங்கள்ல என் கேரக்டர் சரியில்லையா... இல்ல, என் நடிப்பு போதாதாங்கிறது தெரியலையே? ஆர்யா, சந்தானத்தோட பண்ணப் போற ‘சேட்டை’யாச்சும் அந்தக் குறையை நிவர்த்தி செய்யுதான்னு பார்க்கலாம்.’’


‘‘என்ன கொடுமை சார் இது’, ‘சரோஜா சாமான் நிக்காலோ’ன்னு மத்த படங்களோட டயலாக்கை துணைக்கு கூப்பிடுறீங்களே... ஏன்?’’
‘‘எவ்வளவோ செஞ்சிருக்கோம்... இதைச் செய்ய மாட்டோமா’ன்னு ‘அழகிய தமிழ்மகன்’ல விஜய் பேசின டயலாக்கை ‘சரோஜா’ல பேசினேன். விஜய் அதுக்கு ரொம்பவே சந்தோஷப்பட்டார். இப்ப ஆர்யா கூட, ‘நான் கடவுள்’ல வர்ற ஒரு டயலாக்கை எங்கியாச்சும் எடுத்து விடச் சொல்லியிருக்கார். ஜனங்க ரசிக்கிற எதையும் பண்றதுக்கு எதுக்கு யோசிக்கணும்?’’
‘‘பொண்ணு பார்த்திருக்காங்களாமே..?’’

‘‘அந்த பிராசஸ் பல நாளா ஓடிட்டுதான் இருக்கு. கன்ஃபர்ம் ஆயிடுச்சாங்கிறதை வீட்லதான் கேக்கணும். அப்பா, அம்மா பார்த்து யாரைக் கொண்டு வந்து நிறுத்துறாங்களோ, அவங்க கூட வாழ்க்கையோட அடுத்த எபிசோடை ஆரம்பிக்க வேண்டியதுதான்!’’
‘‘ஹீரோவா நடிக்கறதா ஒரு அறிவிப்பு வந்துச்சே...’’

‘‘ஆமா. படத்துக்கு பேர், ‘2010 பாக்யராஜ்’. டைரக்டர் புதுமுகம். தயாரிப்பாளர் சோனா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல இன்னொரு பட வேலை குறுக்கிட்டதால இப்போதைக்கு ஸ்டாப். சீக்கிரத்துலயே தொடரும்னு நினைக்கிறேன்.’’
‘‘சோனான்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. அந்த பார்ட்டி விவகாரம்...’’


‘‘ஏதோ நானும் அவங்களும் மல்லுக்கட்டின மாதிரி கேக்கறீங்க. அது முழுக்க சரண் சாரும் அவங்களும் சம்பந்தப்பட்ட விஷயம். அதுக்குள்ள போனா, என் பேட்டியை விட்டுட்டு அதைக் கவர் ஸ்டோரியா போட்டுடுவீங்க. அதனால இத்தோட நிறுத்திக்கலாம்’’ - மனது நினைத்து முடிப்பதற்குள் வார்த்தைகள் வெளியில் வந்து விழுகின்றன.
கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி வெள்ளந்தியா இருக்காதீங்க பாஸ்!
- அய்யனார் ராஜன்
படங்கள்: ஜெகன்